Wednesday, March 16, 2016

கிளாரிந்தா - Clarinda

இலக்கிய ஆளுமை அ. மாதவையா ஆங்கிலத்தில் படைத்த கிளாரிந்தா என்ற வரலாற்று நாவல் பேராசிரியர் சரோஜினி பாக்கியமுத்து மொழிபெயர்த்த நாவல் முதல் முதலாக கிறிஸ்துவ இலக்கிய சங்கம் வெளியிட்டு நீண்ட நாளைக்கு பிறகு அடையாளம் பதிப்பாக வெளிவந்துள்ளது. 1978ல் கிறிஸ்துவ இலக்கிய சங்கம் வெளியிட்ட இந்த நாவலை நீலக் கலர் அட்டையோடு பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி டையோசிஸன் புத்தகக் கடையில் வாங்கி படித்ததுண்டு. இப்பொழுது செம்பதிப்பாக புத்தாநத்தம், அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது.

என்னுடைய நிமிரவைக்கும் நெல்லை நான்காவது பதிப்பு இரண்டு தொகுதிகளாக விரைவில் வர இருக்கின்றது. ஏற்கனவே பதிப்பித்த நிமிரவைக்கும் நெல்லையில் மாதவையா, கிளாரிந்தா, சரோஜினி பாக்கியமுத்து, பெ.நா. அப்புசுவாமியைப் பற்றி விரிவாகவும் குறிப்பிட்டிருந்தேன்.

மாதவையா திருநெல்வேலி மாவட்டம் பெருங்குளத்தில் 1872ல் பிறந்து சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்று அரசு அதிகாரியாக பணியாற்றினார். தமிழிலும், ஆங்கிலத்திலும் நல்ல தரமான பல படைப்புகளை படைத்தார். சொந்த அச்சுக் கூடத்தை நிறுவி 1923லிருந்து 25 வரை பஞ்சாமிர்தம் என்ற தமிழ் மாத ஏட்டினையும் நடத்தினார். பத்மாவதி சரித்திரம் இவரின் முக்கியப் படைப்பாகும். அப்போதே 5 பதிப்புகள் வெளிவந்தன. சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் அவையின் உறுப்பினர் 1925 அக்டோபர் 23ம் தேதி தமிழை பற்றி உற்சாகமாக பேசி அமர்ந்ததும் அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவரது வயது 53. இந்த புதினத்தை தனது நெருங்கிய உறவினரான சீனிவாச சாஸ்திரிக்கு காணிக்கையாக்கி உள்ளார்.

கிளாரிந்தா நாவலின் சாரம் என்னவென்றால், கிளாவரிந்தாபாய் என்ற மராட்டிய சமஸ்தானத்தின் பிராமண பெண்மணி தன் கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறாமல் அப்போது புரட்சியை நடத்தி தஞ்சாவூரில் சில கால வாழ்ந்து கிறித்துவ மதத்தில் ஞானஸ்தானம் பெற்று திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கிறித்து மார்க்கத்துக்காக ஊழியம் செய்தார். அங்குள்ள மக்களுக்காக குடிநீருக்கு கிணறு, கல்வி நிலையங்கள் அமைக்க பாடுபட்ட ஒரு ஒப்பற்ற பெண்மணியின் வரலாற்றை புதினமாக படைத்துள்ளார் மாதவையா. அக்காலத்து சமூக நிலைமையும், வரலாறும் இந்நாவலில் சொல்லப்படுகிறது. 1746 ஆம் ஆண்டு கர்நாடக நவாப் மற்றும் பிரெஞ்சு படைகளோடு நடத்திய போர்களை பற்றியெல்லாம் குறிப்பிடப்படுகின்றது.  தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசுகளைப் பற்றியும், கிழக்கிந்திய கம்பெனியைப் பற்றியும், புதுவையில் பிரெஞ்சு அரசை குறித்தும் இந்த நாவலில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த நாவலுக்கு முன்னுரை எழுதிய மாதவையாவுடைய புதல்வர், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மா. அனந்தநாராயணன், தன் தந்தையார் எப்படி இந்த புதினத்தை படைத்தார் என்பதையும், அதற்கான தரவுகள் என்ன என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி அனந்தநாராயணன் அனைவராலும் பாராட்டப்பட்ட மானிடநோக்கு நீதிபதியாக திகழ்ந்தார்.

இதை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த பேராசிரியர் சரோஜினி பாக்கியமுத்து அவர்களை பலமுறை சந்தித்துள்ளேன். ஆங்கிலப் பேராசிரியராக பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் இருந்த காலத்திலிருந்து அறிமுகம். பிற்காலத்தில் அக்கல்லூரியின் முதல்வரானார்.  ஆங்கிலம், தமிழ் இலக்கியங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்.  இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளான நாகலாந்து, அஸ்ஸாம் வட்டார கதைகளையெல்லாம் மொழிபெயர்த்தவர்.  நண்பர் வட்டம் என்ற இலக்கிய மாத இதழையும் நடத்தினார்.  இவருடைய மக்கள் குரல் என்ற அஸ்ஸாமிய தமிழாக்க நாவல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. ஐந்தாம் மற்றும் ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டில் இவர் வாசித்த ஆய்வு கட்டுரைகள் பாராட்டைப் பெற்றன. இவருடைய கணவர் பாக்கியமுத்து செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் பேராசிரியர். மாதவையா ஆங்கில நடையை மொழிபெயர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதை லாவகமாக தமிழில் மொழிபெயர்த்ததன் சிறப்பு பேராசிரியர் சரோஜினி பாக்கியமுத்துவையே சாரும்.

இந்த புதினம் வெளிவருவதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் மாதவையாவின் உறவினர் புகழ்பெற்ற பெ.நா. அப்புசுவாமி ஆவார். இந் நாவலை கையில் எடுத்தால் இறுதிப் பக்கம் வரை முடிக்காமல் இந்த புதினத்தை மூடிவைக்க முடியவில்லை.

இந்த புதினத்தின் கருத்தாக்கம்:

"இந்த நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியை களமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவலின் தமிழாக்கம். கதை, வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட ஓர் உண்மையான கிளாரிந்தாவைப் பற்றியது. அவர் ஒரு மராட்டிய பிராமண விதவை. அவருடைய கணவர் தஞ்சை அரசரின் பணியாட்களில் ஒருவர். கிளாரிந்தா தம் கணவரின் மரணத்திற்குப் பிறகு, உடன்கட்டை ஏறும் நிலைக்கு ஆளாகிறார். அதிலிருந்து அவரை மீட்கும் லிட்டில்டன் என்ற ஆங்கில அதிகாரி, பிறகு அவருடனேயே இணைந்து வாழ்கிறார். இந்த அசாதாரணமான பெண்ணை மையமாகக் கொண்டது இந்த நாவல். காலப்போக்கில் கிளாரிந்தா தம் வாழ்க்கையைக் கட்டுக்குள் எடுத்துக்கொண்டது மாதவையாவுக்குப் பிடித்த சில மையக்கருவை விரிவாக்கிக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இதன்மூலம் பெண்கல்வி, சதி, விதவை மறுமணம், இந்து-கிறிஸ்தவ மதங்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகள் ஆகியவற்றை விசாரணைக்குள்ளாக்குகிறார். மேலும், இந்நாவலின் அடிநாதமாக விளங்கும் பண்பாட்டுக் கலப்பும் கலப்புமத உறவும் வழக்கத்திற்கு மாறானவையாகவும் அளவிடற்கரிய ஆர்வத்தைத் தூண்டுபவையாகவும் இருக்கின்றன."

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...