How Did the Tamil Merchant Become India's First link to the outside World?
பொருளாதார நிபுணரான டாக்டர்.கனகலதா முகுந்த் எழுதியுள்ள ,
"The World of the Tamil Merchant" என்ற ஆங்கில நூல் பிரபல எழுத்தாளரான குருசரண் தாஸ் அவர்களின் அணிந்துரையோடு வெளிவந்துள்ளது.
உலக வர்த்தகத்தில் தமிழர்கள் தான் முன்னோடி என்று இந்த ஆங்கில நூலில் உரிய ஆதாரங்களோடும் தரவுகளோடும் எழுதியுள்ளார். தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசிக்கின்றார் கனகலதா முகுந்த்.
இந்த நூலில் ரோமுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள வணிகத் தொடர்பை அழகன்குளம் அகழ் ஆய்வு கூறுகிறது என்று எழுதியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பூம்புகார் அகழாய்வு, தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள கல்வெட்டுகள், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள வரலாற்றுத்தரவுகள் எனப்பல ஆய்வுகள் நடத்தி இந்த நூலை வெளியிட்டுள்ளார்.
காஞ்சி, நாகப்பட்டினம், மாமல்லபுரம், கங்கைகொண்ட சோழபுரம், ஆதிச்சநல்லூர், மதுரை, உறையூர், அக்காலத்தில் வாஞ்சி என்று அழைக்கப்பட்ட இன்றைய கரூர், என பல முக்கிய வணிக கேந்திர நகரங்களைப் பற்றியும், சேர சோழ, பாண்டிய, பல்லவர் கால கலாச்சார, நாகரீக, பொருளாதார, வணிகக் குறிப்புகளை இந்நூலில் எழுதியுள்ளார். பண்டைய தமிழகத்தின் வணிகத்தைப் பறைசாற்றும் வரலாற்றுத்தரவாக இந்நூல் உள்ளது.
வங்கக்கடலிலும், அரபிக்கடலிலும், இந்துமகா சமுத்திரத்திலும் தமிழர்கள் செய்த கடல்வணிக பராக்கிரமத்தை அருமையாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார் நூலாசிரியர் கனகலதா முகுந்த். கொற்கை, தொண்டி, முசிறி, அழகன் குளம், புதுவை, நாகப்பட்டினம், மரக்காணம், மாமல்லபுரம், இன்றைய கேரளாவிலுள்ள கொடுங்காளூர், கண்ணனூர், அக்காலத்தில் கேரளத்திலிருந்த தொண்டி ஆகிய துறைமுக நகரங்கள் பற்றியெல்லாம் இந்நூலில் குறிப்புகள் உள்ளன.
தமிழக வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த நூலைத் தவிர்க்க முடியாது. சிலப்பதிகாரம், மணிமேகலை, புகாரிலிருந்து மதுரைவரை நடந்த சிலம்புக்காட்சிகள், பட்டினப்பாலை போன்ற சங்க இலக்கியங்கள் பலவற்றையும் இந்நூலுக்காக நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார்.
மொத்தத்தில் அக்காலத் தமிழகத்தின் நாகரீகம், பொருளாதாரம், வணிகம், ஆட்சிமுறை, மக்கள் வாழ்க்கைநிலை ஆகியவற்றை எளிமையாகவும், சுருக்கமாகவும் அறிந்துகொள்ள இந்நூல் பயனாக உள்ளது. நூலாசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-06-2015.
No comments:
Post a Comment