*ஆதிச்சநல்லூர் அகழாய்வின்போது இரும்புப் பயன்பாட்டின் தொன்மை மீது இவ்வளவு ஆர்வம் மக்களுக்கு தெளிவாக இல்லை* என்று ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனரும் மத்திய தொல்லியல் முன்னாள் கண்காணிப்பாளருமான சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் கூறும் போது நான் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியில் இருந்த போது கிடைத்த இரும்புப் பயன்பாடு மிகவும் தொன்மையானது என்பதை உணர்ந்து இருந்தேன். ஆனால் அதன் அடிப்படையில் அந்த அகழாய்வு குறித்து நான் எதுவும் எழுதவில்லை. உண்மையில் அந்த அகழாய்வு முடிந்தபின் அங்கு இருந்தவர்கள் எதை ஆய்வாக அரசுக்கு அனுப்பினார்கள் என்றும் எனக்கு தெரியாது! ஆனால் அம் முடிவுகள் 2900 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்பட்டது.
அதேசமயம் கேரள மாங்காடு பகுதியில் அகழாய்வு செய்த போது அங்கு கிடைத்த இரும்பின் உபயோகம் ஆயிரத்தில் இருந்து ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்தது.
நான் ஆதிச்சநல்லூரில் ஆய்வு செய்தபோது இரும்பின் மீது இவ்வளவு ஆர்வங்கள் எல்லாம் அங்கு உண்டாகவில்லை. மத்திய அரசும் அதன் ஆய்வுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி பரிசோதிக்கிற திட்டமும் அப்போது இல்லை. ஆதிச்சநல்லூரில் மறுபடியும் ஆய்வு செய்த போதும் கூட இரும்பின் தொன்மை குறித்த முடிவுகள் வரவில்லை. இன்றைய தொல்லியல் ஆர்வத்தை விடுங்கள் உண்மையில் ஆதிச்ச நல்லூர் ஆய்வை அப்போது இருந்து முறையாகச் செய்திருந்தால் இன்னும் கூடப் பின்னோக்கிய தமிழர் சமூகத்தின் பயன்பாட்டில் இருந்து வந்த இரும்பின் காலம் குறித்துச் சிறப்பாக அறிய முடிந்திருக்கும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
இந்த ஆய்வு முடிவு ஒருபுறம் இருக்க
இங்கு சிலர் எல்லாம் எங்கள் காலத்தில் தான் நடக்கிறது என்று சொல்லிப் பெருமை பேசும் போது நமக்கு காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதைதான் ஞாபகத்தில் வருகிறது ! ஆதிச்ச நல்லூர் நாகரிகம் முதன்மையானது வையபுரி பிள்ளை போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.
இங்கு தாமிரபரணியின் தீராவாச கரையில் சிவகளை. அகழ் பணியில் முதுமக்கள் தாழியிலிருந்து கிடைத்த இரும்புப் பொருட்களின் காலம் கி.மு. 2953முதல் கி.மு. 3345 ஆய்வுகள் சொல்கின்றன என தகவல். ஆதிச்சநல்லூரில் இரும்புப் பொருட்கள் கிடைத்தன. (காலம் கிட் தட்டகி.மு. 2522.) இங்கே இரும்பு பயன்பாடு இருந்துள்ளது.
"ஆதி தச்சநல்லூர்" எனும் ஆதிச்சநல்லூர்,உலக அளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட நகரங்களில் ஒன்று. 1876 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் முதலாவது அகழ்வாய்வு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருள்களை, அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு செய்யப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரியவந்துள்ளது.
ஆதிச்சநல்லூரில் கோட்டைச்சுவர் ஒன்று சத்தியமூர்த்தியின் மேற்பார்வையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோட்டைச்சுவர் மக்கள் வாழ்ந்த இடமாகும். தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட தொல்லியல் களங்களான அமிர்தமங்கலம் போன்ற இடங்கள் இடுகாடுகளை மட்டுமே கொண்டன. ஆனால் ஆதிச்சநல்லூரிலேயே முதன்முதலாக இடுகாட்டையும் சேர்த்து மக்கள் வாழிடமும் கண்டறிப்பட்டது. இந்த மக்கள் வாழிடம் ஆதிச்சநல்லூரின் இடுகாட்டில் இருந்து 100 மீட்டர் தள்ளி வடக்கிலும் வடமேற்கிலும் உள்ள சரிவுகளில் உள்ளது.
ஆய்வாளர் சத்தியமூர்த்தி மக்கள் வாழ்ந்த இந்த கோட்டை குடியிருப்பின் கோட்டைச்சுவர் சீரான வடிவத்தில் இருப்பதையும் அக்கோட்டை குடியிருப்பில் குயவர்களின் சிறு குடியிருப்பையும் கண்டறிந்துள்ளார். மூன்று பானைச்சூளைகளும் பானைகளை சுட்ட சாம்பலும் கரியும் உடைந்த பானையோடுகளும் அக்குடியிருப்பில் உள்ளன. இரும்பு கத்தியும் பாசி மணிகளின் உருவாரங்களும் கார்னேலியன் மணிகளும் கோவக்சு மணிகளும் பெருங்கற்காலக் குறியீடுகளை கொண்ட பானையோடுகளும் எலும்பால் செய்யப்பட்ட கருவிகளும் இக்கோட்டைச்சுவர் இருந்த பகுதிக்குள் கிடைத்துள்ளன. சத்தியமூர்த்தியின் கருத்துப்படி ஆதிச்சநல்லூரின் இடுகாட்டின் காலமான கி.மு. 1000 ஒட்டியே இக்கோட்டை மக்களின் காலமும் இருந்திருக்க வேண்டும் என்கிறார்.
•••••••
பழந்தமிழரும் இரும்பும் >> இலக்கியச் சான்றுகள் :-
இற்றைக்கு 5200 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் இரும்பினைப் பயன்படுத்தியிருப்பதும், தமிழர்களே இரும்பினை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள் என்ற செய்தி வந்திருப்பதும் தெரிந்ததே! இந்த இரும்புப் பயன்பாடு பற்றிச் சங்க இலக்கியங்கள் என்ன சொல்லுகின்றன என இப் பதிவில் பார்ப்போம். பழந்தமிழர் இரும்புத் தாதுக்களைச் சேகரித்துச் சிறிய களிமண் உலையில் தோல் துருத்தியின் உதவியால் இரும்பை உருக்கி வந்திருப்பதைச் சங்க இலக்கியங்களின் வழியாக அறியமுடிகின்றது. உலைக்கலன்கள் இருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் கொடுமணலில் கிடைத்தள்ளன (முதலாவது படம் காண்க). இத்தகைய இரும்பு உலைகள் சூடான நிலையில் காணப்படுவதைப் பின்வரும் பாடல்வரிகள் காட்டுகின்றன.
`இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த
தோய்மடற் சின்னீர் போல `
: நற்றிணை 133 :9-10
தலைவியின் காமநோய் சிறிது தணிவதற்கு உவமையாக `உலைக்கலனில் கொதிக்கும் இரும்பின் மீது நீர் தெளிக்கும் போது சூடு குறைவது` உவமையாகக் கூறப்படுகின்றது. மக்கள் அக் காலப் பகுதியில் நன்கு அறிந்திருந்த ஒன்றினையே புலவர்கள் உவமையாகக் கூறுவர், அவ்வாறாயின் உலைக்கலன்கள் அன்று பழந்தமிழரால் நன்கு அறியப்பட்டிருந்தது என்பதுதானே பொருள்.
அகநானூறு 202 ஆவது பாடலிலும் (அகம் 202: 5-7), அகநானூறு 72 ஆவது பாடலிலும் (அகம் 72: 3-6) உலைக்களத்தில் தீப்பொறிகள் பறக்கும் செய்திகள் சொல்லப்படுகின்றன.
இரும்பு உருக்கும் இடம் `உலைக்களம்` எனவும் , உருக்கப்பட்ட இரும்பில் இருந்து கருவிகள் செய்யப்படும் இடம் ‘கொற்றுறை’ எனவும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
`பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்`
: புறநானூறு 95: 4-5
இரும்பு உருக்கும் தொழிலுக்குக் குறடு , துருத்தி ஆகிய கருவிகள் பயன்படுத்தப்பட்டமையினைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. துருத்தியும் உலையும் இணையும் இடமானது, அதாவது துருத்தியின் குழாய் முனையானது `குருகு` எனப்படுகின்றது. குருகு எனப்படும் துருத்தியின் குழாய் முனையினை `உலைமூக்கு` எனவும் சொல்வர். இத்தகைய குருகு பற்றிய செய்தி அகநானூற்றுப் பாடலில் உண்டு.
`நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி`
அகநானூறு 202 : 5-6
இரும்பின் மூலம் என்னென்ன கருவிகள் செய்யப்பட்டன? வேல், வில், அம்பு, வாள் போன்ற போருக்கான ஆய்தங்களும் அரிவாள், மண்வெட்டி போன்ற உழவுத் தொழிலுக்கான கருவிகளும் செய்யப்பட்ட செய்திகளைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அதற்கான தொல்லியல் சான்றுகளை இரண்டாவது மூன்றாவது படங்களில் காண்க {சிவகளை, ஆதிச்சநல்லூர் தொல்லியல் சான்றுகள்}.
இரும்பு துருப்பிடிக்காமல் நெய் பூசிக் காக்கும் முறையினை புறநானூறு 95 ஆவது பாடலில் { காழ்திருத்திநெய் யணிந்து} காணலாம்.
இரும்பிலிருந்து எஃகு ( Steel ) செய்யப்படுவது தெரிந்ததே! எஃகு பற்றிய செய்தி நற்றிணையில் வருகின்றது.
`நெய் பட்டன்ன நோன்காழ் எஃகின்`
: நற்றிணை 324-5
இவ்வாறு எண்ணற்ற இரும்புப் பயன்பாடு பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன, அவன்றினை இன்று வெளியான தொல்லியல் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன.
#NewIronAge
#ஆதிச்சநல்லூர்
#adhichanallur
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
24-1-2025.
No comments:
Post a Comment