Thursday, March 3, 2016

விவசாயிகளின் பார்வைக்கு (குறிப்பாக கோவில்பட்டி வட்டார விவசாயிகள்)

கடந்த 21.2.2016 அன்று என்னுடைய முகநூலிலும், வலைதளத்திலும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா விவசாய போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் 1970லிருந்து 80 வரை பலியான 40 விவசாயிகளின் வாரிசுகளுக்கு நஷ்ட ஈடாக ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் அரசு வழங்கும் என்று அறிவித்தார். தமிழகத்தில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக விவசாய போராட்டத்தின்போது போராடிய விவசாயிகள் 70 பேர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் தங்களுடைய இன்னுயிரை இழந்தனர். ஜெயலலிதா ஆட்சியில் 1992 இறுதியில் கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டத்தின்போது காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்த ஜோசப் இருதய ரெட்டியார், எத்திராஜு நாயக்கர் ஆகியோர் குடும்பங்களுக்கு  நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று என்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தேன். 1992 கால கட்டங்களில் இந்த இருவரின் மீது நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருதய ஜோசப் ரெட்டியாருடைய புதைத்த உடலை திரும்பவும் தோண்டி மறு பிரேத பரிசோதனை செய்யவும் ஆணையைப் பெற்றேன். இது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சுப்பிரமணியம் தலைமையில் அமைந்த நீதி விசாரணை கமிஷன் முன்பும் ஆஜரானேன். அந்தப் பதிவு இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து விடுபட்ட மறைந்த ஜோசப் இருதய ரெட்டியார், எத்திராஜு நாயக்கர் ஆகியோர் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் என்ற அடிப்படையில் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு தாக்கீது அனுப்பினேன். அவ்வாறு மேல் நடவடிக்கை இல்லை என்றால் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்போகிறேன் என்றும் அந்த தாக்கீதில் குறிப்பிட்டிருந்தேன்.

இதற்கிடையில் இன்றைக்கு தமிழக அரசு குறிப்பிட்ட ஜோசப் இருதய ரெட்டியார், எத்திராஜு நாயக்கர் ஆகியோர் குடும்பங்களுக்கு  நஷ்ட ஈடு வழங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதில் அனைத்து விவசாயிகளின் முயற்சியும் அடங்கியுள்ளது.


நாராயணசாமி நாயுடு-க்கு மணி மண்டபம் - தாமதமான அறிவிப்பு
---------------------------------------------------------------------------------------------------------------
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2016/02/blog-post_21.html

தொடர்ந்து விவசாயிகள் பிரச்சினைகள், கோவில்பட்டியில் மறைந்த விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவச் சிலை அமைப்பது, இதுவரை துப்பாக்கிச் சூட்டில் பலியான 70 அப்பாவி விவசாயிகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று எனது வலைதளத்திலும், முகநூலிலும், ட்விட்டரிலும் எழுதி வந்தேன். தினமணி போன்ற நாளேடுகளிலும் இது குறித்து பத்திகளும் நீண்ட வருடங்களாக பதிவு செய்து வருகின்றேன்.  இந்த செய்திகள் உளவுத் துறை மூலமாக அரசின் கவனத்துக்கு வந்ததாக என்னுடன் தொடர்பில் உள்ள அரசு அதிகாரிகள் என்னிடம் சில நிமிடங்களுக்கு முன் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் 40 பேருக்கு மேல் இறந்துள்ளனர். 1992 கால கட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோவில்பட்டி அருகே உள்ள வெங்கடசலபுரம் கிராமத்தைச் சார்ந்த எத்திராஜ் நாயக்கர், அகிலாண்டபுரத்தை சேர்ந்த ஜோசப் இருதய ரெட்டியார், கோவில்பட்டி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் லட்சுமி ஆலை அருகே சாகடிக்கப்பட்டனர். முதலில் இவர்கள் நோய்வாய்ப் பட்டு இறந்தார்கள் என்று அரசு இவர்களின் தியாக மரணத்தை கொச்சைப்படுத்தியது.  அப்போது வைகோ தி.மு.க.வில் நாடாளுமன்ற உறுப்பினர். இதில் அவர் ஆற்றிய பணியும் முக்கியமானது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் இருதய ரெட்டியாரின் உடலைத் தோண்டி மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று நான் ரிட் மனுவை தாக்கல் செய்தேன்.  அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கே.எஸ். பக்தவத்சலம், இருதய ஜோசப் ரெட்டியாருடைய உடலை தோண்டி மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.  அது மட்டுமல்லாமல் இந்த துப்பாக்கிச் சூடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சுப்பிரமணியம் தலைமையில் கோவில்பட்டி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையிலும் ஆஜரானேன். இப்படியான இந்த இருவருடைய துப்பாக்கிச் சூடு மரணத்தை நேற்றைய சட்டப்பேரவையில் ஜெயலலிதா வெளியிட்ட 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இது முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது.  31/12/1980 என்னுடைய கிராமம் குருஞ்சாக்குளத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது 6 பேர் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்தனர். அச்சமயம் எம்.ஜி.ஆர்.  மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். இதில் சாத்தூரப்ப நாயக்கர், வெங்கடசாமி நாயக்கர், வரதராஜன், வெங்கடசாமி, ரவிச்சந்திரன், முரளி என்போர் அன்றைய அ.தி.மு.க. அரசால் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். இது குறித்து சாதிக் பாட்ஷா, முரசொலி மாறன், வைகோ, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் முறையிட்டனர்.

நாராயணசாமி நாயுடு சிலையை குறித்து 1984ல் பொதுத் தேர்தலின்போது கோவில்பட்டியில் அவர் மறைந்த நகரில் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இனாம் மணியாச்சி விளக்கில் அமைக்க திட்டமிட்டு பணிகளும் நடந்து வருகின்றன. இதையெல்லாம் தொடர்ந்து என் வலைதளங்களை கவனித்தவர்களுக்குத் தெரியும். நாராயணசாமி நாயுடுவுக்கு எப்போதோ நினைவு மண்டபம் கட்டியிருக்க வேண்டும். இது காலதாமதம்.

1. விவசாயத்திற்கென்று மத்திய அரசிலும், மாநில அரசிலும் தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.

2.  நெல் கரும்பு போன்ற பயிர்களுக்கு உற்பத்தி செலவை விட 50 சதவீதம் விலை கிடைத்தால்தான் கட்டுபடியாகும்.

3. பல மாநிலங்களில் சட்ட முன் வடிவாக வந்துள்ள இயற்கை விவசாயத்தை தமிழக அரசும் சட்ட வடிவமாக்க வேண்டும். இதற்கு உரிய மானியங்களும் வழங்கப்பட வேண்டும்.

4. எண்ணற்ற பொறியியல் கல்லூரிகள் அமைவது போல குறிப்பிடத்தக்க அளவில் விவசாயம், கால்நடை, மீன்வள கல்லூரிகளும் கூடுதலாக்கவேண்டும்.

5. வளர்ச்சி, முன்னேற்றம், புதிய பொருளாதார திட்டத்தினால் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும். தாராளமயமாக்கல் என்ற கொள்கைக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் விவசாயத்தை பாழ்படுத்துகின்ற நில ஆர்ஜித முறைகளை முற்றிலும் கைவிட வேண்டும்.

6. நீர் ஆதாரங்களை பெருக்கி, நீர் நிலைகளை தூர் வாற வேண்டும். ஆந்திரா, கேரளாவில் ஒரு பிடி மணல் கூட எடுக்க முடியாதபடி சட்டங்கள் இருப்பது போல, அம்மாதிரி சட்டங்கள் தமிழகத்திலும் வரவேண்டும்.

7. அண்டை மாநிலங்களில் உள்ள காவிரி, முல்லை பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், நெய்யாறு, பாலாறு போன்ற நதிநீர் சிக்கல்களுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்.

8. நீர் பாசனத்தை பராமரிக்கும் வகையில் தமிழக அரசு நீர்வளத்துறை என்ற அமைச்சகத்தை தனியாக அமைக்கவேண்டும்.

9. அண்டை மாநிலங்களில் உள்ள நீர் தாவாக்கள் உள்ள அணைகளுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வழங்க வேண்டும். இதனால் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் அண்டை மாநிலத்தின் நெருக்கடி இல்லாமல் தங்கள் பணியை சுதந்திரமாக செய்ய முடியும்.

10. தாட்கோ, சாலை போக்குவரத்து ஆணையம் போல விவசாயிகளுக்கு கடன் வழங்க தனி நிதி ஆணையத்தை மாநில அரசு உருவாக்க வேண்டும்.

11. நெல் கொள்முதலில் உள்ள குளறுபடிகளை நீக்கி அதற்கான ஊக்கத் தொகையை அளித்து ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்சமாக ரூ.500 தரவேண்டும்.

12. தமிழக நதிகளை இணைக்க வேண்டும்.

13. விவசாயத்திற்கு தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும்.

14. கெயில், மீத்தேன், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் விவசாயத்தை அழித்துவிடும். இவற்றை கைவிட வேண்டும்.

15. பாரம்பரிய விதைகளை கட்டிகாத்து பாதுகாக்க வேண்டும்.

16. பொருளாதார நிபுணர் ஜே.சி. குமரப்பாவின் தற்சார்பு பசுமை கிராமங்களை உருவாக்க வேண்டும். கிராமிய பொருளாதாரத்தை நவீன பொருளாதாரத்தோடு இணைத்து நிதி அறிக்கையில் நிதிகளை விவசாயத்திற்கும், கிராம மேம்பாட்டுக்கும் வழங்க வேண்டும்.

17. தேங்காய், இரப்பர், முந்திரி பருப்பு போன்ற பயிர்களுக்கு பக்குவப்படுத்தும் ஆலைகளை அந்தந்த வட்டாரங்களில் நிறுவ வேண்டும்.

18. அத்திக்கடவு - அவினாசி திட்டம் வெறும் அறிவிப்பாக இல்லாமல் உடனே நடைமுறைக்கு வரவேண்டும்.

19. வனங்களில் இருந்து வரும் விலங்குகளால் விவசாயப் பயிர்கள் பாதிப்படையாமல் கவனிக்கவேண்டும்.

20. விவசாயத்தோடு கால்நடைகள், கோழி வளர்ப்பு போன்றவற்றை பெருக்கக் கூடிய வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும்.

இப்படியான விவசாயிகள் பல கோரிக்கைகளை கவனத்தோடு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைளை, அவசரமாக, அவசியமாக எடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.

விவசாயிகள் போராட்டம் அமைப்பு ரீதியாக 1966ல் நாராயணசாமி நாயுடு, வேலப்பனும் கோவை வட்டாரத்தில் முன்னெடுத்தனர். தொடர்ந்து அவர் மறையும் வரை விவசாயிகள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் பாடுபட்ட ஆளுமை ஆவார். இது குறித்து வலைதளத்தில் இதற்கு முன்னால் எழுதிய பதிவுகளையும் இங்கே மீண்டும் குறிப்பிட்டுள்ளேன்.

http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2016/02/blog-post.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2016/02/blog-post_59.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2016/01/farmers-suicide.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/10/blog-post_68.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/10/blog-post_43.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/08/farmer-suicide.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/08/agriculture.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/08/31-08-2015-farmers-suicide-list-in.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/07/blog-post_11.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/06/agriculturistsuicide.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/05/statueforagriculturalmovementleader.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/05/5-land-acquisition-bill-5.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/04/statue-for-agricultural-movement-leader.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/03/agriculturist-agitation-in-tamil-nadu.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2016/02/agri-folk-leader-c-narayanasamy-naidu.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/02/formers-suicide.html


1 comment:

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...