Monday, January 15, 2024

#*பொங்கல் திருநாள்*. (1)

#*பொங்கல் திருநாள்*. 
————————————
                           (1)

”*தையில் நீராடி*” -கலித்தொகை.
 ”*தைத் திங்கள்*” -நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு என பல சங்க இலக்கியங்கள் செப்புகின்றன…

உழவர் பெருமக்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கத் துவங்கும் விழா பொங்கல் விழா. பொங்கல் விழா உழவர் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருவாரியான மக்களை உழவர்  பெருமக்களாகக் கொண்ட ஒரு நாட்டில் உழவர் பெருநாள் தேசியத் திருநாளாக உருவாகி நிற்பது பொருத்தமே.

 உழவனின் வியர்வையில் பலன் விளைந்த செந்நெல்லும்,கன்னலும், மஞ்சளும் அறுவடையின் இன்பத்தைக் காட்டும் மாட்டுப் பொங்கலும் மற்ற பொங்கல்களும் உழவனின் பெருமையைக் காட்டும்.

 தமிழக உழவனுக்குப் பொங்கல் புது நாளின் பொருள் என்ன? உழைப்பின் பலனைத் தானும், தனது உற்றார் உறவினரும், தன்னைச் சூழ்ந்துள்ள பெருமக்களும் சுருக்கத்தில் சமுதாயம் முழுவதும் தங்கு தடையின்றி அனுபவித்து மகிழ்ச்சி கொண்டாடும் இன்ப நன்னாளாகும். ஆவல் துடிப்போடு எதிர்நோக்கும் சிறந்த எதிர்காலத்தை ஆர்ப்பாட்டத்துடன் வெளியிடும் பொன்னாளாகும்.

 புது பொங்கல் கொண்டாடும் உழவன் புதிதாக உழக்கு அரிசியும், ஒரு புதுப் பானையும், ஒரு துண்டு புதுக் கரும்பும், ஒரு கொத்து புதுமஞ்சளும் மாத்திரம் விரும்புகிறான். தை முதல் நாளில் மட்டும் சம்பிரதாயப் புதுமையை விரும்புகிறான் அல்ல; அவன் ஒரு புதிய வாழ்வையே விரும்புகிறான்;உழவர் பெருமக்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தங்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தும் பிற்போக்குச் சுரண்டல் முறையை துடைத்தெறிய விரும்புகிறான்; கிராமப்புற வாழ்வின் பொருளாதார அடிப்படையை அடியோடு புதுப்பிக்க விரும்புகிறான்.

 தமிழகத்தில் உழவர் பெருமக்கள் மருத நில மக்கள். அவர்களின் கடவுள் இந்திரன் என்பர். இந்திரன் போகக் கடவுள். மழை வளம் தருவதும், உயிர் வளம் தருவதும் ஞாயிறு போற்றுதும் (சிலம்பு) உழவர் பெருமக்களுக்குப் பயிர்த்தொழிலுக்கும் மிகப் பயன் படுவன மாடுகள்.

உழைத்துக் களைத்த  உழவர்கள் சோ ர்வை போக்கிக் கொள்ளும் நாளாக மார்கழி இறுதி நாளை போகி என்று கொண்டாடினர். ஞாயிற்றைப்  போற்ற தை முதல் நாளை பெரும் பொங்கல் என்று கொண்டாடினர். மறுநாள் மாடுகளைப் போற்றி ஏற்ற மாட்டுப் பொங்கல் கொண்டாடினர். இந்த மூன்று நாட்களும் உழவர் பெருமக்களுக்கு ஆண்டில் சிறந்த நாட்கள்.

   தை முதல் நாள்,போகியின் மறுநாள் பயனை நுகரத் தொடங்கும் நாள், அன்று உழவர் இல்லங்களில் எல்லாம் புதுமை; எதிலும் புதுமை பொங்கும். அன்று புதிய ஆடை புனைந்து, ஆடி பட்டத்தில் விதைத்துத் தை மாதத்தில் அறுவடை செய்த புதிய நெல் குத்தியெடுத்த புத்தரிசியை  புதிய பானையிலிட்டு பொங்குவர். புதிய பானைகளுக்குப் புதிய மஞ்சளை புதிய நூலில் காப்பாக அணிவர்.கோலமிட்டு செம்மண் தீட்டிய தம் இல்லத்தின் வாசலில் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றி வைத்து புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய வள்ளிக் கிழங்கையும் புதிய பூசணிக் காயையும் படைப்பர். பின்னர் கதிரவனை வழிபட்டுப் பொங்கலிடத் தொடங்குவர். பொங்கலிடும் பானை பொங்கி வரும் போது உழவர் பெருந்தகைகள் மனைவி மக்களுடன் கூடி நின்று பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரித்து மகிழ்வர்.

 மாட்டுப் பொங்கலன்றோ உழவர்கள் மாடுகளை நன்கு குளிப்பாட்டி அவைகளை அழகு செய்வர். அவைகளுக்குச் சோறு படைத்து நன்றி உணர்வுடன் வழிபடுவர். அன்று மாடுகளை வேலை வாங்க மாட்டார்கள். சில இடங்களில் அன்று மாலை வண்டிகளில் எருதுகளைப் பூட்டி ஓட்டப்பந்தயங்கள் விட்டு ஆரவாரம் செய்து மகிழ்வர். சில மாவட்டங்களில் மஞ்சள் விரட்டு நடத்தி மகிழ்வர். தமிழனின் சமுதாய வாழ்வில் தமிழே எங்கும் கொலுவீற்றிருந்து பாரதத்திலும் சரி, உடலிலும் சரி, எந்த முன்னேறிய மொழி மக்களோடும் தமிழன் ஈடுசோடாக நிமிர்ந்து நடக்க சபதம் எடுக்கும் திருநாளாக - இந்நன்னாளைக் கொண்டாட வேண்டுவது தமிழர் பெருமக்களின் பொன்னான கடமையாகும்.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்  வாழிய பாரத மணித்திருநாடு 
 இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மை வந்தெய்துக; தீதெலாம் நலிக
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக
நந்தேயத்தினர் நாடொறும் உயர்க - என சபதம் ஏற்போம் இந் நன்னாளில்.

பொங்கல் வாழ்த்துகள்.

#பொங்கல்வாழ்த்துக்கள்
#Pongal2024 
#மகரசங்கராந்தி
#magarasangaranthi

#ksrpost
15-1-2024.


No comments:

Post a Comment

பிரபாகரன்- பாண்டி பாஜார் சம்பவம்- உண்மை என்ன⁉️உண்மைக்கு மதிப்பில்லை என்று புரிந்து கொண்ட தினம் இன்று..!

இன்றைக்கு திமுகவில் திமுக வரலாறு, பிரபாகரன் வரலாறு தெரியாதவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திகிட்டு திரிகிறார்கள்.  1982-ல் பிரபாகரன் கைதானவுடன்...