Wednesday, March 23, 2016

Farmers suicide

விவசாயிகளின் கண்ணீர்
=======================

மூன்று வகையான சாகுபடி கடன்கள் வங்கிகளில் கொடுக்கப்படுகின்றன. அவை நேரடி விவசாயக் கடன், குறுகிய கால கடன் மற்றும் முதலீட்டு கடன் ஆகும். பாலன் வாங்கியது முதலீட்டு கடன்தான். அரியலூர் விவசாயி அழகர் வாங்கியதும் முதலீட்டுக் கடன் வகையைச் சேர்ந்ததுதான்.

விவசாயிகளின் கடன் குறித்த ஆய்வினை TATA institute of Social Science அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் ராம்குமார் நடத்தினார். ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரையில் கடன் பெறுவேர் எண்ணிக்கையில் இப்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மாறாக 10 கோடிக்கு மேல் கடன் பெறுவோர் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் முப்பெரும் கோடீஸ்வரன் முகேஷ் அம்பானி காய்கறிகளை வைக்க ஒரு குளிர்பதன கிடங்குக்கு என்ற கடன் கேட்கிறார். அவருக்கு 4 சதவீத வட்டிக்கு கடன் கிடைக்கிறது.

காய்கறிகளை வியர்வை சிந்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளக்கு அப்படி கடன் கொடுப்பதில்லை.

ஒரு மெரிசிடஸ் பென்ஸ் சொகுசு காருக்கு 7 சதவீத வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. உழவு டிராக்டருக்கோ 14 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது.

விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவது. விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைப்பது இவைதான் மத்திய அரசின் கொள்கை. இதனால் ஒரு நாளைக்கு 2035 விவசாயிகள், விவசாயத்திலிருந்து வெளியேறுகின்றனர். 

ஜப்தி செய்வது, அவமானப்படுத்துவது, தற்கொலைக்கு தூண்டுவது என்று விவசாயிகள் விவசாயத்திலிருந்து விரட்டப்படுகின்றனர். 1995 முதல் 2010 கால இடைவெளியில் 2,84,694 #விவசாயிகள் #தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது சராசரியாக 32 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை என்ற பெயரில் மடிந்து போகிறார்.

தற்கொலை செய்துகொண்ட 850 குடும்பங்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, தற்கொலைக்கான காரணம் கடன், கடன், கடன் சுமைதான் என்ற தெரியவந்துள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளுக்கு பெரும்பாலும் கடன் வழங்குவதில்லை. தனியார் நிதி நிறுவனங்களோ கொள்ளை வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. மணி வட்டி, மீட்டர் வட்டி என்று விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. அரசன் திருதராஷ்டிரன் துரியோதனன் பக்கம் இருந்தது போல அரசாங்கம் தனியார் கடன் நிறுவனங்கள் பக்கமே நிற்கிறது.

விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையம் இரு பரிந்துரைகளை செய்திருந்தது. குறைந்த வட்டியில் கடன். இயற்கை சீற்றம் ஏற்பட்ட பகுதியில் வட்டி இல்லா கடன் ஆகிய இவற்றைக் கூட அரசாங்கம் அமல்படுத்தவில்லை.

சட்டத்திற்கு புறம்பாக பலருக்கும் அவசியமற்று பொது நிதியை எடுத்து அள்ளி அள்ளி வழங்கும் மத்திய அரசு ஏழை விவசாயிகளுக்கு கிள்ளிக் கூட தருவதில்லை. விவசாயிகளுக்கு தடையற்ற சாகுபடிக் கடன் வழங்கப்பட வேண்டும். வட்டி என்ற பெயரில் குரல் வளையை நெறிப்பது நிறுத்தப்பட வேண்டும். குண்டர்களை பயன்படுத்தி ரௌடித்தனம் செய்யும் நிதி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். அவற்றின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடும் காவல்துறையினர் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். 

பொதுவெளியில் நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் விவசாயிகளுக்காக கண்ணீர் வடிக்கலாம். அவர்களின் செய்கைகள் விவசாயத்தின் கல்லறைக்கு ஆணிகளை ஓங்கி அடிக்கின்றன. வரலாற்றுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர்.

சாம்ராஜ்யங்களை அஸ்தமிக்க வைக்கும் வல்லமை விஜய் மல்லையாவின் கள்ளச் சிரிப்புக்கு அல்ல. விவசாயிகளின் கண்ணீருக்கு உண்டு.

#ksrposting #ksradhakrishnanposting #விவசாயிகள் #agriculturist

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...