Tuesday, July 14, 2026

நடந்தாய் வாழி காவேரி

 நடந்தாய் வாழி காவேரி

காவிரிநாடன் கரிகாற்சோழன் கட்டி வைத்த கல்லணை- காவிரியா காவேரியா? முகநூல் நண்பர் ஆற்றல் பிரவீன் குமார் 'காவிரியா காவேரியா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். 'கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை.. காவிரிப் பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம் காதல் பெருக்கெடுத்தால் புகலிடம் பெண்ணிடம்... ' 'பன்னிரண்டு நூற்றாண்டு சென்றது -அணை பழுதில்லாமல் காலங்களை வென்றது' 'அந்தக் காலப் பெண்மை போன்ற அணையிது' 'காவிரியின் கெண்டை என்ன துள்ளுது ? உன் கண்ணைப் பார்த்து சொந்தம் என்று சொல்லுது! ' 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தபால்காரன் தங்கை என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளில் சில! எழுதியவர் வேறு யார்?! கவியரசர் கண்ணதாசன்தான்! 'காவேரி கரையிருக்கு' இதுவும் அவர்தான்! 'காவிரிப் பெண்ணே வாழ்க' இது மாயவநாதன்! 'காவிரி பாயும் கன்னித்தமிழ் நாடு ' - ஆர். பாலு 'காவேரி ஓரம் கதை சொன்ன காதல்' --கே.டி.சந்தானம் 'சிங்காரிதான் காவேரி காவேரிதான் சிங்காரி' -- மருதகாசி 'காவேரித் தண்ணீர் பட்டால் கன்னியர்மேனி தங்கம் ' ---- உடுமலை நாராயண கவி. தமிழ்த் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதிய கவிஞர்கள் 'காவிரி' என்றும், 'காவேரி' என்றும் இரு விதமாகவும் இடத்துக்குத் தகுந்தவாறு எழுதிப் போந்தனர்! சம்பந்தர் 'பொன்னி ' என்றும் பாடிச் சிறப்பிக்கிறார். பொன்னியின் செல்வனை அறியாதவர் யார்? சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு நூல்கள் இரண்டு கரிகாலனைப் பாடுகின்றன. ஒன்று- முடத்தாமக்கண்ணியார் இயற்றிய 'பொருநராற்றுப்படை.' மற்றொன்று: கடியலூர் உருத்திரங்கண்ணனார் படைத்த 'பட்டினப்பாலை.' பொருநராற்றுப்படை நூலின் இறுதியடியில் ஒரேயொரு முறை 'காவிரி' என்ற சொல்லை கையாண்டுள்ளார் முடத்தாமக்கண்ணியார். பட்டினப்பாலையில், 'மலைத்தலைய கடற்காவிரி' ( 6) 'மாஅ காவிரி மணங்கூட்டும்' (116) 'கங்கை வாரியும் காவிரிப் பயனும்' ( 190) புறநானூற்றில் கோவூர் கிழார், 'புனிறுதீர் குழவிக் கிலிற்று முலைபோலச் சுரந்த காவிரி... ' என்று பாடுகிறார். பிரசவித்த பிறகு குழந்தைக்காகப் பால் சுரக்கும் மார்பைப் போன்ற காவிரியாறு' ஆக கரிகாலனைப் பாடும் இரண்டு பத்துப்பாட்டு நூல்களிலும் காவேரி என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை! சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள், 'திங்களைப் போற்றும்' 'ஞாயிறு போற்றுதும்' என்று போற்றியவர் நூலின் ஐந்தாவது அடியிலேயே 'காவிரிநாடன் ' என்று சோழனைச் 'காவிரிநாடன்' என்று சோழனைச் சிறப்பித்தலால் 'காவிரி'யே அவர் நெஞ்சிலிருந்து முதலில் எழுந்தது எனலாம். கடலாடு காதையில், 'தாங்கா விளையுள் காவிரி நாடும்' (31), 'கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று'(164), என்றும் குறிப்பிடுவர், ஏழாவது காதையான கானல்வரியில் 'கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி' 'கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி' 'விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி' என்று பலமுறை காவேரி என்றே குறிப்பிடும் இளங்கோவடிகள் இதன் முதல் பகுதியில் வரும் கட்டுரையில், 'கோவலன் கையாழ் நீட்ட அவனும் காவிரியை நோக்கினவும் ' என்றே குறித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பின்னர் வருவபவை யாழை மீட்டிப் பாடத் தொடங்குவதால், (' மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்குமன்') இசையமைதியைக் கருதியே இளங்கோவடிகள் 'காவேரி' என்று பாடினார் என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய முடிவு. கம்ப ராமாயண சூர்ப்பனகை படலத்தின் முதல் பாடலில் வரும் ஈற்றடி ' ( சான்றோர்) கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்' என்பது. இதற்கு உரை கண்ட மு. ரா. க. அவர்கள், 'கோதாவிரி என்னும் பாடம் பிழையுடைத்து. என்னை? பிங்கலந்தையினும் சூடாமணி நிகண்டினும் வடமொழி அமரத்தினும் கோதாவரி என்றே வழங்கலான்' என்று கூறியிருப்பதை வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் தமது 'கம்பராமாயண சாரம்' நூலில் மேற்கோள் காட்டியிருக்கிறார். சங்க இலக்கியங்களில் 'தாமிரபரணி' என்ற பெயரில் பொருநையாறு எங்கேயும் ( நானறிந்த வரையில்) குறிப்பிடப்படவே இல்லை! அதுபோல இளங்கோவடிகள்தான் முதன்முதலாக 'காவேரி' என்ற பாடத்தை இசை வடிவத்தை எண்ணிப் பயன்படுத்தியுள்ளார் என்று கருதுகிறேன். மகாகவி பாரதியாரும், 'காவிரி தென்பெண்ணைப் பாலாறு' என்றுதான் பாடியிருக்கிறார்! இதனால் பெறப்படுவது யாதெனில் 'காவிரி' தானே தவிர, காவேரி' அல்ல என்பது. ஆனால் பெண்களுக்குப் பெயர் காவேரி என்று வைப்பது வழக்கமாக இருந்தது. காவேரி என்றவுடன் ஒரு பெண் நினைவுக்கு வருகிறாள். காவிரி என்றால் அங்ஙனம் வருவதில்லை! ஆங்கிலத்தில் இன்னும் 'Cauvery' தான்! காகம் கமண்டலத்தில் உட்கார்ந்து தட்டி விட்டதெல்லாம் கலையுரைத்த கற்பனையே! ஜெயமோகன் கொற்றவை நாவலில் 'கான்விரி' என்கிறார்!



No comments:

Post a Comment

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

  நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில,மாவட்ட, மண்டல் மற்றும் அனைத்து பிரிவுகளைச...