Thursday, March 10, 2016

மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்

இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவருமான மறைந்த அமிர்தலிங்கம் அவர்களுடைய துணைவியார் மங்கையற்கரசி அம்மையார் அவர்கள், லண்டனில் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன்.

இலங்கையில் தமிழர்கள் 1983ல் கொடூரமாக கொல்லப்பட்டபின் சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விடுதியில் மறைந்த அமிர்தலிங்கனாரும், மங்கையற்கரசி அம்மையாரும் நீண்டகாலம் தங்கியிருந்தனர். எனக்கும் திரு & திருமதி அமிர்தலிங்கனாருக்கும் இருந்த உறவும் மகன் தந்தை தாய் உறவாக இருந்தது. உடன் அவருடைய புதல்வர் மதுரை மருத்துவ கல்லூரியில் பயின்றார். அவரோடும் சகோதரர் பாசத்தோடு பழகியதுண்டு. அவரது பெயர் பகீரதன். மூத்த புதல்வர் காண்டீபன் லண்டனில் வசித்தார். அவரும் சென்னைக்கு வரும்பொழுது வீட்டிற்கு வருவதுண்டு. இப்படியான நெருக்கமான உறவுகள் என்னுடைய திருமணத்தில் நெடுமாறன், வைகோ அவர்கள் ஏற்பாடு செய்ய கலைஞர் நடத்தி வைத்தார். அந்த திருமணத்தினுடைய பணிகள் எப்படி நடக்கின்றன என்று முதல் நாளே திருமண மண்டபத்திற்கு வந்து அமிர்தலிங்க தம்பதியர் பார்த்துவிட்டு சென்று திருமணத்திலும் கலந்துகொண்டனர்.

அமிர்தலிங்கம் தம்பதியினரோடு அடையார் ஐ.ஐ.டி. அருகே உள்ள வால்ட்ரோப், சைனா, உணவு விடுதிக்கு இரவு நேரங்களில் பல சமயம் சென்றதுண்டு. அமிர்தலிங்கம் அம்மையார் துணிகள் எடுக்க தி.நகர் செல்லும்பொழுது எங்கே செல்கிறேன் என்று சொல்லமாட்டார். ஏனெனில் துணிக் கடைக்கு என்றால் நான் வரமாட்டேன் என்று நினைத்து தி.நகர் சென்றுதான் ஜவுளிக் கடைக்கு என்னை அழைத்துச் சென்று, துணிகள் வாங்கும்போது எனக்கும் விலை உயர்ந்த துணிகளை மறுத்தும் கையில் திணிப்பதுண்டு.

மங்கையர்கரசி அம்மையாருக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. ஓர் ஆண் மகனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்மணி இருப்பார் என்பார்கள். அமிர்தலிங்கனாரின் வெற்றிக்கு மங்கையர்க்கரசி அம்மையார்தான் முழு காரணம். அற்புதமாக அம்மையார் அவர்கள் உரையாற்றுவார்கள். ராமநாதன் கல்லுரியில் இசை பயின்றவர். மேடையிலும் அற்புதமாக பாடுவார்். 1960 களில் சத்தியாகிரக போராட்டத்தில் 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

வட்டுக்கோட்டை அருகே முலாய் என்ற ஊரில் பிறந்து ஈழத் தமிழர்களுக்காக பல போர்க்களங்களை சந்தித்து ஈழத் தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற வணக்கத்திற்குரிய பெண்மணிதான் மங்கையர்க்கரசி அம்மையார்.

அவர் புகழ் ஓங்குக! அவர் பிரிவால் வாடும் அருமை சகோதரர் காண்டீபனுக்கும், டாக்டர் ரவிக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களோடு பழகிய நாட்களும் கிடைத்த அன்பையும் என்றென்றும் நினைவலைகளாக மனதில் மோதிக்கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்!

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்! அந்த மாவட்டத்தின் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் அதற்கா...