Wednesday, January 10, 2024

#*எங்கே போகிறோம்*…⁉️ #*Quo vadis*⁉️

#*எங்கே போகிறோம்*…⁉️
#*Quo vadis*⁉️
————————————
1990களில் திறந்தவெளிப் பொருளாதாரம் உருவானபோது உலகெங்கும் வாழ்க்கை மாற்றங்கள் குடும்ப மாற்றங்கள் ஏற்பட்டன. நவீன கல்வி முறை தகவல் தொழில்நுட்பம் யாவும் இணைந்து ஒரு புதிய வகை கல்வியை அறிமுகப்படுத்த அதிலிருந்து உருவான இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி என்று சொல்லக்கூடிய ஐடி பிரிவினர் தோன்றினார்கள்.

கடந்த 35 ஆண்டுகளாக இவற்றில் ஈடுபட்டு வரும் ஆண்கள் பெண்களின் வருமானத்தைப் பொறுத்தளவில் அவர்கள் தற்சார்புடையவர்களாகவும் திருமணம் கலாச்சாரம் போன்ற விஷயங்களில் சுய தேர்வு உடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

அத்தோடு பணி நிமித்தம் பல இடங்களுக்குப் புலம்பெயர்ந்து உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ சிலிகான் பள்ளத்தாக்குகளில்களில் குடியேறியவர்கள் இன்று ஒரு தனி பிரிவாக தனி வர்க்கமாக
 விதந்தோதப்பட்டார்கள். லட்சங்களில் சம்பளம். டேட்டிங் மேட்டிங்  புதிய விடுதி கலாச்சாரங்கள் பாலியல் பழக்கவழக்கங்கள் எனத் துணிந்த இவர்களின் போக்கு இந்திய தமிழ் பொது வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக  விலக்கம் கண்டது. போக இவர்கள்தான் சந்தையில் விலைவாசியை உயர்த்தினார்கள். 

 அளவுக்கு அதிகமான வருமானம் வேலை செய்யும் இடத்தின் மேலைக் கலாச்சாரம் இரவு பகலான வேலைப் பழுவில் இருந்து புத்துணர்ச்சி பெற  கேளிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் இவர்கள் தங்களுக்குள் ஒரு தேர்வு முறை ஏற்படுத்திக் கொண்டு திருமணம் செய்து கொண்டு  குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள்.  ஒரு ஆறு மாதம் ஒரு வருடம் அல்லது அதற்கு முன்பாகவே நமக்குள் இனி ஒத்து வராது என்று திருமணம் முறிவைச் சந்தித்துக் கொள்கிறார்கள். இப்படியாகத் தொடர்ந்து இன்றைய நாட்களில் ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் இருந்து வருவதை நான் பார்த்திருக்கிறேன்.

இது ஒரு புறம் இருக்க இந்த திருமணம் முறிவிற்குப் பின் அடுத்ததொரு வாழ்க்கையைத்தேட அல்லது இந்த துயரங்களிலிருந்து விடுபட  பெற்ற குழந்தை தடையாக இருக்கக்கூடாது  என்று சொல்லி அவற்றைக் கொலை செய்யக்கூடத் துணிந்துவிடும் பெண்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது எங்கே தவறு நடந்தது என்று நமக்கும் தெரியவில்லை .இது மிகவும் அபாயகரமானதாகவும் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை பாதிக்க கூடியதாகவும் இருக்கிறது.

பாருங்கள் தனது நான்கு வயது மகனை தானே கழுத்தைப் பிடித்து நெறித்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முயன்று அதில் அச்சமாகிப் பின்பு தான் கொலை செய்த தன் குழந்தையை சூட்கேசில் வைத்து  எங்கோ தூர விசிறி விட்டுக் காரில்  தப்பிக்கலாம் என்று நினைத்த 39 வயது பெண்ணை  அவர் தங்கியிருந்த விடுதியின் நிர்வாகிகள் சந்தேகப்பட்டுக்  கொடுத்த தகவலின் பெயரில் பயணித்த வழியில் அவரை மடக்கிக் காவல்துறை கைது செய்திருக்கிறது..

எங்கே போகிறது இந்த உலகம் தனக்கும் தன் கணவருக்கும் ஆன விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்க நல்ல சம்பளமும் பொருளாதாரச் தற்சார்பும் உள்ள ஒரு பெண் அதுவும் படித்த பெண் இப்படி ஒரு முடிவு எடுக்கிறார் என்றால் அவரது உளச்சிதைவு என்னவாக இருக்கும்?  உண்மையில் அவருக்கு என்ன தேவைப்பட்டு இருக்கிறது.

தான் பெற்ற குழந்தையையே கொல்லும் அளவிற்கு மனத்துணிவு
ஏன் வருகிறது. இப்படியான போக்குகள் அதிகமாகி வருவது கவலை அளிக்கிறது. இதற்கு சட்டபூர்வமான மாற்று ஏற்பாடுகள் ஏதும் இல்லையா! நமது சமூக அமைப்பு சீர்குலைந்து கொண்டிருக்கிறதா?

பல நூறு தலைமுறைகளாய் குழந்தைகளைப் பக்குவமாய் வளர்த்து ஆளாக்கியது நமது சமூகம்.
அதற்குரிய அடிப்படை தியாகம் குழந்தைகளை கண்டால் உள்ளப்பூரிப்பும் அவற்றின் சிரிப்பில் இறைவனை கண்ட  ஒரு சமூகத்தில் இப்படியான நிகழ்வு நடப்பதை எப்படி புரிந்து கொள்வது!

பெற்ற பிள்ளைகளை, மனைவியை, கணவரை தன் மகிழ்ச்சிக்கு கொலை செய்வது என தினமும் செய்திகள் வருகின்றன.

 இது நல்லதல்ல!

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
10-1-2024.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...