#வைகோ அவர்கள் திமுகவை ஒருபோதும் விமர்சிக்க மாட்டேன் என்று சொல்கிறார். வேடிக்கையாக இருக்கிறது. ஆளுங்கட்சி நன்மை செய்தால் பாராட்ட வேண்டியதுதான். அது எல்லோரும் செய்யக் கூடியது. அதேபோல் ஆளுங்கட்சியின் அவலங்களையும் ஆளுங்கட்சியின் மக்கள் விரோதப் போக்குகளையும் அதன் நிர்வாகவன்முறைகளையும் விமர்சிக்க மாட்டேன் என்று சொல்வது எதில் சேர்த்தி. அதையெல்லாம் விமர்சிக்க மாட்டேன் என்று சொல்வது ஒரு அரசியல்வாதியின் இலக்கணத்தில் எப்படிப் பொருந்துகிறது என்பது தான் தெரியவில்லை. நாங்கள் அவரோடு இருக்கும்போதெல்லாம் அவருடைய ஆவேசமான தீவிரமான மனப்போக்குகள் ஈழத்தமிழர் ஆதரவு மற்றும் திமுக வின் குடும்ப அரசியலை எதிர்ப்பது போன்றவற்றில் மொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்தார் என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. இப்போது ஒரே அளவில் வாய்மூடி மௌனியாக எப்படிப் போனார் என்பதும் அதைவிட வியப்பாக இருக்கிறது. வருங்காலத்தில் எதிர்காலச் சந்ததியினர் அவரைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை அவர் யோசிக்க வேண்டும். ஒருபுறம் பார்த்தால் சிபிஎம் போன்ற கட்சிகள் ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருந்தாலும் ஒரு அராஜகம் ஏற்படும் போது அரசின் மனசாட்சியைக் கேள்வி கேட்கும் படி அதற்கு எதிர்வினை செய்கிறார்கள்.
ஆளும் கட்சியின் அவலப் போக்கை கண்டிக்கிறார்கள். திருப்புவனத்தில் மிகக் கொடூரமாக உடல் முழுக்க அடித்துக் காயப்படுத்தி மிளகாய் பொடி எல்லாம் தூவிக் கொலை செய்துஇருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் பேசமாட்டேன் என்று சொல்வது ஒரு தலைவரின்அரசியலுக் கான இலக்கணம் இல்லையே. இப்படி எல்லாம் பேசும் வைகோ திமுகவின் ரசிகர் மன்றத் தலைவராக மாறி இருக்கிறாரா? அல்லது தனது கட்சியை ரசிகர் மன்றக் கூட்டமாக மாற்றி விட்டாரா? மதிமுக எதற்காக உருவாக்கப்பட்டது என்கிற அடிப்படைக் கொள்கையையே இழந்து நிற்கிறார். அரசியல் ஜனநாயகத்தை காப்பதற்காக உருவான திமுக வாரிசு அரசியலாக சுருங்கிவிட்டது என்று சப்தமிட்டவர் இன்று ஸ்டாலினுக்கு மெய்க்காப்பாளராக மாறி அவருக்கு எந்த ஆபத்து வந்தாலும் தடுப்பேன் என்று காவல்காரனாக நின்று கொண்டிருக்கிறார். மட்டுமல்லாமல் கலைஞர் இறக்கும் தருவாயில்நான் ஸ்டாலினுக்கு உதவியாக இருப்பேன் என்று அவரின் கைப்பிடித்து வாக்குறுதி தந்ததாகவும் சொல்கிறார். சொந்தக் கட்சியைக் காப்பாற்ற வழி இல்லாமல் இன்னொரு கட்சியை காப்பாற்றுவதற்கு இவருக்கு என்ன இருக்கிறது. இதை நான் எழுதினால் இதன் பின்னால் நின்று ஆயிரம் லொள்ளு பேசுவார்கள். ஆளும் கட்சியின் மெத்தனத்தில் இருக்கும் இந்த அவலங்களைச் சுட்டிக் காட்டுவதன் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் வெறுமனே நக்கல் பேசுகிறவர்கள் வெட்டி அறிவுரை சொல்பவர்கள் யாரும் இந்த பின்னூட்டத்தின் கீழ் வர வேண்டாம். வெறும் முட்டாள் விசுவாசம் சமூகத்தை காப்பாற்றாது. உண்மையை உரக்கச் சொல்லும் துணிவு வேண்டும் தவறு நேரும்போது இடித்துரைக்க வேண்டும்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்.
( படம்- இன்றைய ஆனந்த விகடன்)
3-7-2025.
No comments:
Post a Comment