Sunday, July 5, 2015

ஒரு மகளின் நினைவுகூரல்- எமெர்ஜென்ஸி -7 - Emergency -1975 - Article - 7



அவசரநிலை காலகட்டம் பற்றி எனது முந்தைய பதிவுகளில், பெங்களூர் சிறையில் சித்ரவதைகளுக்கு உட்பட்டு காலமான சினேகலதா ரெட்டியைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அவருடைய புதல்வியான நந்தனா ரெட்டி 1990களிலிருந்து எனக்கு நட்பாக அறிமுகமானவர்.

வி.பி.சிங் பிரதமராக இருந்த பொழுது, குழந்தைத் தொழிளாலர் ஒழிப்பு குறித்து மத்திய அரசு அமைத்த குழுவில் நானும் நந்தனா ரெட்டி அவர்களும் உறுப்பினராக இருந்தபொழுது இந்த நட்பு அமைந்தது.

சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவது குறித்த ஆய்வுக்காக தென்மாவட்டங்களுக்கு வருகை தந்திருந்தார் நந்தனா ரெட்டி. அந்த சமயத்தில் என்னுடையச் விருந்தினராக எனது சொந்த கிராமமான குருஞ்சாக்குளம் , கோவில்பட்டி, சன்கரன்கோவில் பகுதிகளுக்கும் வந்திருந்தார்.

மர்காப்பூர், கான்பூர் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுவது குறித்த ஆய்வுக்குழுவில் நந்தனா ரெட்டியும் இடம்பெற்றிருக்க அந்தப் பகுதிகளில் களப்பணிகளில் ஈடுபட்டதும் பல சம்பவங்களை விவாதித்தது குறித்த நினைவுகள் எல்லாம் மீளெழுந்தது.

நந்தனா ரெட்டி அரசியல் களத்தில் மறைமுகமாக இருந்தாலும், சமூகப் பணிகளில் அக்கறை கொண்டு பெங்களூரில் வசிக்கின்றார். நந்தனா ரெட்டி  பன்முகத்தன்மை கொண்ட மக்கள் உரிமைச் செயல்பாட்டாளர்.  ஆங்கில இந்து ஏட்டில் அவர் தனது தாயார் “சினேகலதா ரெட்டி” பற்றி எழுதியுள்ள பத்தி என்னுடைய கவனத்திற்கு வந்தது. உடனே அவரை அழைத்து நினைவுகளிலுள்ள தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது என்று குறிப்பிட்டேன்.


அந்த பத்தியின் தமிழாக்கம், “ஒரு மகளின் நினைவுகூரல்”  தி இந்து தமிழில் வெளியாகியுள்ளது.
 
                                                                      ***
சூழலின் அமைதியைக் கிழித்தபடி, திடீரென்று ஒலிக்க ஆரம்பித்தது தொலைபேசி அழைப்பொலி. நான் போய் எடுப்பதற்குள் அது நின்றுவிடக் கூடாது என்று நினைத்துக்கொண்டே மாடிப்படி வழியாகக் கீழே ஓடினேன். உடைந்த குரலில் என் அம்மாவின் குரல் கேட்டது. “என்னை மறுபடியும் இங்கே அழைத்துக் கொண்டுவந்து விட்டார்கள். என்னைப் பார்க்க வருகிறாயா?” என்று கேட்டார். நான் விக்டோரியா மருத்துவமனைக்கு விரைந்தோடினேன்.

இந்தக் காட்சிகள் 40 ஆண்டுகளுக்குப் பிறகும் என்னைத் துரத்துகின்றன. அந்தத் தொலைபேசி ஒலியின் அழைப்பைக் கேட்டு நான் இன்றுவரையிலும் திடுக்கிட்டு, வேர்க்க விறுவிறுக்க விழித்துப் பார்க்கிறேன். நெருக்கடி நிலையின் மடத்தனத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள இன்னும் முயன்று கொண்டிருக்கிறேன்.

என் அம்மாவை அவ்வளவு சீக்கிரம் இழந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவ்வளவு இளம் வயதில், அர்த்தமேயில்லாமல். ‘ஏன், ஏன்’ என்று இன்னும்கூட எனக்குள் கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன. எனக்குள் எழும் கோபத்தை ஆக்கபூர்வமான செயல்களைச் செய்வதன் மூலம் தணித்துக்கொள்ள முயல்கிறேன். ‘ஆராதனை நாயக’ராக இருக்கும் பிரதமர் ஒருவர் இருக்கும் இந்த நேரத்தில் பழைய அச்சங்களெல்லாம் மீண்டும் தலைகாட்டுகின்றன.



ஆர்.எம்.ஓ.வின் அறையில் அமர்ந்தபடி பொதுச் சுகாதாரத்தையும், சிறையில் இருக்கும் பெண் கைதிகள் பராமரிப்பு பற்றியும் என் தாய் சூடாக விவாதித்துக் கொண்டிருப்பதை எப்போதும் நான் காண்கிறேன். அந்த விவாதத்துக்கு நடுவில் அவர் என்னை நோக்கித் திரும்புகிறார். கிட்டத்தட்ட ஒரு ராணியின் தோரணை. ஆனாலும், அவரது அழகிய கண்களில் வலியும் வேதனையும் தென்படும். ஏதும் பேசிக்கொள்ளாமல் நாங்கள் தழுவிக்கொண்டு முத்தமிட்டுக்கொள்கிறோம். ஒரு கணம் அவரை நான் இறுகப் பற்றிக்கொள்கிறேன். அவர்கள் எங்களைப் பிரிக்க முடியாது என்றே கிட்டத்தட்ட நம்புகிறேன்.

ஆனால், தருணம் நெருங்கிவிட்டது. அவரைத் திரும்பவும் கூட்டிச் செல்வதற்காக போலீஸார் வந்திருக்கிறார்கள். கால்கள் முடமானதைப் போலவும், நிராதரவானதுபோலவும் ஓர் உணர்வு எனக்கு. போலீஸார் அவரை வேனை நோக்கி நடத்திச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வேன் கதவுகள் மூடப்படுகின்றன. வலைஜன்னல்கள் வழியே எங்கள் கண்கள் சந்தித்துகொண்டன.

பெங்களூரின் வீதிகள் வழியாக மத்தியச் சிறைச்சாலைக்குச் சென்ற அந்த வேனை நான் பின்தொடர்ந்தேன். பெரிய கதவுகள் உரத்த சத்தத்துடன் திறக்கின்றன. சுவரின் உட்பக்கத்தில் கதவுகள் மோதும் சத்தம் காதை அடைக்கிறது. வேன் உள்ளே செல்கிறது; கையசைப்பதற்காக நான் கைகளை உயர்த்துகிறேன்.

அவரும் கைகளை உயர்த்துகிறார். கையசைப்பின் பாதித் தருணத்தில் எங்கள் கைகள் உறைந்துபோயிருக்க இறுதியாக ஒரு பெரும் சத்தத்துடன் கதவுகள் மூடிக்கொள்கின்றன. அவரை எனது மனதால் பின்தொடர்ந்துகொண்டிருகிறேன். அவரது உடலிலும் ஆடைகளிலும் மேற்கொள்ளப்படும் தேடல் சோதனை. சிறையறையின் கதவு வெளிப்படுத்தும் சத்தம். சாவிகள் மோதிக்கொள்ளும் சத்தம். வார்டனின் சிரிப்பொலி. செயலிழந்து உட்கார்ந்திருக்கும் என் அம்மா. என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

சினேகா எனப் பிரியமாக அழைக்கப்பட்ட சினேகலதா ரெட்டி கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர். இரண்டாம் தலைமுறைக் கிறித்தவர்கள். ஆங்கிலேயரையும் அவர்களது ஏகாதிபத்தியத்தையும் என் தாய் வெறுத்தார். எனவே தனது இந்தியப் பெயருக்குத் திரும்பினார். இந்திய உடைகளையே அணிந்தார். மேகமூட்டத்தை சூரிய ஒளியாகவும் அச்சத்தை சாகசத்தால் ஏற்படும் பரவசமாகவும் மாற்றுபவர் அவர். எல்லோரையும் நேசித்தார்; கொடுமையையும் அநீதியையும் வெறுத்தார்.

சாதி, வர்க்கம் போன்றவற்றையெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. தேச எல்லைகள் போன்ற பாகுபாடுகளெல்லாம் அவருக்குக் கிடையாது. மனிதர்களை மதிக்கவும் அறிவையும் அனுபவத்தையும் பொக்கிஷமெனப் போற்றவும் அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். பெண்ணியவாதியான அவர் பெண்-ஆண் சமத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர். மரபின் போர்வையில் பெண்களை மோசமாக நடத்திக்கொண்டிருந்த ஆண்களை வெறுத்தார்.

எனது பெற்றோர் சோஷலிஸ்டுகள்; லோஹியாவால் பெரும் தாக்கம் பெற்றவர்கள்; அவர்களது செயல்பாடுகளும் சித்தாந்தமும் அவர்களது வாழ்க்கையிலும் ஊடுருவியிருந்தன. அன்பையும் மதிப்பையும் அடிப்படையாகக் கொண்ட உறவு அவர்களுடையது.

ஒருமுறை என் தாயின் குறிப்பேட்டை நாங்கள் கண்டெடுத்தோம். அதில் சிறையைப் பற்றி அவர் எழுதியிருந்தார். “ஒரு பெண் உள்ளே நுழைந்தவுடன் எல்லோருக்கும் முன்னால் அவர் நிர்வாணமாக்கப்படுவார். மனித உடல் இந்த அளவுக்கு அவமதிக்கப்பட வேண்டுமா? இந்த வக்கிரமான நடைமுறைகளுக்கெல்லாம் யார் பொறுப்பு?

 அறிவார்ந்த சிறைக் கண்காணிப்பாளர்கள், சிறைக்கான ஐ.ஜிகள் போன்றோரெல்லாம் இந்தச் சூழல்களை மேம்படுத்த வேண்டாமா? ஒவ்வொரு மனித உயிரும் இந்த உலகில் பிறப்பெடுப்பதன் நோக்கம் என்ன? உன்னத நிலையை நோக்கி மனித குலத்தைச் சற்று உயர்த்திவிடுவது மனிதப் பிறப்பின் நோக்கம் இல்லையா?”

ஜூன் 9, 1976-ல் அவர் இப்படி எழுதியிருக்கிறார்; “இங்கே என்னால் முடிந்த அளவுக்குக் கொஞ்சம் செய்ய முடிந்திருக்கிறது. பெண் கைதிகளை மூர்க்கமாக அடிப்பதை நான் தடுத்து நிறுத்தியிருக்கிறேன். அவர்களுக்கு வழங்கப்படும் சாப்பாட்டின் தரத்திலும் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் தண்ணீர்ப் பிரச்சினைதான் மோசம். இருப்பினும், குழாய்கள் இணைப்பு மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்கள் என்பது சற்றே நிம்மதி அளிக்கிறது.

பெண்களிடமுள்ள அச்சத்தை அகற்றுவதில் கொஞ்சம் வெற்றி பெற்றிருக்கிறேன். சாப்பாடு விஷயத்தில் நான் பட்டினிப் போராட்டம் மேற்கொண்ட பிறகு கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.”

ஜூன் 26, 1975-ல் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். அதை எதிர்த்துத் தலைமறைவு இயக்கத்தைத் தொடங்கலாம் என்று ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் கூறினார். அந்த இயக்கம் அகிம்சை வழியில் இயங்க வேண்டும் என்று என் தாயும், தேவைப்பட்டால் வன்முறையை மேற்கொள்ளலாம் என்று ஃபெர்ணாண்டஸும் வாதிட்டனர். இயக்கத்தில் நானும் சேர்ந்துகொள்ள முன்வந்தேன். எனது பாதுகாப்பு குறித்த அச்சம் இருந்தாலும் தயக்கத்துடன் என் தாய் ஒப்புக்கொண்டார். அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகள் நமக்கு மறுக்கப்படும் சூழலில் நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்பதை என் தாய் எனக்குக் கற்றுகொடுத்திருக்கிறர்.

மே 1, 1976-ல் என் தாய் இப்படி எழுதினார்: “ஆன்மாவின் கும்மிருட்டு சூழ்ந்த இரவில், ஒவ்வொரு நாளும் எப்போதும் காலை மூன்று மணியாகத்தான் இருக்கிறது.”

வியர்வையில் நடுங்கிக்கொண்டே கண்விழித்துப் பார்க்கிறேன். அதிகாலை மூன்று மணி. கனவு கலைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கண்களை மூடியே வைத்திருக்கிறேன்.

சிறைக் கதவுகள் சாத்தப்படும் சத்தம், அதனுள்ளே மறையும் போலீஸ் வேன், கையசைப்பின் நடுவே உறைந்துபோன அவரது கை. இது இங்கேயே முடிந்துவிட நான் விட மாட்டேன். அவரை என்னுடனே வைத்துக்கொள்கிறேன். நாங்கள் இப்போது கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறோம்; அற்புதமான சூர்யாஸ்தமனத்தைப் பார்த்தபடி, கைகளால் ஒருவரையொருவர் அரவணைத்தபடி உட்கார்ந்திருக்கிறோம். அவர் நிம்மதியாகவும் அமைதியாகவும் இருக்கிறார்.

ஆனால், இப்போது நாங்கள் அதே நிகழ்வின் மறு அரங்கேற்றத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நம்மையும் நமது அரசியல் சாசன உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் விழுங்கிவிடுவதுபோல் அச்சுறுத்தும் கரு நிழலைக் காண்கிறோம்.

இந்த முறை இது இன்னும் பூடகமாகவும் சாமர்த்தியமாகவும், ஆனால் பட்டவர்த்தனமாக அதே எதேச்சாதிகாரத்துடனும் திரும்பிவந்திருக்கிறது. ஆனால், நான் என் பெற்றோருடன் செய்துகொண்ட ஒப்பந்தம், வெறுமனே நின்றுகொண்டு வேடிக்கைபார்க்க என்னை அனுமதிக்காது. என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொண்டு நான் போரிடுவேன்.

- நந்தனா ரெட்டி,
மக்கள் உரிமைச் செயல்பாட்டாளர்
© ‘தி இந்து’ (ஆங்கிலம்),  தமிழில்: ஆசை.



எமெர்ஜென்ஸி

Emergency Article 1    -  Click Here 

Emergency Article 2   -  Click Here 

Emergency Article 3   -  Click Here  

Emergency Article 4  -  Click Here 

Emergency Article 5  -  Click Here

Emergency Article 6  -  Click Here 

Emergency Article 7  -  Click Here 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...