திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப் பட்ட சமயம். அவருக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பதற்றமான நிலை. அண்ணாதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கியதுடன், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளியிடுவதில் மும்முரமாக இருந்தார். அதற்கு பல முட்டுக்கட்டைகள். அப் போது, திமுகவில் இருந்த மதுரை முத்து, ‘‘அந்தப் படம் வெளிவராது. படம் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன்.’’ என்று சவால் விட்டார். எம்.ஜி.ஆர். பற்றியும் கடுமையாக மேடைகளில் விமர்சித்தார்.
அந்த சமயத்தில் சென்னை சத்யா ஸ்டுடியோவில் தமிழகம் முழுவதும் இருந்து திரண்டு வந்த ரசிகர்களை தினமும் எம்.ஜி.ஆர். சந்தித்து, அவர் களிடம் பேசுவார். ஒருநாள், அப்படிப் பேசும்போது ‘‘மதுரை முத்தண்ணன் அவர்கள் கூட…’’ என்று குறிப்பிட்டார். அப்போது குப்புதாஸ் என்ற ரசிகர், முத்துவைப் பற்றிக் கடுமையாக விமர்சித்து, ‘‘அவரைப் பற்றி பேசாதீர்கள்’’ என்று கத்தினார்.
அரசியலில் எதிரிகளாக இருந்தாலும் மரியாதையோடு பேசும் எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்தது. கத்திய ரசிகரைப் பார்த்து, ‘‘அவர் யாரு? நம்ம ஆளா? குழப்பம் விளைவிக்க வந்திருக்கும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவரா?’’ என்று கேட்டார். அந்த ரசிகரும் ‘‘நான் எம்.ஜி.ஆர். மன்றத்தைச் சேர்ந்தவன்’’ என்று சொல்லி தன்னிடம் உள்ள அடையாள அட்டையைக் காண்பித்தார். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., சற்று கோபம் தணிந்தார்.
கத்திய ரசிகரைப் பார்த்து, ‘‘தம்பி, முத்தண்ணன் இன்று என்னை கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால், அவர் திராவிட இயக்க வளர்ச்சிக்காக செய்த தியாகங்களை மறக்கலாமா? ஏன்? முத்தண்ணனே காலப்போக்கில் நம் பக்கம் வரலாம். யாரையும் கண்ணியக்குறைவாக பேசாதீர்கள்’’ என்று கூறிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்!
சில ஆண்டுகளில் நிலைமைகள் மாறின. அதிமுகவில் சேர விரும்பினார் மதுரை முத்து. கட்சியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அவரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.! இதுகூட பெரிதல்ல; பின்னர், முத்துவை மதுரை மேயராகவும் ஆக்கினார்!
- தி இந்து
No comments:
Post a Comment