Monday, January 15, 2024

#*வரலாற்றில் பொங்கல் விழா* (4)

#*வரலாற்றில் பொங்கல் விழா* [ Epigraphy - கல்வெட்டியல் பக்கத்தில் வெளியானப் பதிவுகளின் சுருக்கம் ]
-----------------------
பொங்கல் பண்டிகையை தைப்பொங்கல், உழவர் திருநாள், தமிழர் திருநாள், அறுவடை திருநாள், தைத்திருநாள் என்று பல பெயர்களில் அழைக்கிறோம்.
பண்பாட்டின் மக்கள் விழாவாகவே பொங்கல் ஒளிர்விட்டுப் பிரகாசிக்கிறது. தமிழகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியோடும் பேரரசுகளின் வளர்ச்சியோடும் மிகுந்த தொடர்புடைய தாகவே பொங்கல், தமிழ் மக்களின் பண்பாடாக மலர்ந்தது. பொங்கல் விழா காலப் போக்கில் பல வளர்ச்சிகளைக் கடந்து வந்துள்ளது. தமிழகம் முழுவதுமான விவசாயிகளின் ஒற்றுமையை வளமைப் பண்பாட்டை ஒரே சமயத்தில் வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் திருவிழா உருக் கொண்டது.

தமிழரின் வாழ்வோடும் வளத்தோடும் செழித்த உயரிய பண்பாட்டின் வெளிப்பாடே பொங்கல். எந்த மத வரையறைக்குள்ளும் அடங்காத வேளாண்மை வாழ்வின் உற்பத்தி சார்ந்த வளமைச் சடங்குகளின் தொகுப்பே பொங்கல்.

தமிழர்கள் உட்பட இந்திய உபகண்ட மக்களின் உணவுத் தேவைகளை நெல்லே அதிகம் பூர்த்தி செய்துள்ளது.
பெரும்பாலும் மழையை எதிர்பார்த்து இப்பயிர் செய்கையை ஆரம்பிப்பதால்.
நெல்லை, மக்கள் பெரும்போகத்தின் (மானாவாரி) போதே அதிகம் பயிருடுகின்றனர்.  இலங்கை மற்றும் தென்னிந்தியா வாழ் தமிழ் மக்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலமே அதிக மழை வீழ்ச்சியைப் பெறுவதால் புரட்டாசி தொடங்கி மார்கழி வரையான மாரி காலத்தை உள்ளடக்கி நெல்லினைப் பயிருட்டு ஏறத்தாழ தை மாதத்தில் அறுவடை செய்து கொள்கின்றனர். அறுவடை செய்த தானியங்களை வைத்து, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றிசெலுத்தி, உறவுகளுக்கு உணவு பரிமாறி, பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுக்களை நடத்திக் கொண்டாடுகின்றனர்.

*சங்க இலக்கியத்தில் பொங்கல்* :-
•••
சங்க அரசனுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வரப்புயர என்கின்ற வார்த்தையைச் சொல்லி வாழ்த்தினார் அவ்வையார். வரப்புயர சொல் எப்படி அரசனுடைய உயர்வுக்கு காரணமாக இருக்கும் என்று புலவர்கள் கேட்க, முழுப்பாடலையும் சொன்னார். அது விவசாயத்தை முக்கியத்துவத்தையும் அதை காக்க வேண்டிய அரசாங்கத்தின் கடமையும் எடுத்துக்காட்டுவதாக அந்த பாடல் அமைந்தது.

“வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும்”

தை முதல் நாளை மையமாகக் கொண்டு, வேளாண்மை ஆண்டு தொடங்கப்பட்டு அறுவடைத் திருவிழா கொண்டாடப்பட்டது.

புறநானூற்றுப் பாடலிலும், பரிபாடலிலும் பொங்கல் விழா குறிப்பிடப்படுகிறது.
“ஏற்றுக உலையே! ஆக்குக சோறே'' (புறம் 172) எனும் புறநானூற்றுப் பாடலின் அடி, பொங்கல் விழாவின் தொடக்க கால நிலையை நினைவு கூர்கிறது.

இவ்வாறு சங்ககாலத்தில் தொடங்கிய பொங்கல் விழா, காலப் போக்கில் வழிபடு தெய்வங்களுக்குச் செய்யப்படும் சடங்குகளோடு இணையலாயிற்று. பொங்கலைச் செய்து தெய்வங்களுக்குப் படைக்கும் வழக்கமும் தோன்றியது. இதனை,
“புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' (சிலப். 5:68-69)
எனும் இளங்கோவடிகளின் வாக்கால் அறிகிறோம்.

இலங்கையில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சரஜதிமாலை என்ற தமிழ் நூலில் தை முதல் அறுவடைத் திருநாளாகவும், தைப்பூச நாளை நெய்யோடு புத்தரிசி பொங்கலைப் படைத்து வழிபாடு நடத்தும் நாளாகவும் குறிப்பிடுகிறார்கள். 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பழைய மரபு மாறியிருக்கிறது. பொங்கல் என்ற பெயரே மிகவும் பிற்காலத்தில்தான் வந்திருக்கிறது.

*கல்வெட்டுகளில் பொங்கல் / சங்கராந்தி*
••••
கல்வெட்டு காட்டும் சங்கராந்தி
சங்கராந்தியைப் பற்றிய முதல் குறிப்பு சோழப் பேரரசர்களின் கல்வெட்டுகளில் தான் காணப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் இப்பண்டிகையைப் பற்றிய குறிப்பு, கி.பி. பதினோராம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகவே கிடைத்து இருக்கிறது.

பேரரசன் இராஜராஜசோழனுடைய பாட்டன் அரிஞ்சய சோழன் (கி.பி. 956-7) ஆவான். அவனுடைய மனைவி வீமன் குந்தவை எனும் அரசி கல்யாணி, அரிஞ்சயனுக்குப் பிறகு நெடுங்காலம் வாழ்ந்ததாகத் தெரிகிறது. அரசி கல்யாணி பற்றி அறிந்து கொள்ள மூன்று கல்வெட்டுகள் உதவுகின்றன. மூன்றும் அரசி கல்யாணி வழங்கிய அறக்கட்டளைகளைத் தெரிவிக்கின்றன. கி.பி. 968-இல் (இராஜராஜன் தந்தையான சுந்தரசோழனின் ஆட்சிக் காலத்தில்) அவள் உடையார்குடியில் உள்ள சிவன் கோயிலுக்கு ஓர் அறக்கட்டளை வழங்கியுள்ளார். சங்கராந்தி அன்று, உடை யார்க்குடி சிவன் கோயிலில் உள்ள “திரு நந்தீசு வரத்துப் பரம சுவாமி''க்குத் திருமுழுக்கு ஆட்டுவதற்காக ஆயிரம் குடம் நீரினைக் கொண்டு வந்து கோயிலில் சேர்ப்பவருக்கு ஊதியம் அளிப்பதற்கு ஒன்றரை ‘மா’ நிலத்தை மானியமாக அக்கோயிலுக்கு அளித்துள்ளார்.

இதிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் சங்கராந்தித் திருநாள் தமிழகத்தின் கோயில்களில் கொண்டாடப்பட்ட செய்தி புலனாகின்றது.

கண்டராதித்த சோழரின் மனைவியான செம்பியன் மாதேவியார், தம் மகன் உத்தம சோழனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. அளவில்) செம்பியன் மகாதேவி சதுர்வேத மங்கலத்தில் (நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஊர்,) “கைலாசமுடைய மகாதேவருக்கு'' ஒரு கற்கோயி லைச் செம்பியன் மாதேவியாரே கட்டினர்.
உத்தம சோழனுடைய இறுதி ஆட்சியாண்டில் அவனுடைய மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவவள். `உரட்டை சரஅபயன்' எனப்படும் திரிபுவன மாதேவி. அக்கோயிலுக்கு ஒரு நிவந்தம் அளித்துள்ளான். சங்கராந்தி நன்னாளில், கைலாசமுடைய மகாதேவருக்குத் திருமுழுக்கு (அபிஷேகம்) ஆட்டுவதற்கும், நந்தாவிளக்கு எரிப்பதற்கும், நூறு பிராமணர்களுக்குப் பொங்கல் சோறு அளிப்பதற்கும் தேவையான வருவாயை அளிக்கத் தக்க வகையில், நன்செய் நிலத்தை அக்கோயிலுக்கு அவ்வரசி தானமாகக் கொடுத்து இருக்கிறார்.

இக்கல்வெட்டின் வாசகத்தில் `உத்தராயண சங்கராந்தி' எனும் தொடரும், `பொங்கல் சோறு' எனும் தொடரும் வருகின்றன. சமயப் போர்வையில் `பொங்கல் விழா' கோயில்களில் கொண்டாடப்பட்டதற்கு இக்கல்வெட்டு சான்று பகருகிறது.

`உத்தராயண சங்கராந்தி' சிறப்பித்துப் பேசப்படுவதானால் மாதந்தோறும் `சங்கராந்தி' எனும் ஒருவகை விழா நடைபெற்றதை உய்த்துணரலாம். இதனைச் செம்பியன் மாதேவியினுடைய கல்வெட்டு ஒன்றும் தெரிவிக்கிறது.

இக்கல்வெட்டுச் சான்றுகளால், பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதி முதல், தமிழகத்தின் கோயில்களால் பொங்கல் விழா, `உத்தராயண சங்கராந்தி' பண்டிகையாகக் கொண்டாடப்பட்டமை தெளிவாகிறது. இந்நிலை இந்நூற்றாண்டின் இடைப்பகுதி வரையில் தொடர்ந்து நீடித்ததைக் காணுகின்றோம்

*முதலாம் ராஜேந்திரன் காலத்து திருவொற்றியூர் கல்வெட்டு `புதியீடு விழா’ எனப் பொங்கலைக் குறிக்கிறது. (புதியீடு என்பது முதல் அறுவடை). தமிழக விவசாயத்தில் தொடர்ந்து நிலவும் இருவகை உற்பத்தி முறைகளை (மருதம்/முல்லை வேளாண் முறைகள்) ஒரே பண்பாட்டின் கீழ் பொருத்தமுற இணைப்பதில் தமிழர் அடைந்த வெற்றியின் சின்னமே பொங்கல்விழா

சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு ‘புதியீடு’ என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். ‘புதியீடு விழா’ என்று ஒரு கல்வெட்டு குறிக்கிறது. அதே போல், விவசாயம் சார்ந்த 'புதுயீடு' / முதல் அறுவடை என்பது ஒரு சடங்காக வளர்ந்திருக்கலாம். தை மாதமே அறுவடை ஆரம்பிக்கும் காலம் என்பதால், அறுவடைத் திருநாள் அம்மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்பட்டிருக்கலாம். (இன்றும் இலங்கையில், தைப்பூசம் பிறந்தால் தான் அறுவடை என்பதே பொது வழக்காக இருக்கிறது. மாட்டுப்பொங்கலும் அன்று நிகழ்வதுதான்.)

ஆரம்ப கால பதிவுகளில் இந்த பொங்கல் என்ற பெயரானது வானகம், போனகம், திருப்போனகம், பொங்கல் போன்ற சொற்களாக கல்வெட்டுகளில் தோன்றுகிறது.

* திருச்சி திருக்கயிலாயமுடையார் கோவில் கருவறை வடக்குப் பட்டியில் காணப்படும் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில்,
“சங்கராந்திகளும், கிரஹணமும், மற்றும் திருக் கல்யாணங்கள் உள்ள் போது” பறை முதலிய வாத்தியங்கள் கொட்ட வேண்டிய முறைமையைத் தெரிவிக்கிறது.
*ராஜராஜ சோழன் காலத்தில் (கி.பி. 985 – கி.பி. 1012) ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் விழா எடுக்கப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தஞ்சையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் “திருச் சதயத் திருவிழா பன்னிரெண்டும், கார்த்திகத் திருநாள் ஒன்றும், சங்கராந்தி பன்னிரெண்டும், பெரிய திரு உற்சவம் நாள் ஒன்பதும் ஆக நாள் முப்பத்து நான்கும்” (“கல்லும் சொல்லும்”, பக் 147, இரா. நாகசாமி) என்று குறிப்பிடப்படிருக்கின்றது.

*மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனின் கி.பி. 1013-14ம் ஆண்டுக்குரிய 29ம் ஆண்டு கல்வெட்டு ‘‘ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது ராஜேந்திர சிங்க வளநாட்டு மண்ணி நாட்டு பிரமதேயம் வேம்பற்றூராகிய சோழமார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து மகாசபையோம் கையெழுத்து. நம்மை உடைய சக்கரவர்த்தி உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் இவ்வூர் திருவிசலூர் மகாதேவர் ஸ்ரீ கோயிலிலேயே துலாபாரம் புக்கருளின அன்று நம்பிராட்டியார் தந்தி சக்திவிடங்கியாரான உலோக மாதேவியார் இரண்ய கர்ப்பம் புக்கருளி இத் திருவிசலூர் மகாதேவர்க்கு அக்காரடலை அமுதுக்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இக்காசு நானூற்று ஐம்பத்தெட்டும் இத்திருவிசலூர் மகாதேவர் சேனாபதிகள் மூலபரதரான சண்டேஸ்வரர் பக்கல் மகாசபையோம் கொண்ட இக்காசு நானூற்று ஐம்பத்தெட்டும் கொண்டு கடவோம் கொண்ட பரிசாவது...’’ என்று கூறி பின்பு சாசன விளக்கம் விரிவுற எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.

சோழ சக்கரவர்த்தி ராஜராஜ சோழரின் பட்டத்தரசியான லோகமாதேவியார் தன் கணவர் திருவிசலூர் கோயிலில் துலாபாரம் ஏறியபோதுதான் ஹிரணியகர்ப்பம் புகுந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டபோது திருவிசலூர் ஈசனுக்கு அந்நாள் முதல் தொடர்ந்து சந்திரன், சூரியன் உள்ளளவும் நாள்தோறும் அக்காரடிசில் எனப்பெறும் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வதற்காக நானூற்று ஐம்பத்தெட்டு பொற்காசுகளை கோயிலில் முதலீடு செய்தார். அத்தேவியார் முதலீடு செய்த பொன்னை வேம்பற்றூர் ஊர்ச்சபை கடனாகப் பெற்றுக் கொண்டு, அதற்குரிய வட்டியிலிருந்து அப்பணியை மேற்கொள்வதாக இந்த சாசனத்தில் கையொப்பமிட்டு உறுதி அளித்துள்ளனர். அக்கார அடிசிலுக்காக (சர்க்கரைப் பொங்கல் நிவேதனத்திற்காக) அளித்த நானூற்று ஐம்பத்தெட்டு பொற்காசுகளுக்குரிய வட்டியிலிருந்து நாள்தோறும் இருநாழி செந்நெல் அரிசி, ஒருநாழி துவரம் பருப்பு, நாலுநாழி பசும்பால், ஒரு உழக்கு நெய், பன்னிரண்டரை பலம் சர்க்கரை மற்றும் நாற்பது வெற்றிலை, பத்து பாக்கு, இருபது வாழைப்பழம் ஆகியவையும் அளிக்கப்பட வேண்டும் என்று இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இவை தவிர அன்றன்றைக்கு பொங்கல் சமைக்க புதுப்பானை அளிக்கும் குயவர்க்கு உரிய ஊதியம், விறகுக்கு உரிய செலவு, திருவமுது சமைக்கும் ஊழியனுக்கு உரிய ஊதியம் ஆகியவையும் அந்த வட்டிப் பணத்திலிருந்தே அளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப் பெற்றுள்ளது.
.
*கங்கைகொண்ட இராஜேந்திர சோழனின் காளத்திக் கல்வெட்டில் மகர சங்க்ரமணப் பெரும் பொங்கல் என்ற குறிப்பு உள்ளது.
*திருவள்ளூர் வீரராகவ கோவிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றின் படி, சோழ மன்னன் குலோத்துங்கன் பொங்கல் விழாவிற்கு சிறப்பாக நிலங்களை கோவிலுக்கு பரிசாக அளித்து வந்தார். கல்வெட்டில் விஷ்ணுக்கு பொங்கல் வரவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

*சிதம்பர சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயிலுள்ள கல்வெட்டொன்று இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1243- கி.பி.1279) காலத்தில் கயிலாயத்தேவன் என்பவன் தைப்பூச நாளில் பொங்கலமுது படைக்க மூலதனமாக பெரும்பற்றப்புலியூர் கீழ்ப் பிடாகை கிடாரங்கொண்ட சோழப்பேரிளமைநாட்டு எருக்காட்டுச் சேரியான சோழ நல்லூர்ப்பால் சோழபாண்டியன் என்ற பெயருள்ள நிலத்தையும், அங்குள்ள கொல்லைக் குளத்தில் செம்பாதி நிலத்தையும் அளித்திருந்தான் என்று கூறுகின்றது.

காலக்கணிப்பு மாற்றத்தின் ஊடாக,
1. மகர சங்கிராந்தி (சூரிய வழிபாடு),
2. பழைமையான அறுவடைத்திருநாள்
ஆகிய இரு கூறுகளின் ஒன்றித்த வடிவமே இன்றைய தைப்பொங்கல் என்றே நாம் கொள்ளலாம்.

கல்வெட்டுகளில் தைப்பூச நாளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தை மாதத்தில் தைப்பூச நாளை மிகச் சிறந்த நாளாகச் சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் கொண்டாடியிருக்கிறார்கள். இன்றைய பொங்கல் விழா மரபு 300ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்கியிருக்கலாம் எனக் கணிக்கலாம்.

பெரியபுராணத்தில், மள்ளர்கள், இந்திர தெய்வத்தை தொழுது நாற்று நட்டதாக, சேக்கிழாரின் குறிப்புகளில் இருந்து தை மாதப் பிறப்பு, சோழர் காலத்தில் பெரிய விழாவாக கொண்டாடப்படவில்லை எனத் தெரிகிறது.

விஜயநகர பேரரசின் காலத்தில், அது பெரிய விழாவாக மாறியிருக்கலாம். தஞ்சை மராட்டியர் காலத்தில், மகர சங்கராந்தி அன்று, வாழை கட்டி, பொங்கல் விட்டு கொண்டாடியதாக, ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

சங்கராந்தி என்பது தென் கிழக்காசியா முழுதும், இந்தியாவில் தென் குமரி முதல் வட இமயம் வரை, கொண்டாடப்படுகிறது. தாய்லாந்து, லாவோஸ் ஆகிய இரண்டு நாடுகளில் ‘சொங்ராங்’ 
(சங்கராந்தி) என்ற பெயரில் இதைக் கொண்டாட கதை சொல்லப்படுகிறது.

• தமிழகத்தில் அறுவடைத் திருநாளை பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம். மற்ற மாநிலங்களில் வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர்.

மாட்டுப் பொங்கல்
****
அடுத்த நாள் அன்று தனக்கு உதவிய மாடுகள், ஏற்கலப்பை போன்ற விவசாயத்திற்குப் பயன்பட்ட எல்லா பொருள்களுக்கும் நன்றி செலுத்தும் நாள் மாட்டுப் பொங்கல் ஆகும்.
மாட்டுப் பொங்கலை கன்றுப் பொங்கல் என்றும் பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கும் வழக்கம் உண்டு. மாடுகளைக் குளிப்பாட்டி, அதன் கொம்புகளை சீவி, பளபளக்கும் வகையில் இயற்கை வண்ணம் பூசி, குஞ்சம் அல்லது சலங்கைகள் கட்டிவிட்டு, தோளில் வார்ப்பட்டையிலும் சலங்கைகள் மாட்டிவிட்டு, மாடு தலையை ஆட்டும் போது ஏற்படும் ஒலியைக் கேட்டு ரசிப்பார்கள். மேலும் நாட்டுச் சர்க்கரை, தேங்காய், பழம் எல்லாம் மாட்டுத் தொழுவத்தில் படையல் வைத்து, பொங்கலை பொங்கச் செய்து மாட்டுக்குப் படைத்து வணங்குவார்கள். மாடு உண்டு முடித்த எச்சில் தண்ணீரை "பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல் பட்டிப் பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக" எனச் சொல்லி மாட்டுத் தொழுவம் முழுதும் தெளிக்கும் வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.

மாட்டுப் பொங்கல் என்பதே கால்நடை சமூகத்தின் பொருளாதாரப் பின்னணியை மையப்படுத்திய திருவிழா.

“மென்புலத்து வயலுழவர் வன்புலத்துப் பகடுவிட்டு”
என்றொரு புறநானூறு பாடல்வரி மருத நிலத்து உழவர்கள், முல்லை நிலத்திலிருந்து மாடுகளை ஓட்டிச் செல்வதாகப் பொருள் ஆகும்.

ஜல்லிக்கட்டு
****
தமிழகத்தில் நாயக்கர் காலம் (கி.பி. 1532 -கி.பி. 1736) நிலவியபொழுது தைப்பொங்கல் காலப்பகுதியில் ஜல்லிக்கட்டு / சல்லிக்கட்டு என்றழைக்கப்படும் காளையை அடக்கும் விழா அறிமுகப்படுத்தப்பட்டது. சல்லிக்காசுகள் என்னும் காசுகளை நாணயங்களை மாட்டின் கொம்புகளில் அலங்காரமாக கட்டி வைத்து விளையாடும் வீர விளையாட்டு ஆதலால் சல்லி கட்டு என அழைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு என்று ஆகிவிட்டது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விழா வாழையடி வாழையாக நடத்தப்பட்டு வரும் விழா என்பதற்கு ஆதாரமாக, சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு காளையை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்ட பரிசு பொருளை எடுக்கும் வீரனின் சிலை கிடைத்துள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு பெத்தநாயக்கனபாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலையில், காளை அடக்கும் வீரனின் உருவமும், அந்த வீர விளையாட்டை விவரிக்கும் சொற்றொடர்களும் பொறிக்கப்பட்டுள்ளது. பெத்தநாயக்கன் பாளையத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட குறு நில மன்னர்கள், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி, அதற்கு சான்றாக கல்வெட்டை செதுக்கி வைத்து தமிழர்களின் வீரத்தை பறைசாற்றி சென்றுள்ளனர். முன்னோர்களால் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியும், காளையை அடக்கும் வீரனும், சேலம் அருங்காட்சியகத்தில் சாட்சியாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

குடும்பங்கள் அனைவரும் சேர்ந்து பாரம்பரிய முறையில் மண்பானை மற்றும் விறகு அடுப்பு முறையில் அனைவரும் ஒரே நேரத்தில் அடுப்பில் தீயை மூட்டி பொங்கிய பின் அனைவரின் பொங்கலையும் பகிர்ந்து அனைவரும் உண்பது வழக்கம்! இதை "சமத்துவப் பொங்கல்" என அழைப்பார்கள்.

சில ஊர்களில், ஊர் பொதுமக்கள் ஒன்றாக கூடி சமத்துவ பொங்கல் வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகள், இளைஞர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுப் பொருட்கள் தருவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

`சங்கராந்தியாக'க் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகையை நாகரிகக் கோரிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒரு வாய்ப்பாக நகரத்து மக்களால் கருதப்பட்ட பொங்கல் விழாவை, உழவர் திருநாளாக, பாட்டாளி மக்கள் பழங்கணக்கைப் பார்க்கும் பொங்கல் திருநாளாக, அறிஞர்கள் போற்றும் அறிவுத் திருநாளாக, தமிழரிடையே மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் ஊட்டும் தமிழர் திருநாளாக, தமிழர் தம் தேசியத் திருவிழாவாக மாற்றியமைத்த

“பொங்கல் திருவிழா'' தேசியத் திருவிழாவாக மாற்றி அமைக்க அவர் முயன்றார். சென்னை நகரில் 1934, 1935 -ஆம் ஆண்டுகளில் தமிழரின் தேசியத் திருநாளைச் சீரோடும், சிறப்போடும் முதல் நாள் உழவர் திருநாளாகவும். இரண்டாவது நாள் புலவர் திருநாளாகவும். மூன்றாம் நாள் கலைஞர் திருநாளாகவும் `முப்பெருநாள் விழாவாகக்' கொண்டாடினார்கள்.  தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் புலவர் பெருமக்களால், `தமிழ்த் தேசியத் திருநாளாக' கொண்டாடும் வழக்கம் பரவிவிட்டது.

1945 அளவில், ஒருவர் மற்றொருவருக்கு அன்பையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் `பொங்கல் வாழ்த்து' முறையை இம்மறுமலர்ச்சி இயக்கமே வழக்கத்திற்குக் கொண்டு வந்தது. தமிழருடைய பண்பாட்டின் சிறப்பை உலகிற்கு அறிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கலுக்குரிய விழா நாளினைத் “திருவள்ளுவர் திருநாளாக'' கொண்டாட முன்வந்தனர்.

“சூரியனுக்கு தை முதல் நாள் பொங்கல் படையலிடுவதும், இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கலும், மூன்றாவது நாள் காணும் பொங்கலும் நடைமுறையில் இருக்கின்றன. 1000 அல்லது 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைமுறை இல்லை.

தை மாதம் அறுவடையான புது அரிசியை புது மண்பானையில் இட்டு, பொங்கலிட்டு வணங்கி அனைவருக்கும் அளித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
நம் அன்றாட பயன்பாட்டில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டாலும், பொங்கல் திருநாளின்பொழுது மண்பானை முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. புதுப்பானை, மஞ்சள்-இஞ்சிக் கொத்து, இனிமை நிறைந்த கரும்புகளுடன் நம் வழிபாடு நடைபெறுகிறது.

தகவல்கள் : Epigraphy - கல்வெட்டியல்.

#பொங்கல் திருநாள்
#ksrpost
15-1-2024.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...