வரும் ஜூன்12ம் நாள் மேட்டூர் அணைத் திறக்கப்பட்டு,
காவிரியில் தண்ணீர் வந்தால் தான் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி பயிர் செய்ய முடியும். அது நடப்பதாகத் தெரியவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கையிலிருந்தே, காவிரி தீரவாச விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவருகின்றது.
அதை ஈடுகட்டக் கூடிய வகையில், விவசாயத்திற்கு 12மணி நேரம் மும்முனை மின்சாரம் தமிழக அரசு வழங்குமென்றும், விவசாயத்திற்குத் தேவையான கருவிகள் வாடகையின்றியும், நுண்ணூட்டச்சத்து மானியமும், இலவச ஜிப்சமும் வழங்குவதற்கு 40.97கோடி ரூபாய் செலவிடப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கடந்த 75ஆண்டுகளில் குறுவைப் பயிறுக்காக,
ஜூன் மாதம் 12ம் தேதி, 18தடவை தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. தலைவர் கலைஞர் ஆட்சியில், கர்நாடகத்திடம் பேசி குறுவைப் பயிருக்குத் தண்ணீர் பெறப்பட்டது என்பது கடந்தகால செய்திகள்.
கடந்த நான்குஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் குறுவைப்பயிருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. சம்பிரதாயமாக அதிமுக அரசு அறிவித்துள்ள இந்தத் திட்டங்களின் மூலமாக இடைத்தரகர்கள் தான் கொள்ளையடித்து வயிற்றை நிரப்புவார்கள்.
90அடி நீர்மட்டம் மேட்டூர் அணையில் தேக்கப்பட்டிருந்தால்தான் குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கமுடியும். இன்றைக்கு கொள்ளளவு 72.68அடிகள் மட்டும் தான் உள்ளது. கர்நாடகம் காவிரி நீரைத் தமிழகத்திற்கு திறந்துவிட்டால்தான், மேட்டூர் அணையைத் திறக்கமுடியும் என்ற சூழல். தென்மேற்கு பருவமழையும் பொய்யுமா என்பது கேள்விக்குறி.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் திருச்சியை ஒட்டிய 4லட்சம் ஏக்கருக்கும் அதிகமான குறுவை சாகுபடி வயல்கள் தண்ணீரில்லாமல் காய்ந்துபோகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
தற்போது 60,000 ஏக்கருக்குக் குறைவாகத்தான் நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் பயிர் செய்ய முடியும்.
இச்சூழல் நீடித்தால், ஏக்கருக்கு மூன்று டன் வீதம் மொத்தம் 7லட்சம் டன் குறுவை நெல் உற்பத்தியை டெல்டா பகுதி இழக்கும்.
கர்நாடக அணைகளான, கிருஷ்ணராஜ சாகர் அணையில் 55விழுக்காடும், கபினியில் 66விழுக்காடும், ஹேமாவதியில் 16 விழுக்காடும், ஹாரங்கியில் 8விழுக்காடும் தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கர்நாடகத்திற்கு மனமில்லை.
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்குப் புறம்பாக கர்நாடகம் பாசான நிலங்களை அதிகமாக்கியும், கோடைகாலத்தில் சாகுபடி செய்வதையும் வாடிக்கையாக்கிவிட்டது.
ஏற்கனவே, தஞ்சை டெல்டாவில் கடுமையான வறட்சி நிலவுகிறது கடன் வாங்கி, தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்து விட்டதன் காரணமாக பத்துக்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.
இந்த நிலையில், தமிழக அரசு தஞ்சை மாவட்ட விவசாயிகளுடைய சிரமங்களை கவனிக்காமலும், அக்கறை எடுக்காமலும் இருப்பது கண்டனத்துக்குரியது. மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசும் காவிரி டெல்டா விவசாயிகளின் தேவைகளில் பாராமுகமாக இருக்கின்றது.
ஏற்கனவே மேகதாது ராசிமணலில் கர்நாடக அரசு தமிழகத்தின் எதிர்ப்பின் மீறி அணைகட்ட மத்திய அரசு ஊக்கமளித்து வருகின்றது . மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமும் இதற்கான ஒப்புதல் தரவும் இசைந்துள்ளது.
*காவிரியைப் போலவே, முல்லைப் பெரியாரிலும் சிக்கல்.*
தமிழகத்தின் தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையை தகர்த்துவிட்டு, புதிய அணை கட்ட தொடர்ந்து பொய்யான காரணங்களையும் சொல்லிக்கொண்டு வருகின்றது கேரளா.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் நியமித்த
நிபுணர் குழுவின் கூட்டத்தில் கேரள அரசுக்கு முல்லைப்பெரியார் அணைக்கு அருகில் புதிய அணைகட்ட ஆய்வுப் பணிக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதன் அறிவிப்பைக் கேரளாவுக்கு அனுப்பி வைக்கும் நேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட கண்டனங்களை மனதில் கொண்டு மத்திய அரசு இதை மறுத்துள்ளது.
கேரளாவின் நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப், “கொள்கை அளவில் மத்திய அரசு புது அணைகட்ட அனுமதித்துவிட்டது” என்று கூறியுள்ளார். கேரள அரசின் நீர்பாசன தலைமைப் பொறியாளர் மகாதேவனும் , “புதிய அணை கட்டியபின் பழைய அணையான முல்லைப்பெரியாரைச் செயலிழக்கச் செய்யமுடியும்” என்று கூறியுள்ளது வேதனையைத் தருகின்றது.
முல்லைப்பெரியாறு அணையை உச்சநீதிமன்றம் தன்னுடையத் தீர்ப்பில் ,“அணை திடமாகவும், வலுவாகவும் உள்ளது” என்று ஒத்துக்கொண்ட பின்னும் அணையை இடிக்க வேண்டுமென்னும் கேரள அரசின் நோக்கம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
999 ஆண்டுகள் சட்டபாத்தியமான நீர் உரிமையை மனதில் வைத்து தன்னுடைய சொந்தப் பணத்தில், பென்னி குயிக் என்ற ஆங்கிலேயர் கட்டிய அணையை இந்தியாவின் ஒரு மாநிலமே இடிக்க நினைப்பது எவ்வளவு முரணாக உள்ளது. எப்படி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா என்ற மனநிலையும் பன்மையில் ஒருமை எப்படி பொறுத்தமாக இருக்கும். ஒருமைபாடு என்று சொல்லிக்கொண்டு இப்படி விஷவிதைகளை விதைத்தால் கேடுதானே மிஞ்சும்.
பல்வேறு மொழிகளும், தேசிய இனங்களும் நிறைந்துள்ள இந்தியாவில் இப்படியான மனப்போக்கை மாநில அரசு காட்டுவதை, மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களும் ரசிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
முல்லைப்பெரியாரில் 152அடி உயரத்துக்கு நீரைத்தேக்கிக் கொள்ளலாம் என்ற உரிமையை தமிழக அரசு பெற்றிருந்தும் ஆட்சியிலுள்ள அதிமுக அரசு அதை நிலைநாட்ட தவறிவிட்டது.
2006பிப்ரவரி 27ம் நாள் உச்சநீதிமன்றம், “தமிழகம் 142 அடியிலிருந்து 152அடிவரை தண்ணீரைத்தேக்கி பயன்படுத்தலாம் என்ற தீர்ப்பு வெறும் தீர்ப்பாகவே உள்ளது. இதற்கிடையில் கேரள சட்டமன்றத்தில், “ஒரு சொட்டுத் தண்ணீர் பிறமாநிலங்களுக்கு கொடுக்க வேண்டுமென்றால் சட்டமன்றத்தின் அனுமதி வேண்டுமென்று ” ஒரு வினோதமான தீர்மானத்தைச் சட்டவடிவமாகக் கொண்டுவந்துள்ளது கேரள அரசு.
இதையெல்லாம் முறையடித்து தமிழகத்தின் உரிமைகளை உச்சநீதிமன்றத்தில் நிலைநாட்டிய பின்னும், முல்லைப்பெரியாறின் சிக்கல் முடியவில்லை.
இதற்கு காரணம் யார்? மத்திய அரசு.
காங்கிரஸ் ஆனாலும் சரி, பாஜக ஆனாலும் சரி கர்நாடக மாநிலத்தில் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டுமென்ற சுயநலத்தில், காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டத் தயங்குகின்றன.
முல்லைப்பெரியாறிலும் , நெய்யாறிலும், அடவிநயினாரிலும், செண்பகத்தோப்பிலும், அழகர் அணைத்திட்டத்திலும், ஆழியாறு-பரம்பிக்குளத்திலும், பாண்டியாறு-புன்னம்புழாவிலும், பம்பாற்றிலும் சிறுவாணி போன்ற தமிழக நீராதாரப் பிரச்சனைகளிலும் கேரளா செய்கின்ற மொண்டித் தனங்களை எந்தக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் கண்டு கொள்வதில்லை.
பாலாற்றில் ஆந்திராவின் போக்கையும் மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வாடிக்கையாகி விட்டது. தமிழ்கத்தில் ஆட்சியிலுள்ள ஜெயலலிதாவுக்கு வழக்குப் பிரச்சனையில் கர்நாடகத்தைப் பகைத்துக்கொள்ள விருப்பம் இல்லை.
காவிரியில் சாதித்துவிட்டதாக, பொன்னியின் செல்வி என்றும், முல்லைப்பெரியாரில் வெற்றியை நிலைநாட்டியதாக பாராட்டுகளும் வாங்கிக்கொண்டுவிட்டு இந்த இரண்டு வாழ்வாதாரப் பிரச்சனைகளிலும் சிக்கல் முற்றிக்கொண்டிருக்கும் போது ஜெயலலிதா மௌனம் சாதிப்பது ஏன்?
இப்படியான அராஜக நிலைகளே நீடித்தால் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்படுமா என்பதுதான் நமது கேள்வி.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-06-2015.
#KSRadhakrishnan
#KSR_Posts
No comments:
Post a Comment