Sunday, June 28, 2015

தி.மு.க - எமர்ஜென்சி – 1975 (6) DMK - Emergency - 1975 Article -6

தி.மு.க - எமர்ஜென்சி – 1975

_________________________________________









  1975 ஜூன் 12ம் நாள் அலாகாபாத் நீதிமன்றம் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.  இதனால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உட்பட  பல அரசியல் தலைவர்தலைவர்கள் நீதி மன்ற தீர்ப்புப்படி இந்திராகாந்தியை இராஜினமா செய்யவேண்டுமென நிர்பந்தம் செய்தனர்.

சர்வாதிகார சிந்தையுடன் சட்டத்தைத் தன் கையிலெடுத்துக் கொண்ட இந்திராகாந்தி பதவி விலகாமல் நாட்டில் நெருக்கடிநிலை பிரகடனத்தை  26 ஜூன் 1975ல் அமுல்படுத்தி ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் குழித்தோண்டி புதைத்தார். இந்தியா முழுவதும் சுதந்திர போராட்ட வீரர்களையும், தலைவர்களையும் பிணையில் வெளியே வரமுடியாதபடி சிறைக் கொட்டடியில் அடைத்தார்.

 இந்த நிலையில் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டுகிற ஆட்சியாக தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம்  தலைவர் கலைஞர் தலைமையில் நெருக்கடி நிலைக்கெதிராக குரல் கொடுத்தது. தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்காமல் ஜனநாயக சிந்தனையோடு  கலைஞர்  அவர்கள்  நெருக்கடி நிலையை எதிர்த்தார்.

27.6.1975 அன்று கலைஞர் அவர்கள் திமுகவின் செயற்குழு கூட்டத்தை கூட்டி நெருக்கடி நிலையை திரும்பப்பெற வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினார். இந்தியா முழுவதிலும் சிறையில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் திமுக கோரிக்கை முன் வைத்தது.

பெருந்தலைவர் காமராஜரும் நெருக்கடி நிலையைக் கண்டித்து திருத்தணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசினார்.  1975 ஜூலை 4ம் தேதி தமிழக முதலைமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜரை சந்தித்து ‘நாங்கள் ஆட்சியில் இருந்து விலகி போராடத் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

அதற்கு காமராஜர் ராஜினாமா செய்யவேண்டாம் , சர்வாதிகாரத்தை அழிக்க உங்கள் ஆட்சி இருந்தால்தான் நல்லது என்று கூறினார். அதன்பின் "நெருக்கடி நிலை" அமுலாகிய நான்காவது மாதத்தில் (1975 அக்டோபர் 2) காமராஜர் திடீரென்று காலமானார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை இந்திராகாந்தி டிஸ்மிஸ் செய்தார். ஆயிரக்கணக்கில் திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்திதாள்கள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டது, கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பேச்சுரிமைக்கு தடை விதித்தது. திமுக கொண்டு வந்த அனைத்து சமூக திட்டங்களையும் முடக்கியது. கல்வியை மத்திய ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு சென்றது. தமிழக அரசால் பலகோடி ரூபாய் செலவில்கட்டப்பட்டு திறக்கும் நிலையில் இருந்த சென்னை வள்ளுவர் கோட்டத்தை டெல்லி அதிகாரிகளே திறந்து வைத்தார்கள்.

இந்த நிலையில் 3 பிப்ரவரி 1976ம் ஆண்டு கலைஞர் அண்ணா சதுக்கத்திற்கு மலர்வளையம் வைக்கச் சென்ற போது அதையும் டெல்லி அரசாங்கம் தடுத்தது. செய்தித்தாள் தணிக்கைச் செய்யப்பட்டதால் கைது செய்யப்பட்ட தோழர்கள் பற்றிய விவரம் வெளியிட முடியாதபடி அடக்குமுறை செய்யப்பட்டது. அதையும் மீறி அண்ணா சமாதிக்கு மலர்வளையம் வைக்கவராத தலைவர்கள் என்று கைது செய்து சிறையில் இருக்கும் தலைவர்களை மறைமுகமாக மக்களுக்குப் புரியும்படி முரசொலியில் எழுதினார்.

  தமிழகம் முழுவதும் கட்சித் தொண்டர்களை அச்சுறுத்தும் நிலையைக் கண்டித்து துண்டறிக்கை அச்சிட்டு தானே அண்ணா சாலையில் நடந்துசென்று அவ்வறிக்கையினை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கலைஞர் அவர்கள் தான் ஒரு போராட்டக்காரன் என்று  முரசறிவித்தார்.



இந்திராகாந்தி செய்த கொடுங்கோல் ஆட்சியை அனைத்து கட்சிகளும் எதிர்த்தன. ஆனால் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியும் அப்போது ஆரம்பித்த எம்ஜிஆர் கட்சியும் (அதிமுக) மட்டுமே நெருக்கடிநிலையை ஆதரித்தது. அடக்குமுறைகளுக்குப் பயந்து எம்.ஜி.ஆர் தன் கட்சிப்பெயருக்கு முன்னே “அகில இந்திய” என்றும் சேர்த்துக்கொண்டார்.

நெருக்கடி நிலை காலகட்டத்தில் தளபதி மு.க.ஸ்டாலின், முரசொலிமாறன், அன்றைக்கு தி.மு.கவிலிருந்த வை.கோ அவர்கள், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி போன்ற முக்கியத் தலைவர்கள் மிசா சட்டத்தில் சிறையிலடைக்கப் பட்டனர்.

சென்னை மத்தியச் சிறையில் அன்றைக்கு சிறைக்காவல் அதிகாரியாக இருந்த வித்யாசாகர் முரசொலி மாறனையும், தளபதி ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி போன்றோர்களைத் தாக்கிக் கொடுமைப்படுத்தியதும், அதன் விளைவாக  சிட்டிபாபு உயிரிழந்ததும் கழகத் தோழர்களை கொந்தளிக்க வைத்தது. சிறைக்கொடுமை பற்றிய முழுமையான தகவல்களை  சிட்டிபாபு தன்னுடைய சிறை டைரிக்குறிப்பில் எழுதியுள்ளார்.



சிறையில் தண்ணீர் குடிக்க தளபதி ஸ்டாலினுக்கு உரிமை இல்லை. அறையில் வைக்கப்பட்டிருக்கும் இரண்டு பானைகளில் ஒன்றில் குடிநீர் இருக்கும் . மற்றதை சிறுநீர் கழிக்க பயன்படுத்தவேண்டும். சிறுநீர் பானை நிரம்பி வழிந்தோட, இரண்டு பேர் மட்டும்  அடைக்கப்படக்கூடிய அறையில் பத்து பதினான்கு பேரை அடைத்து வைத்திருப்பார்கள். எமெர்ஜென்ஸியை எதிர்த்த ஒரே காரணத்திற்காக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டார்கள்.

சிறைச்சாலையில் மாலை ஆறு மணிக்கு அடைப்புக் கணக்கு முடிந்து அனைவரும் பிளாக், செல்லில் அடைக்கப்பட்டவுடன், ஒவ்வொரு பிளாக், செல்லாக திறந்து அனைவரையும் எண்ணி வரிசையாக அனுப்புவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிறைவாசிகள் தப்பித்துச் செல்லும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளதால் கடும் பாதுகாப்பு.


தினம்தோறும் காலை ஆறு மணிக்கு கீழ்நிலை சிறைஅதிகாரிகள் வந்து அனைவரையும் எழுப்பி, கணக்கெடுத்துச் செல்வார்கள். அனைவரும் உயிரோடு இருக்கிறார்களா என்பதற்கு இந்த கணக்கெடுப்பு. அதன்பின் காலைக்கடன் முடிக்கவும், குளிக்கவும் வெளியே அனுப்புவார்கள்.


எதிர்க்குரல் கொடுத்த தளபதி ஸ்டாலின் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தண்ணீர் குடிப்பதற்குக் கூட கதவு திறந்து விடவில்லை சிறைக் காவலர்கள். சிறை அறையின் கம்பிகளுக்கிடையே கைகளை நீட்டி தண்ணீர் வாங்கிக் குடித்தார். அதுதான் அன்றைய நிலை.

வித்யாசாகர் அப்போது சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்தார். அவர் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பு. அவர் மதுரை சிறையைப் பார்வையிடவும், சிறைவாசிகளின் குறைகளைக் கேட்டறியவும் வருகை தந்திருந்தார்.

சிறைவாசிகள் வரிசையாக தங்கள் செல்லின் முன் வந்து நின்றுகொண்டு  அதிகாரி வரும்போது கையை உயர்த்தி தங்கள் குறைகளைக் கூற வேண்டும். இது சிறை நடைமுறை. அப்படி குறைகள் எழுப்புகிறவர்களுக்கு அதிகாரி சென்றவுடன் கடும் தண்டனை விதிக்கப்படும். சிறை காவலர்கள் அடித்து துவைத்து விடுவார்கள்.

இதனால், பெரும்பாலும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் மட்டும் தங்களின் ‘ரெமிஷன்’ முன்விடுதலைக் குறித்து ஏதாவது கேட்பார்கள். மற்றபடி அந்த உயரதிகாரிகளின் வருகை ஒரு சடங்காகவே நடந்து முடியும்.

வித்யாசாகர் வருகை தந்திருந்த அன்று திமுக தலைவர்கள் பலர் அவர்களது செல்லின் முன்பு வரிசையாக நின்றிருந்தார்கள். ஏதாவது சிக்கல் ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்திலே காவலர்கள் இருந்தார்கள்.  அதிகாரிகள் புடைசூழ வித்யாசாகர் வர, சிறையிலிருந்த பொழிலனிடம் அவரது தந்தையாரை நலம் விசாரித்தார்.

பொழிலன் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுடைய புதல்வர். மிசாவில் சென்னை நடுவண் சிறையில் இருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், எம்.ஆர்.இராதா ஆகிய இருவர் மட்டுமே வித்யாசாகரின் தடிக்குத் தப்பியவர்கள்.

இந்த மதுரை சிறையில் தான் எமெர்ஜென்ஸி அடக்குமுறையில் சாத்தூர் கழகச் செயலாளராக இருந்த சாத்தூர் பாலகிருஷ்ணன் கொடூரமாக சிறையதிகாரிகளால் கொல்லப்பட்டார். அவரது இறுதி ஊர்வலம் பதினைந்தாயிரம் பேர் பங்கேற்க தலைவர் கலைஞர் அவர்கள் முன்னிலையில்  நடந்தது.

நெருக்கடி காலத்தில் விடுதலை, முரசொலி இதழ்கள் மட்டுமல்லாமல் பத்திரிகையாளர்கள் பட்டபாடுகளும் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த இரு ஏடுகளும் தயார் ஆனவுடன் நெருக்கடி கால அதிகாரிகளிடம் தினசரி கொண்டு போய் காட்ட வேண்டும். அவர்கள் அடிக்கின்ற செய்தி பத்திரிகையில் வரக்கூடாது. இப்படித் தணிக்கை செய்தார்கள்.

தமிழகத்தில் திராவிடமுன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வன்மத்தோடு கலைக்கப்பட்டபோது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டவர் மோகன்லால் சுகாதியா (Mohan Lal Sukhadia). இவர் இராஜஸ்தான் மாநில முதலமைச்சராக 17 ஆண்டுகள் (1954–1971) இருந்தவர். இராஜஸ்தான் மாநிலத்தின் பல சீர்திருத்தங்களுக்கும் காரணமானவர்.

1976ம் ஆண்டு மோகன்லால் சுகாதியா ஆளுநராக செயல்பட்டபோது அவருக்கு ஆலோசகர்களாக ஆர்.வி.சுப்பிரமணியம் மற்றும் தவே ஆகிய இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள்.

இவர்களில் ஆர்.வி.எஸ் கேரளாவில் பிறந்த தமிழர். 1947ம் ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றவர். டெல்லியில் பணிபுரிந்தாலும் தமிழ் நாட்டையும் மக்களையும் நன்கு அறிந்தவர். அவசரநிலை காலங்களில் மக்கள் தரப்பிலிருந்து வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகளை செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டவர்.

தமிழ்நாட்டு நலன் சார்ந்த முறையீடுகளை ஏற்றுக் கொண்டு பலருக்கு உதவியும் செய்தார். ஆர்.வி.எஸ் மக்கள் நலவிரும்பியாகத் திகழ்ந்தார். திமுக ஆட்சி கலைக்கப்பட்ட போது, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சோ.அழகிரிசாமியுடன்  விருந்தினர் விடுதியில் அவரைச் சந்தித்து விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட கடுமையான ஜப்தி நடவடிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்திருந்தேன்.

அப்போதைய ஒன்றுபட்ட நெல்லைமாவட்டத்தின் ஆட்சியாளராக இருந்த நாராயணன் அவர்களை அழைத்து, விவசாயிகளுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்று நடவடிக்கையை முடுக்கி விட்டார். அந்தகாலகட்டத்தில் நெல்லை மாவட்டம் முழுக்க வறட்சி நிலவியது. அப்போதுதான் மக்காச்சோளம் பயிர்செய்யப்படத் துவங்கியது.

உணவு தானியங்கள் இல்லாமல் மக்காச்சோளத்தை மக்கள் உணவாக உட்கொள்ளத் துவங்கினார்கள். இதயெல்லாம் எடுத்துச் சொன்னதும் விவசாயிகளின் உடமைகளையோ, அவர்கள் வீட்டு நிலைக் கதவுகளையோ பறிமுதல் செய்யும் ஜப்தி நடவடிக்கைகளை கைவிடச் செய்தார்.

காலை 10மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் கோட்டையில் அவரைச் சந்தித்து மனுக்கள் வழங்க முடிந்தது.  ஆர்.வி.எஸ் மேசைக்குச் சென்ற மனுக்கள் அவ்வப்போது பைசல் செய்யப்பட்டது. திமுக அரசின் மீது அவருக்கு எந்தவித வன்மமும் இருந்ததாகத் தெரியவில்லை.

இதற்கெல்லாம் நேர்மாறாக தவே போன்ற ஆலோசகரை யாரும் எளிதில் நெருங்குவது என்பதே முடியாத காரியமாக இருந்தது. கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.சுப்பையா முதலியாரோடு குற்றாலம் பராசக்தி கல்லூரியில் நடந்த நிகழ்வில் தவேயைச் சந்திக்க முயன்று, நதிநீர் இணைப்பு சம்பந்தமாகவும், பாசன வசதிகளுக்காக குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் மனு வழங்கினோம்.  அந்த மனுவைக் கூட திரும்பிப் பார்க்காமல் “What is the Matter?” என்று கேட்டுவிட்டு கண்ணியமற்ற முறையில் தவே நடத்தினார்.

தி.மு.கவைச் சேர்ந்த அத்தனைபேரையும் கைது செய்யவேண்டுமென வன்மத்தோடும் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். தவே இந்திராகாந்தியின் மத்திய இராஜாங்க அமைச்சராக இருந்த ஓம் மேத்தாவுக்கு வேண்டப்பட்டவர்.

அவர் ஒருபோதும் மக்களைச் சந்திப்பதோ அவர்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்டதே இல்லை. ஒன்று சுற்றுப்பயணத்தில் இருப்பார். அல்லது மோகன்லால் சுகாதியாவோடு ஆளுநர் மாளிகையில் இருப்பார்.


அதேபோல் நெருக்கடி நிலையில் மிகக் கடுமையாக நடந்துகொண்ட சிறையதிகாரியான வித்யாசாகர், எவ்வளவு படித்த மிசாக் கைதிகளாக இருந்தாலும் அவர்களை மிரட்டுவதும், அடித்து உதைப்பதும், துன்புறுத்துவதுமென காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டார். அதில் ஒரு இன்பத்தைக் கண்டார் வித்யாசாகர். அவர் ஒரு சாடிஸ்ட் , க்ரூட். அரசு அதிகாரியாக செயல்படவே லாயக்கற்றவராக இருந்தார்.

 ஆளுநரின் ஆலோசகரான ஆர்.வி.சுப்பிரமணியம், தவே மற்றும் சிறைத்துறை வித்யாசாகர்  ஆகிய மூன்று அதிகாரிகளும் நெருக்கடி காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவர்கள். அவர்களில் ஆர்விஎஸ் மட்டுமே மக்கள் நலம் சார்ந்து நடுநிலையாளராக விளங்கினார்.

1977 ஜனவரி 18_ந்தேதி இந்திராகாந்தி  ரேடியோவில் பேசுகையில் "பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும். சிறையில் இருக்கும் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள்" என்று அறிவித்தார்.

1977 மார்ச் மாதம் நடந்த தேர்தலில் பிரதமர் இந்திரா காந்தி தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. ஜெயப்பிரகாசர் உருவாக்கிய "ஜனதா கட்சி", ஆட்சியை பிடித்தது. உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை மார்ச் 19_ந்தேதி நடைபெற்றது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜ்நாராயணன் 55 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இந்தியா முழுவதும் காங்கிரசை தோற்கடித்து 152 இடங்களைபிடித்து திமுக ஆதரவோடு  ஜனதா ஆட்சியை அமைத்தது.  இந்திய மக்களுக்கு ஜனநாயகம் வழங்கப்பட்டது.


நெருக்கடி காலத்திற்குப் பின்னர் நீதிபதி இஸ்மாயில் தலைமையிலே மிசா கொடுமைகளை விசாரிக்க இஸ்மாயில் கமிஷன் அமைக்கப்பட்டது. அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் அலசி ஆராய அமைக்கப்பட்ட  பல கமிசன்கள் அலமாரிக்குள்ளே போயிருக்கிறது. ஆனால் இஸ்மாயில் அவர்களுடைய கமிசன் காலத்தை இன்றைக்கும் வென்று காட்டியிருக்கிறது. மிசா காலத்தில் சிறையில் நடந்த அத்தனை கொடுமைகளும் இஸ்மாயில் கமிசனில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-06-2015.

#DMK
#Emeregency
#KSR_Posts
#KsRadhakrishnan


Emergency Article 1    -  Click Here 

Emergency Article 2   -  Click Here 

Emergency Article 3   - Click Here  

Emergency Article 4   - Click Here 

Emergency Article 5  -  Click Here

Emergency Article 6  -  Click Here 

Emergency Article 7  -  Click Here 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...