Tuesday, July 21, 2015

மது விலக்கு சிந்தனைகள் - liquor ban



தலைவர் கலைஞர் அவர்களின் மதுவிலக்கு குறித்தான அறிவிப்பை பலதரப்பினரும் வரவேற்றுள்ளனர். தலைவர் கலைஞர் அவர்களின் மதுவிலக்கு குறித்தான அறிவிப்பை பலதரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஆனால் பா.ம.க-வுக்கு மட்டும் இதை வரவேற்க ஆரோக்கியமான பார்வை இல்லை என்பது வேடிக்கையான விஷயம். மதுவிலக்கு என்பதைப் பற்றி தாங்கள் தான் பேசவேண்டும் என்ற மமதையில் இருப்பது அற்பத்தனமானது.

  1971ம் ஆண்டு தலைவர் கலைஞர் மதுவிலக்கு அமுலை தளர்த்தியதற்கு அன்றைய சூழலையும், காரணங்களையும் என்னுடைய நேற்றைய (20-07-2015 ) பதிவில் சொல்லியிருந்தேன்.


சமீபத்தில் கோவையில் பள்ளியில் படிக்கும் மாணவி மதுவை அருந்திவிட்டு தெருக்களில் நடந்துகொண்ட முறை மக்களை எவ்வளவு வேதனைப்படுத்தியது, சமூக விரோதிகள் சிலர் சிறுவனுக்கு மது குடிக்கக் கொடுத்தது என்ற செய்திகளெல்லாம் பத்திரிகைகளில் வெளிவந்தது. இம்மாதிரியான செய்திகள் தலைவர் கலைஞரை மனதளவில் பாதித்தது.





மதுவிலக்கே மனித ஆற்றலை வளர்ச்சிப்பணிக்கு இட்டுச் செல்லும்.
ஆனால் குடி என்ற சமூகத் தீமை குடும்பங்களை அழிக்கின்ற நாசக்கார சக்தியாக திகழ்கின்றது. எழுபதுகளில் உள்ள நிலை இன்றைக்கு நம்மிடையே இல்லை. அன்றைக்கு கள்ளுக்கடை ஊர் எல்லையைவிட்டு வெளியே குளத்தாங்கரைப் பக்கம் ஒதுக்குப்புறமாக இருந்தது. அந்த இடத்துக்குச் செல்வதற்குக் கூட யாரும் தயக்கம் காட்டுவார்கள். இன்றைக்கு டாஸ்மாக் கடைகள் தெருவுக்குத் தெரு திறக்கப்பட்டுள்ளன.

1980க்குப் பிறகு அதிமுக ஆட்சியில் அதிகமான உரிமங்கள் வழங்கப்பட்டு “டாஸ்மாக்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு நாடே போதைக் களமாக உருவாக்கியது வேதனையான நிலைமையாகும். இதுகுறித்து கழகப் பொருளாளர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள் தன் முகநூலில் பதிவு செய்துள்ள கருத்துகள்....



“ 2016ல் திமுக ஆட்சிக்கு மீண்டும் வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்" என்று தலைவர் கலைஞர் அறிவித்துள்ளார். அரசே டாஸ்மாக் கடைகளை திறந்து விற்பனை செய்யும் கொள்கையை அதிமுக அரசு தான் 2003-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அந்த வகையில் எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் என்ற நிலை உருவாகி விட்டது.

அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை விட டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இன்றைய தினம் கேரள மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு மதுக்கடை இருக்கிறது என்றால் தமிழகத்தில் 10,000 பேருக்கு ஒரு டாஸ்மாக் கடை என்ற அவல நிலை அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏற்பட்டு விட்டது.

மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்பது ஏதோ திமுகவுக்கு திடீரென்று ஏற்பட்ட எண்ணம் அல்ல. கடந்த முறை ஆட்சியிலிருந்த போதே "இனிமேல் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம்" என்று தலைவர் கலைஞர் அறிவித்தார். பிறகு பொதுமக்கள் நடமாடும் இடங்களான பள்ளிக்கூடங்கள், கோயில்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருந்த 1300 மதுக்கூடங்களையும், 132 டாஸ்மாக் கடைகளையும் மூடினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் "இனிமேல் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருக்காது" என்று ஒரு மணி நேரம் டாஸ்மாக் கடையின் விற்பனையை மூட சொல்லி உத்தரவிட்டவர் தலைவர் கலைஞர் தான். 
2011ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருந்தால் நிச்சயம் மதுவிலக்கை தலைவர் கலைஞர் அமல்படுத்தியிருப்பார். ஆகவே மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று இப்போது திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பு 2016ல் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும். தாய்மார்களின் கண்ணீர் துடைக்கப்படும். ”  

 ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 29 நாளன்று தமிழகத்தில் மதுபானக் கடைகள் எண்ணிக்கை குறித்தும், கல்வி நிலையங்கள் எண்ணிக்கை குறித்து இதே தளத்தில் பதிவிட்டிருந்தேன்.   (http://ksr1956blog.blogspot.in/2015/03/6823-2739-tasmac-tamilnadu.html ) 




மதுவிலக்கைக் குறித்து திப்பு சுல்தானின் வரலாற்றில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. திப்புவின் மது ஒழிப்புச் சட்டம் (1787) பற்றி அவரது  திப்புவின் நிதி அமைச்சர் மீர் சாதிக் குறை கூறும் போது, அவருக்கு பதில் கடிதம் எழுதினார் திப்பு. 

அதில், நமது மக்களின் நலம், வளமான வாழ்வு இந்த இரண்டையும் விட அரசு கஜானாவை நிரப்புவதை முக்கியமானதாக கருதுவது எப்படிச் சரியானதாகும். பொருளாதார லாப நஷ்டங்களுக்காக தயங்கவோ, ஒதுங்கவோ செய்தால் மக்களுக்கு நல்லதல்ல. மதுவை முற்றாக ஒழித்து, மது காய்ச்சுவோருக்கு மாற்றுத் தொழிலை உருவாக்கிக் கொடுக்கவேண்டும் என்று எழுதியிருந்தார். 

கூடவே, பதப்படுத்துவதற்கு சாராயத்திற்கு பதில் சர்க்கரை பாகுவை பயன்படுத்தும் முறையை புழக்கத்திற்குக் கொண்டு வந்தார். பாங்க் என்னும் போதைப் பொருளை தடைசெய்தார். சாராயம் காய்ச்சுவோருக்கு மாற்றுத் தொழிலை உருவாக்கித் தந்தார்.



மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு போதைப் பொருட்களை ஒழிக்க முன்வந்த ஒரே மன்னன் திப்பு என்று போற்றுகிறார் எட்வர்ட் தாம்ஸன்.
வருமான இழப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் பூரண மதுவிலக்கையும், மதுவில் மக்கள் சக்தி தொலைந்துவிடாமல் காத்த உன்னதமான மன்னர்
 திப்பு என்று காந்தியாரே “யங் இந்தியா”வில் எழுதியுள்ளார்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-07-2015.



No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...