Wednesday, July 8, 2015

தமிழும் திருவாடுதுறை ஆதீனமும் - Thiruvadudurai Adhinam.

தமிழும் திருவாடுதுறை ஆதீனமும் - Thiruvadudurai Adhinam.
__________________________________________________

நேற்றைக்கும், நேற்றைக்கு முதல்நாளும் தஞ்சை , குடந்தை, மயிலாடுதுறை பகுதிகளுக்குச் சொந்தப் பணிகளின் காரணமாகச் செல்லவேண்டியிருந்தது. அப்போது வழக்கறிஞர் நண்பர்கள், பேராசிரியர்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டது.

பணிகளை முடித்துவிட்டு திருவாடுதுறை ஆதீனத்திலும் சில அலுவல்கள் இருந்த காரணத்தினால் அங்கும் செல்லவேண்டிய வாய்ப்பு அமைந்தது.








பத்தாண்டுகளுக்கு மேலாக மறைந்த 23வது ஆதீனம் சீர் வள ஸ்ரீ சிவப்பிரகாசம் சுவாமிகளோடு நெருக்கமாகவும், ஆதீன வழக்குகள் குறித்து ஆலோசனைகளும் பணிகளும் மேற்கொண்டதால் திருவாடுதுறை ஆதீனத்துடன் நெருக்கமான தொடர்பு எனக்கு உண்டு. என்னுடைய ‘நிமிரவைக்கும் நெல்லை’ நூலைப் பாராட்டி திருவாடுதுறை மடத்தின் சார்பில் 09-07-2008 அன்று ஒரு நிகழ்வையும் நடத்தி சீர் வள ஸ்ரீ சிவப்பிரகாசம் சுவாமிகள் என்னைப் பாராட்டியது உண்டு.

நேற்றைக்கு 24வது ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகளை நானும், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கவேலு அவர்களும் சந்தித்து பல செய்திகளைப் பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது உடனிருந்த காறுபாறு வைத்தியநாதத் தம்பிரான்,  “திருவள்ளுவர் திருக்குறளை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தில் அமைந்துள்ள திருவழுதீஸ்வரர் கோவிலில் அரங்கேற்றியதாக தமிழ்தாத்தா உ.வே.சா வுக்கு தகவல் கிடைத்தது என்ற செய்தியைக் கூறினார். இந்த ஊரில் தால் அ.மாதவையாவும், பெ.நா.அப்புசாமியும் பிறந்தார்கள் என்று நான் குறிப்பிட்டேன்.

திருவள்ளுவருக்கு கோவில்பட்டி அருகே உள்ள கீழஈரால் வட்டாரத்திற்கு தொடர்பு உண்டென்று செவிவழிச் செய்திகளும் உள்ளதாக பேச்சில் வந்தன. தொடர்ந்து, ‘வழுதி’ என்ற தூய்மையான தமிழ்ப் பெயரில் பெருங்குளத்திலுள்ள சிவபிரான் அழைக்கப்படுகிறார் என்றும், வேறெங்கும் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டதில்லை நீங்கள் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ‘வழுதி’ என்ற பெயரை உங்கள் இயக்கத் தலைவர்கள் சூட்டிக்கொள்வதுண்டு  பெருங்குளத்து சிவபிரானுக்கும் திராவிட இயக்க தலைவர்களுக்கு மிடையே வழுதி என்ற பெயர் எப்படி வந்ததென்று ஆய்வு கூட செய்யலாம் நீங்கள் என்று வைத்தியநாத தம்பிரான் குறிப்பிட்டார்.

கோவையில் தலைவர் கலைஞர் அவர்கள் நடத்திய, செம்மொழி மாநாட்டில் ஆதீனம் சார்பில் என்ன செய்ய வேண்டுமென்று, மறைந்த சீர் வள ஸ்ரீ சிவப்பிரகாசம் சுவாமிகள் என்னிடம் கேட்டபொழுது, நான் உங்களுடைய மடத்தின் மகா வித்வான் ச.தண்டபாணி தேசிகர் 05-03-1965ல் பதிப்பித்து, தாங்கள் வெளியிட்ட சங்க இலக்கியச் சொற்களஞ்சியம் (உயிர் எழுத்துக்கள்) என்னும் நூலையும், செம்மொழி தமிழ் குறித்த ஆய்வு நூல்களையும், இன்னும் சில பழம்பெரும் நூல்களையும் மறுபதிப்பு செய்து வெளியிடுங்கள் என்று சொன்னேன். செம்மொழி மாநாட்டின்போது கோவையில் நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில்  மறைந்த அருட்செல்வர் பொள்ளாச்சி.நா.மகாலிங்கம் அவர்கள் அந்நூல்களை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர்.வைத்தியநாதன், பேராசிரியர். ம.ரா.போ.குருசாமி அவர்கள்,  ஜெயந்தாஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன்.


நீங்கள் விரும்பியபடியே ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கவும், பழைபெரும் நூல்களைப் பாதுகாக்கவும் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்று ஆதீன கர்த்தர் அம்பலவான சுவாமிகள் என்னிடம் குறிப்பிட்டார்.

சரசுவதி மகாலின்  புதிய நூலகம் திறக்கப்பட்டு சில நாட்கள் தான் ஆகிறது. இதில் என்ன சிறப்பென்றால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமில்லாமல். அயல் நாட்டைச் சேர்ந்த, குறிப்பாக வெள்ளையர்கள் பலர் ஆய்வு செய்ததைப் பார்த்துள்ளேன்.  அன்றைக்கு அமெரிக்காவில் உள்ள அரிசோனாப் பல்கலைக்கழக மாணவரும், ஆஸ்த்திரேலியாவைச் சேர்ந்த மெல்பர்ன் பல்கலைக் கழக மாணவரும் அங்கு ஆய்வுக்குறிப்புகளை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. காணக்கிடைக்காத அரிய நூல்கள் பலவும் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.

திருவாடுதுறை ஆதீன நூலகம் ஒரு ஆராய்ச்சி நூலகம்.
23 ஆவது ஆதீனத்தின் ஒப்புதலின் பேரில், சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளின் மறுவடிவ பாதுகாப்பும் புகைப்படம் எடுத்தலும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தாரால் மேற்கொள்ளப்பட்டது.

திருவாடுதுறை ஆதீனம் முந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நூல்களை நேரடியாகவும் வெளியிட்டும், மறுபதிப்புச் செய்தும் வெளியிட்டுள்ளது. திருவாவடுதுறை ஆதீன சரஸ்வதி மகால் நூலகத்தில் சைவம், வைத்தியம், தமிழ் இலக்கணம், இலக்கியம், நாடகம், புராணம், ஆங்கில இலக்கிய, வரலாற்று நூல்கள் என பலதுறை சார்ந்த பழமையான நூல்களும் ஓலைச்சுவடிகளும் பழைய அச்சுப் பதிப்புக்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

ஆதீனத்தையும் சந்தித்துவிட்டு திரும்பும் போது, இவ்வளவு சிறப்பும் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தின் பழைய கட்டிடத்தையும் காண முடிந்தது.  எத்தனை ஆளுமைகளுடைய காலடி இங்கே பட்டுள்ளது என்று எண்ணிப்பார்க்கும் போதே வியப்பாக இருந்தது.

புதிதாக கட்டப்பட்டும் தற்போது ஒழுங்குபடுத்தி அடுக்கி வைக்கப்படும் நூலகத்தில் பழைய ஓலைச்சுவடிகளையும் பார்வையிட முடிந்தது. பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்படுகின்ற இந்த ஓலைச்சுவடிகளை பார்க்கும் பொழுது இன்னும் எவ்வளவோ தமிழக வரலாறுகளை ஆய்வு செய்து கண்டறியவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.  ஓலைச்சுவடிகளின் மேல் வெளிர் களிம்பு பூசி வருடத்திற்கு ஒருமுறை லட்சக்கணக்கில் செலவு செய்து இந்த சுவடிகளை ஆதீன நிர்வாகம் பாதுகாத்து வருகின்றது.

திருவாடுதுறை ஆதீன பரம்பரை 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. சிவஞான போதம் என்னும் நூலை இயற்றிய மெய்கண்டார் (1125-1175) இதன் முதல் குரு. எனவே இதனை ‘மெய்கண்டார் பரம்பரை’ என்றும், ‘மெய்கண்டார் சந்தானம்’ என்றும் குறிப்பிடுகின்றனர். இவர்களாலும், இவருக்கு முந்தைய இருவராலும் இயற்றப்பட்ட நூல்கள் மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன.

மெய்கண்டார் மாணாக்கர் இருவர். ஒருவர் சிவஞான சித்தியார், இருபா இருபது ஆகிய நூல்களை இயற்றிய அருணந்தி சிவாசாரியார் (1180-1275). மற்றொருவர் மணவாசகம் கடந்தார் (1225-1275).

அருணந்தி சிவாசாரியார் மாணாக்கர் சதமணிக் கோவை நூலை இயற்றிய கடந்தை மறைஞான சம்பந்தர் (1275-1300). இவரது மாணாக்கர் இருவர். ஒருவர் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் (1300-1325). மற்றொருவர் மச்சுச் செட்டியார் என்னும் அருள் நமச்சிவாயர் (1300-1330)

மச்சுச் செட்டியார் மாணாக்கர் இருவர். ஒருவர் சித்தர் சிவப்பிரகாசர். இவர் எந்த நூலும் இயற்றவில்லை. நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவரது கருத்துக்களைப் பின்பற்றியவர் மூவலூர் நமசிவாய மூர்த்தி (1525). இவர் திருவாடுதுறை ஆதீன முதல் குரு.

மச்சுச் செட்டியாரின் மற்றொரு மாணாக்கர் காழி கங்கைகொண்டார் (1310-1340). இவரும் எந்த நூலும் செய்யவில்லை. இவரது மாணாக்கர் காழி – பழுதை கட்டி சிற்றம்பலநாடி (1325-1350) இவர் பல நூல்களைச் சுவடிகளில் எழுதி வைத்துள்ளார். இப்படி பல ஆசிரியர்கள் ஆதீனத்தின் பொறுப்புகளிலிருந்து தங்கள் வாழ்நாட்களில் கன்னித் தமிழை வளர்த்தெடுத்தனர். இந்த ஆசிரியர் பரம்பரையின் பட்டியலே நீண்டது.

இந்த ஆதீனத்தின் ஆசிரியர் பெருமானாக இருந்த மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை யாராலும் மறக்கமுடியாது.  ஆதீன மடத்தில் அவரிடம் தமிழ்கற்ற தமிழ்தாத்தா உ.வே.சா, மடத்துடன் தொடர்பு கொண்ட கும்பகோணம் கல்லூரி தமிழாசிரியர் தியாகராச செட்டியார், மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை, தண்டபாணி தேசிகர், யாழ்பாணம் ஆறுமுக நாவலர் மட்டுமில்லாமல் தமிழையும், தமிழ் கலைகளையும் ஆதரித்த அத்தனை அறிஞர்களுக்கும் இந்த மடம் ஒரு சரணாலயம்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் நாவலான  “பிரதாப முதலியார் சரித்திரத்தினை” 1879ல் படைத்தவர். கிறிஸ்தவராக இருந்தாலும்  திருவாடுதுறை மடத்திற்கு அவர் வருகை தந்திருந்தார். கா.சு.பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, வையாபுரி பிள்ளை, பால்நாடார், பி.ஸ்ரீ.ஆச்சார்யார், வரலாற்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரி, உமா மகேசனார், தாமோதரனார் போன்ற தமிழறிஞர்களும் இந்த மடத்தோடு தொடர்புகொண்டிருந்தனர்.  இந்த ஆளுமைகள் எல்லாம் அமர்ந்து தமிழாய்ந்த இடங்களில் நாமும் அமர்ந்து, அவர்கள் விருந்துண்ட இடத்திலே ஆதீனத்தில் வழங்கப்படும் சுவையான சைவ உணவை உண்ணும்போது இவர்களின் பெருமையை எண்ணிப்பார்ப்பதுண்டு பல சமயங்களில்.


திருவாடுதுறை ஆதீனத்திற்கும், நெல்லை, குமரி மாவட்டங்களுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. பல ஆதீன கர்த்தர்கள் இப்பகுதியைச் சார்ந்தவர்கள். குறிப்பாக சுசீந்திரம், செங்கோட்டை, குற்றாலம்,  தென்காசி, அம்பாசமுத்திரம், வள்ளியூர், திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கோவை பேரூர், கரூர், திருக்கழுகுன்றம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சீபுரம் மற்றுமில்லாமல் பலதமிழகத்தின் பல இடங்களிலும் திருவாடுதுறை ஆதீனத்தின் மடங்களும், சொத்துகளும் உள்ளன. இம்மடங்களில் வறியவர்களுக்கு மூன்று வேலையும் உணவு வழங்குவதும், தமிழ் சைவ மறை வகுப்புகளும் நடக்கின்றன.

காசியில் உள்ள திருவாடுதுறை ஆதீன மடத்தில், தமிழும் சைவமும் போதிக்கப்பட்டு வருகிறது. இன்றைக்குச் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம் ஒருகாலத்தில் திருவாடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமானது. அரும்பாக்கம் கிராமமே இந்த மடத்துக்கு பாத்தியப்பட்டது.

இந்த ஆதீனத்திற்கு பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்களும், முதல் குடியரசுத் தலைவரான டாக்டர்.இராஜேந்திர பிரசாத் அவர்களும் வருகை தந்திருந்தனர். சீன யுத்தத்தின் போது அன்றைக்குத் தமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களும், ஆர். வெங்கட்ராமனும் போர்நிதி வசூலிக்க வந்தபோது லட்சக் கணக்கில் அள்ளிக் கொடுத்தார் ஆதீன கர்த்தர். பண்டிதர் நேரு மதங்கள் மீது பெரிய அபிமானம் கொண்டிருக்க வில்லை என்றாலும் கூட இந்த திருவாடுதுறை ஆதீனத்தைச் சந்திக்க வேண்டுமென்று வேண்டி விரும்பி டெல்லிக்கு அழைத்து மேன்மை படுத்தியதும் உண்டு. இப்படியான பல செய்திகள் திருவாடுதுறை ஆதீனம் பற்றி நினைவில் உண்டு.

இப்படியான ஒரு நீண்ட நெடிய வரலாறு கொண்ட ஆதீனத்தோடு நீண்டகாலமாக தொடர்போடு இருப்பதை பெருமையாக எண்ணிப் பார்க்கின்றேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-07-2015

#KSR_Posts
#KsRadhakrishnan

#ThiruvaduduraiAdhinam




2 comments:

  1. Sir I need some books from திருவாவடுதுறை சரஸ்வதி மகால் நூலகம்.Please help me how to get it. If you have any phone number or contact person name with his phone number give me. My contact number is 9791452064. Yo u can call me. Please help me.

    ReplyDelete
  2. I am working as an Assistant Professor EEE Bannari Amman Institute of Technology Sathyamangalam Erode

    ReplyDelete

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...