Tuesday, July 14, 2026

நடந்தாய் வாழி காவேரி

 நடந்தாய் வாழி காவேரி

அமரர் தி. ஜானகிராமன் அவர்கள் சிட்டி ( பெ. கோ. சுந்தரராஜன்) அவர்களுடன் இணைந்து காவிரியாறு தொடங்கும் தலைக்காவிரியில் தொடங்கி, அது கடலோடு கலக்கும் புகார் வரையிலும் பயணம் செய்து தங்கள் அனுபவங்களை 'நடந்தாய் வாழி காவேரி' என்று இளங்கோவடிகள் வாழ்த்துத் தொடரைத் தலைப்பாக்கி நூலாக்கினார்கள். இரண்டு மாநில மக்களால் வணங்கப்படும் ஒரு பேராறு, அகன்று விரிந்த காவிரியாறு தலைக்காவிரியில் ஒரு சின்னஞ்சிறு சுனையிலிருந்துதான் பிறக்கிறது! அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த அனுபவத்தை இதோ:- "...... காவேரி பிறக்கும் இடம் ஒரு சிறிய சுனை. சுமார் நான்கடிக்கு நான்கடி சதுரமாக ஒரு சின்ன தொட்டிபோல் கட்டியிருக்கிறார்கள். அதன் மீது கல்லால் சிறிய அலமாரி போன்ற ஒரு கட்டடம். அந்தக் கட்டடத்திற்கும் பின்னால் ஒரு மேடை மீது இரண்டு சிறிய மரங்கள்.... " "காவேரி உற்பத்தியாகும் இடம் இதுதான் என்று பட்டர் காட்டியபோது, அந்த ஆழ்ந்த அமைதிக்கிடையே உண்மையான பெரியவர்களின் புனித நினைவு வந்து நெஞ்சை நிறைத்தது. இந்தச் சிறிய சுனைதான் மலையிலும் காட்டிலும் விழுந்து பெருகுகிறது....
" ... இப்படியே பெருகிப் பெருகி விரைந்து, சீறும் ஓடையாகவும், அகண்ட காவிரியாகவும் வளர்ந்து, வளர்ந்து பலப்படுத்திக் கொள்கிறது. பிறகு தன் உடலையே பல கூறும், கிளைகளுமாக்கி, மாந்தர்களின் உய்வுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, கடைசியில் அடக்கமும் பணிவும் சோர்வும் நிறைவுமாகக் கடலில் கலந்து விடுகிறது. எத்தனை லட்சம் மக்களுக்கு வாழ்வு! எத்தனை லட்சோப லட்சம் நிலப்பரப்புகளுக்குப் பசுமை! எத்தனை கனிவளம்! எத்தனை தாவர வளம்! எத்தனை தொழிற்சாலைகள்! எத்தனை ஒளிசக்தி! இயந்திர சக்தி! இவ்வளவும் செய்துகொண்டிருக்கிற ஒரு மகத்தான சக்தியின் தொடக்கத்தில் எவ்வளவு அமைதி, எவ்வளவு அடக்கம்! பெரிய காரியங்களைச் செய்யத் தொடங்குபவர்கள் ஆரம்ப சூரர்களாக இருப்பதில்லை. ஆர்ப்பாட்டமும் அமளியுமாகப் பறை கொட்டுவதில்லை. பயனைக் கொண்டுதான் பெரியவர்கள் தொடங்கும் பணியின் நோக்கங்களையும் நுட்பங்களையும் அறிய முடியும் என்று காளிதாசன் அருளிய வாக்குக்கு ஒரு சான்று வேண்டுமானால் தலைக் காவிரியின் இந்த மௌனச் சுனையைத்தான் காணவேண்டும்..... " என்று உணர்ச்சி பொங்க எழுதிச் செல்வது எங்கள் பொய்யாக் குலக்கொடியான பொருநைக்கும் பொருந்துவதை எண்ணி பெருமிதமும் நன்றிப்பெருக்கும் மனதில் எழ, நடக்க முடியாத அளவுக்கு உடல்நிலை இருந்தாலும் கல்லணைக் கரையில் அங்குமிங்குமாக கற்றதையெல்லாம் நினைத்து நினைத்து மனமுருகி வணங்கி நடந்தேன்! ( கடந்த 19.6.2025 வியாழனன்று மதியம் முதல் மாலை வரை!) 'உழவர் ஓதை மதகு ஓதை உடைநீர் ஓதை தண்பதம் கொள் விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி! ' -- சிலப்பதிகாரம்/ கானல்வரி ( ஓதை என்றால் ஓசை) 'புதுவெள்ளம் பெருகி வருவதைக் கண்ட உழவுத்தொழில் செய்யும் வேளாண்குடி மக்கள், மகிழ்ச்சியால் எழுப்புகின்ற ஆராவார ஓசையும், நீர் தேங்கி மதகுகளிலே வழிந்து செல்லும்பொழுது ஏற்படும் ஓசையும், கரைகளையும் வரப்புகளையும் உடைத்துக் கொண்டு ஓடுவதால் ஏற்படும் ஓசையும், புதுப்புனல் வருகையை விழாவாகக் கொண்டாடும் ஆண்கள் பெண்கள் அனைவராலும் எழுப்பப்பட்ட ஓசையும், மிகச் சிறப்பாக ஒலிப்பதைக் கேட்டபடியே செல்லும் காவேரியே ! நீ வாழ்க வாழ்க வாழ்க! என்பது பொருள்! கிட்டத்தட்ட 1800 ஆண்டுகளுக்கு முன்பு செங்குட்டுவனின் இளவலாகிய இளங்கோவடிகள் இவற்றையெல்லாம் நேரில் காணாமல் வெறும் கற்பனையில் மட்டும் எழுத முடிந்திருக்காது என்று நம்புகிறேன். இன்று அடியேன் குடகு மலையிலோ அல்லது புகார் நகரிலோ நின்றிருக்கவில்லை. திருச்சி கல்லணைக் கரையில் நிற்கிறேன். ஆனால் மானசீகமாக எல்லா இடங்களுக்கும் செல்ல முடிகிறது! முதல் நாள் மங்கிய மாலையில் பொருநைக்கரையில் நின்ற நிலையும் மறுநாள் மதியம் முதல் மாலைவரை காவிரிக்கரையில் நின்ற நிலையும் என்னெவென்பேன் என்னவென்பேன்! முதல் ஆறு படங்கள் - கிழக்கு நோக்கி நகரும் காவிரியாறு படங்கள் 7,8,9 - வடக்கில் பிரிந்து செல்லும் கொள்ளிடம் ஆறு. படம்-10: கிளை பிரிந்து செல்லும் வெண்ணாறு.












No comments:

Post a Comment

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

  நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில,மாவட்ட, மண்டல் மற்றும் அனைத்து பிரிவுகளைச...