Tuesday, March 22, 2016

Water...

தண்ணீர் தட்டுப்பாடு  இனிமேல்தான் வரவிருக்கிறது. தண்ணீருக்கான யுத்தம் இனிமேல்தான் என்று நினைக்கும் அப்பாவிகளுக்கு.......

(எதற்கும் 20 ரூபாய் கொடுத்து ஒரு மடக்கு தண்ணீரை முழுங்கிவிட்டு படியுங்கள்)

இப்போதே கேரளாவில்  திருவனந்தபுரம் அருகில் கிராமங்களுக்கு 12 நாளைக்கு ஒருமுறைதான்  #தண்ணீர் விடப்படுகிறது.  கொல்லத்தில் அதிகம் விட்டால் தேர்தல் ஆணையம் தடுக்கிறதாம். அதாவது தண்ணீர் கூட ஒரு லஞ்சமாக கருதப்படுகிறது.

இந்தவாரம் பஞ்சாப் தனது சட்லெஜ் யமுனா கிளை கால்வாயை மண் கொண்டு மூடி வருகிறது.  பஞ்சாப் ஹரியானாவுக்கு தண்ணீர் தராது.  ஹரியானா தில்லிக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று மிரட்டுகிறது..

ஒரிஸ்ஸாவின் கங்கை என்று போற்றப்படும் பாமினி ஆறு படுகொலை தினம் தினம் செய்யப்படுகிறது.  கடந்த எட்டு ஆண்டுகளில் நிலத்தடி நீர் 40 அடி கீழே போய்விட்டது. வற்றாத இந்த ஜீவ நதி இப்பொது வருடத்தில் 9 மாதம் காய்ந்து விடுகிறது.  ரூர்கேலா இரும்பு தொழிச்சாலை தினம் 28 கோடி லிட்டரையும், NTPC 13 கோடியும், நெல்கோ 8 கோடி லிட்டரையும் உறிஞ்சியபின்னர் மக்களுக்கு என்ன மிச்சம் இருக்கும் ?

தில்லியில் தண்ணீர் மாபியா வெகுநாட்களாக இயங்கி வந்திருக்கிறது.   9000  வருமானம் உள்ள குடும்பங்கள் கூட 2000  தண்ணீருக்காக செலவழிக்கவேண்டிய அவலநிலை.

மும்பையில் விசிலடித்தவுடன் ஒரு மணி நேரத்துக்குள் நபருக்கு 90 லிட்டர் மட்டும் பிடித்துக்கொள்ள வேண்டும்.  இது வேண்டியதைவிட 60 லிட்டர் குறைவு.  இப்போது தண்ணீர் பற்றாக்குறையால் 20% இன்னும் குறைத்துள்ளார்கள்.

மகாராஷ்டிராவில் லாத்தூர் மாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பதினைந்து நாளைக்கு 200 லிட்டர் என்ற இலக்குப்படி  தண்ணீர் சப்ளை செய்கிறது அரசாங்கம்.  இதனால் பெரிய தள்ளுமுள்ளு ஏற்படும் என்று 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது.  விவசாய நிலங்களில் தண்ணீர் இல்லாமல் கடன் எகிறி தற்கொலை நடப்பது புளித்துப்போன செய்தி.

தண்ணீர் இல்லாமல் கல்கத்தாவில் பர்ராகா  2,100 MW அனல் மின் நிலையம் போன வாரம் மூடப்பட்டு வெறும் 500 MW உற்பத்தி செய்யப்படுகிறது.

கர்நாடகா தமிழ்நாட்டுக்கும், கேரளா தமிழ்நாட்டுக்கும் முழுமையாக தண்ணீர் தராது.   தமிழ்நாட்டின் ஆறுகள் சூறையாடப்பட்டு படுகொலை கொலைசெய்யப்பட்டுள்ளன.  வற்றாத ஜீவ நதியாம் தாமிரபரணி வற்றி விட்டது. நிலத்தடி நீரையும் குளிர்பானத்துக்கு விற்றாகி விட்டது.

ஆந்திராவில் ஸ்ரீசைலம் நாகார்ஜுனா சாகர் வற்றி வருகிறது. 7 தாலுகாவில் 359 மண்டல்கள் வரட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 14000 கிராமங்கள் வறட்சியின் பிடியில் உள்ளன.  இப்போதுதான் மார்ச் மாதம். இன்னும் கோடை வரவில்லை.

மத்திய பிரதேசத்தில் பத்ரி காட் அணையில் குடிநீரை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலர்களை நியமித்துள்ளனர். இல்லையென்றால் விவசாயிகள் தண்ணீரை திருடி விடுவார்கள்.

இப்படி சொல்லிக்கொண்டே  போகலாம்.  இன்றைக்கு பொது இடங்களில், உணவகங்களில் வழங்கப்படும் தண்ணீரைக்கூட குடிக்க முடியாது.  22000  செலவழித்து ஒவ்வொரு குடும்பமும் தண்ணீர் வடிகட்டியை நிறுவ வேண்டும்.  பணம் இருப்பவர்கள் தண்ணீர் குடிக்கலாம். இல்லாதவர்கள் செத்தொழியலாம்.  அரசாங்கம் பார்த்துக்கொண்டே இருக்கும்.

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...