ஜூலை 24-2015 தேதியிட்ட Front line இதழில் தமிழ்நாட்டின் மணல், கிரானைட், கடற்கரையோரத்தில் கார்னெட் கனிமங்கள் கொள்ளை போவதை மாவட்டம் வாரியாக தமிழகத்தின் நடப்புகளைத் தெளிவாக வரைபடம் போட்டுக் காட்டியுள்ளது. இது அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.
தமிழ்நாட்டு கிரானைட்டுக்கு சர்வதேச சந்தையில், குறிப்பாக ஜப்பான், சீனா, ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்த்திரேலியா, பிரிட்டன், ஹாலந்து, அமெரிக்கா, சுவிட்ச்சர்லாந்து போன்ற நாடுகளில் மவுசு அதிகமாக உள்ளது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி பல தனியார் நிறுவனங்கள் சட்டத்துக்குப் புறம்பாக கிரானைட்டுகளை வெட்டி எடுத்து பணம் கொழிக்கின்றார்கள்.
தமிழகத்தில் கறுப்பு மற்றும் பல்வேறு வர்ணங்கள் கொண்ட கிரானைட் கற்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. ஆற்றுமணல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எவ்வித மனசாட்சிக்கு இடங்கொடுக்காமலும் அள்ளப்பட்டு சமூக விரோதிகளால் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது.
ஆயிரம் ஆண்டுகளில் சிறிது சிறிதாக சேர்ந்த மணலை ஆற்றுப்படுகைகளில் கொள்ளையடிப்பது தாயின் மடியை அறுப்பதற்குச் சமமாகும். இப்படி கொள்ளையடிக்கும் மணலை தமிழகத்திலிருந்து கேரளாவுக்கும், மாலத்தீவுக்கும் அனுப்பி பலமடங்கு பணத்தை தங்கள் பையில் ரெப்புகின்றனர் .
இயற்கை வளத்தை நாசம் செய்து மக்கள் விரோத சக்திகள் தங்களை கொழுக்க வைத்துக்கொண்டு இன்றைக்கும் மரியாதைக்குரியவர்கள் என்ற போர்வையில் நாட்டில் வலம் வருகின்றனர்.
அதேபோல, கார்னைட் கனிமம் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டக் கடற்கரைகளில் சட்டத்துக்குப் புறம்பாக கடந்த இருபது ஆண்டுகளாக அள்ளிக் குவித்து தங்களை வளர்த்துக் கொண்டனர்.
இந்த சமூகவிரோதிகள் நாய்க்கு ரொட்டித்துண்டைப் போடுவது போல பேருக்கு கோவில் விழாக்கள், சிறுசிறு தானங்களைச் செய்வது போல் நடித்து, கொடைவள்ளல்கள் என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
17-07-2015.
No comments:
Post a Comment