Friday, May 8, 2015

இலங்கையில் அவர்கள் உயிரோடுள்ளனரா? - ARE THEY ALIVE IN SRI LANKA .


பிரித்தானியத் தமிழ்பேரவையின் தலைவர் நண்பர். ரவி அவர்கள் இன்றைக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் மின்னஞ்சல் மூலமாக எனக்கு  ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.

அதனை தலைவர் கலைஞர் அவர்களுடைய பார்வைக்குக் கொண்டுசெல்ல இருக்கின்றேன். அந்தக் கடிதத்தில் 2009 மே-18 அன்று முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் பிறகு, இலங்கை இராணுவம் அழைத்துச் சென்ற தமிழர்கள் எத்தனை பேர், அவர்களது நிலைமைகள் என்ன, அவர்கள் எங்கே இருக்கின்றார்கள்? போன்ற விபரங்கள் தெரியவேண்டுமென்று நியாயமான வினாக்களைக் கேட்டுள்ளார்.

மைத்ரி சிரிசேனா, தமிழர்களுடைய வாக்குகளைப் பெற்று அதிபர் ஆகிவிட்டார். திரு. இரா. சம்பந்தன் அவர்கள் தலைமையில் உள்ள  தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தேர்தலில் மைத்ரியை ஆதரித்தது.

இந்நிலையில், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளான,
 முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் போது இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர், அவர்களில் காணாமல் போனவர்கள் எத்தனை பேர் , அவர்கள் எங்குள்ளார்கள், அவர்களின் தற்போதைய நிலைமை என்ன என்று மைத்ரி சொல்ல வேண்டிய கடமை மட்டுமல்லாமல் அவர்களை விடுதலையும் செய்ய வேண்டும்.

1980 காலகட்டங்களில்  திரு.வேலுப்பிள்ளைபிரபாகரன் என்னோடு இருக்கும் பொழுது உடனிருக்கும்,  தம்பியுடைய சகா பேபிசுப்பிரமணியம் தென் இலங்கையில் காலி அருகில் இருண்ட பாதாள அறையில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தன, அதைக் கேட்கும் போது வேதனையாக இருந்தது.

அது போல நண்பர் பாலகுமார் போன்ற பல முக்கிய போராளிகளும் இம்மாதிரியே சிறை வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற செவி வழிச் செய்திகளும் வந்தன. இந்த நிலையில் நண்பர் ரவி அவர்கள் எழுப்பியுள்ள வினாக்கள் அவசியமானது. இதற்கு உரிய நடவடிக்கைகளை இலங்கை அரசு செய்ய வேண்டும். இவற்றில் சம்பந்தன் அவர்களும் அவரின் சகாக்களும் முனைப்புக் காட்ட வேண்டிய கடமை உள்ளது.

இத்தோடு............

* தமிழர்களுடைய நிலங்களைத் திரும்ப ஒப்படைப்பது,
*வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தைத் திரும்பப் பெற்று சுதந்திரமாக தமிழர்கள் வாழ வகை செய்வது.
*வடக்குக் கிழக்கு மாகாணக் கவுன்சில்களுக்கு, காவல்துறை, நில நிர்வாகம், மீன்பிடித் தொழில் போன்ற அதிகாரங்கள் வழங்கபடவேண்டியது  போன்ற கோரிக்கைகள் மைத்ரி கவனிக்க வேண்டிய தார்மீக கடமை உள்ளது.















 
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-05-2015.

No comments:

Post a Comment

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*  ———————————— From: OHCHR-UN Human Rights <ohchr-media@un.org> Sent: Friday,...