Wednesday, July 29, 2015

தமிழ்மகன் அப்துல் கலாமுக்கு சல்யூட்!

    
                                        


தமிழ்மகன் அப்துல்கலாம் மறைவுக்கு உலகமே துயரத்தில் புகழஞ்சலி செலுத்துகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புடின், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், சீன அரசு போன்ற பன்னாடுகளும் அவருக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளது. 

அவர் ராஷ்ட்ரபதி பவனில் இருந்தபோது எந்தச் சலுகைகளையும் எதிர்பார்க்காமல் எளிமையான வாழ்க்கை முறையைக் கடைபிடித்தார். குடியரசுத் தலைவர் என்ற பகட்டில்லாமல் சாதாரணச் சாமானியனுக்கும் தோழனாக இருந்த ஒரே உலகத் தலைவராகக் கலாம்தான் இருந்திருக்க முடியும். அவரை எப்போதும்  யாரும் எளிதில் சந்தித்துப்பேச இயலும்.


டெல்லி வாசனையோடு பதவிக்குப் போனவர்கள் வரலாற்றில் பாதுஷாக்கள் போல் தங்கள் வாழ்க்கையைக் கொண்டாடித்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் கலாமோ இந்தியாவின் தலைமகனாக தன்னுடைய பதவிக்காலத்தில் இருந்தாரேயொழிய எந்தத் தப்புத் தாளங்களுக்கும் துணைபோகவில்லை.

நானறிந்தவரையில், ராஜேந்திரபிரசாத், டாக்டர் ஜாகிர் ஹுசேன், அப்துல் கலாம் ஆகியோர்தான் எளிமையான வாழ்க்கையை அந்த அகண்ட பிரம்மாண்டமான மாளிகையில் வாழ்ந்தார்கள்.

வி.வி.கிரி தன்னுடைய ஜனாதிபதி பதவிகாலம் நிறைவுபெற்றுச் சென்றபோது, லாரிகள் நிறைய ராஷ்ட்ரபதிபவனிலிருந்து  பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது. அசோகச் சக்கரம் பொறித்த இருக்கையையும் கையகப்படுத்தி எடுத்துச்சென்றபோது அவரது துணைவியாரிடம் போராடி ராஷ்ட்ரபதி பவன் அதிகாரிகள் திரும்பப் பெற்றனர். இன்றைக்கு வி.வி.கிரி இல்லை. ஆனால் நடந்த சம்பவத்தை பதிவு செய்வதில் குறையொன்றும் இல்லை.

டெல்லியிலிருந்து வரும் ஆங்கில ஏடான, இந்துஸ்தான் டைம்ஸ் என்று நினைக்கின்றேன். அதில் ராஷ்ட்ரபதி பவனில் சமைக்கின்ற சுவையான உணவு வகைகள் டெல்லியிலுள்ள பல உணவு விடுதிகளுக்கு அனுப்பி அதைக் காசாக்கியதும் உண்டென்று எழுதியது.

ஊழல் சர்ச்சைக்குள்ளான பிரதீபா பாட்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக அமர்ந்தபோது, அந்த மாளிகையின் கண்ணியத்தையே அவரது குடும்பத்தார் கும்மாளம் போட்டு கெடுத்தனர். அரசு கஜானாவிலுள்ள பணத்தைத் தின்று கொழுத்து இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கெல்லாம் திரிந்து இந்திய சாமானியனின் வயிற்றலடித்ததெல்லாம் மறக்கமுடியாத சர்ச்சைகளாக எழுந்தன.
இதைக் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இவருடைய செலவீனத் தொகைகளைக் கேட்டறிந்தபின் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டார் பிரதீபா பாட்டில்.

குடியரசுத் தலைவர்களை ரப்பர் ஸ்டாம்ப்புகள் என்று சொல்வது வாடிக்கை. ஆனால் ராஜேந்திர பிரசாத், நீலம் சஞ்சீவ ரெட்டி, ஜெயில்சிங், அப்துல் கலாம் ஆகியோர், நாங்கள் ரப்பர் ஸ்டாம்ப்புகள் இல்லைஎன்று மறுத்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களில்  இன்னின்ன  தவறுகளும் பிரச்னைகளும் உள்ளன  என்று சொல்லித் திருப்பியனுப்பியதும் உண்டு.

பல குடியரசுத்தலைவர்கள் ஆளுங்கட்சியின் தஞ்சாவூர்ப் பொம்மைகளாய் இருந்தது இந்தியாவின் இறையாண்மைக்கு இழுக்காகிவிட்டது. மத்திய அரசுகள் பலமில்லாமல் கவிழ்ந்த பொழுது குறிப்பாக மொரார்ஜி ஆட்சி, அதன்பின் சரண்சிங் ஆட்சி, வி.பி.சிங் ஆட்சி, சந்திரசேகர் ஆட்சி, வாஜ்பாய் ஆட்சி, குஜ்ரால் ஆட்சி ஆகியவை  வீழ்ந்தபோது குடியரசுத் தலைவர்கள் செய்தித்தாள்களில் முதல்பக்கத்தில் இடத்தைப் பிடித்தனர்.

இப்படி உயர்ந்த இடத்தில் ஆங்கிலேய அரசாங்கம் நடத்திய தர்பார் மாளிகையில் கடந்த எழுபது ஆண்டுகளாக இந்திய அரசியல் சதுரங்கத்தில் நடந்த தெரிந்த செய்திகள், கமுக்கமான செய்திகள் ராஷ்ட்ரபதி பவன் சுவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

முதல் குடியரசுத்தலைவர் ராஜேந்திரப் பிரசாத்துக்கும் பிரதமர் நேருவுக்கும் கடுமையான அதிகாரப் போட்டி நடைபெற்றது. குடியரசுத் தலைவர் அதிகாரம் பெற்றவரா? பிரதமர் அதிகாரம் பெற்றவரா? என்ற சண்டைகளும் வாதப்பிரதிவாதங்களும் நடந்து, இறுதியாக உச்சநீதிமன்றத்திடம் கருத்து கேட்கப்பட்டது. நீதிபதிகள் பலநாட்கள் விசாரித்து மேண்டெஸ்க்யூவின் அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் அமைச்சரவையின் தலைவர் பிரதமர். அந்த அமைச்சரவையின் முடிவுகளைக் குடியரசுத் தலைவர் ஏற்பதும் வாடிக்கை.

இங்கிலாந்து அரசியலமைப்பு மாதிரியாக இந்தியாவின் அரசியலமைப்புக் கூறுகளும் நடைமுறையில் உள்ளன. பிரதமருக்கென்று அதிகாரங்கள், குடியரசுத் தலைவருக்கென்று அதிகாரங்கள் அதில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்முடிவுகள் மற்றும் அமைச்சரவையின் முடிவுகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது வாடிக்கை.

ஆனால் ஏற்றுக்கொள்ளாததை  மறுத்துத் திருப்பியனுப்பக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு என்று கருத்துகள் சொல்லப்பட்டன. இதைக் குறித்து இண்டியன் லா இன்ஸ்டிடியூட் இரண்டு நாட்கள் கருத்தரங்கு நடத்தியது. 1947 லிலிருந்து 1950 வரை இப்பிரச்னை விவாதப் பொருளாகவே நீடித்தது.

இந்து மதச் சட்ட மசோதாவில் ராஜேந்திர பிரசாத் ஒப்புதல் அளிப்பதற்கு மறுத்தபோது, நேரு கடுமையாக இதைக்குறித்து தனது கண்டனங்களை கடிதம் மூலமாக இராஜேந்திரப் பிரசாத்துக்குத் தெரிவித்ததும் உண்டு.  ஒருசமயம் ராஜேந்திரபிரசாத் துவாரகை பீடத்தில் உள்ள சங்கராச்சாரியாரைச் சந்திக்கச் சென்றபொழுது பிரதமர் நேரு, செல்லக் கூடாதென்று தடுத்தார். ஆனால் தனிப்பட்ட மனிதராக என்னுடைய மதத்தலைவரைச் சந்திக்கச் செல்வது என் மத உரிமை. இதைக் கேட்க நீங்கள் யார்? என்று ராஜேந்திரபிரசாத் சொல்லிவிட்டார்.  

டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தபொழுது தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை நிலுவையில் வைக்காமல் உடனுக்குடன் பைசல் செய்து கருணை காட்டினார். இதைப் பிரதமர் பண்டிதர் நேரு விரும்பவில்லை.

இந்தியாவிற்கு ஒரு கரும்புள்ளி என்னவென்றால் அமைச்சரவையே கூடாமல் இந்திரா காந்தியின் கோரிக்கையை ஏற்று நடைமுறைகளை உதறித் தள்ளிவிட்டு அவசர நிலையை அறிவித்தாரே பக்ருதீன் அலி அகமது, அவரை வரலாறு என்றைக்கும் மன்னிக்காது.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபொழுது குடியரசுத் தலைவரான ஜெயில்சிங் அவர்களோடு சீரான உறவுகள் இல்லை. ஜெயில்சிங்கின் தொலைப்பேசி இணைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக மத்திய அரசின் மீது குற்றச் சாட்டுகள் எழுந்தன. ஜெயில் சிங்கும் மத்திய அரசு அனுப்பிய கோப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது.  

ராஜாமடம் ஆர்.வெங்கட்ராமன், பிரிவு 356ன்படி ஆளுநர் பர்னாலாவின் பரிந்துரையில்லாமல் 130க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட திமுக ஆட்சியைக் கலைத்த போது, இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

1991ல் இந்தியாவில் கடும் பொருளாதாரச் சிக்கல் நிலவியபோது அதை எதிர்கொண்டவர் அன்றைய பிரதமர் நரசிம்மராவ். நரசிம்மராவ் நீண்டகாலமாக ஆந்திராவிலும் அகில இந்திய அரசியலிலும் முதல்வர், மத்திய அமைச்சர், பிரதமர், இந்திராகாந்தியின் தளபதி, காங்கிரஸ் கட்சித் தலைவர் இப்படிப்பட்ட அடையாளங்களைக் கொண்டவர் .டெல்லியில் அவர் இறந்தபோது அவரது உடலை டெல்லியில் நல்லடக்கம் செய்யக்கூடாதென்று அவசரஅவசரமாக சற்றும் கண்ணியமில்லாமல்  ஐதராபாத்திற்கு அனுப்பிவைத்தார்கள் டெல்லி வாலாக்கள். இதே போன்றுதான் வி.பி.சிங்கின் நல்லடக்கத்திற்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவத்தைத் தரவில்லை.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராஜாமடம் ஆர்.வெங்கட்ராமன், ராமேஸ்வரம் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த குடியரசுத் தலைவர்கள்.  டெல்லி பாதுஷாக்கள், வடபுலத்துத் தலைவர்களுக்கு ஒரு நியாயம், தென்புலத்துத் திராவிட மண்ணைச் சார்ந்த ஆளுமைகளுக்கு ஒரு நியாயம் என்று மாற்றாந்தாய்ப் போக்கில்தான் வரலாற்று ரீதியாக நடந்துகொண்டார்கள்.

இப்படியான சூழலில் குடியரசுத் தலைவர் என்ற பதவிக்கே  மகுடமாக விளங்கியவர்தான் நம் தமிழ்மண்ணின் மைந்தன் அப்துல் கலாம். ராமேஸ்வரத்தில் அவர் குடும்பத்தார் இறுதிச்சடங்கை நடத்த விருப்பம் தெரிவித்ததற்காக இந்திய அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர், விஞ்ஞானி, ஆற்றலாளர், ஆளுமையானவர், கலை ஆர்வலர், கவிஞர், ஓவியர், இலக்கிய கர்த்தா, இசை ஆர்வலர், வளர்ச்சியின் தொலைநோக்குப் பார்வையாளர், படைப்பாளி, மத இணக்கப் பற்றாளர் என பன்முகத்தன்மை கொண்ட அந்த ஆளுமைக்கு டெல்லியில் ஒரு நினைவிடம் அமைக்க வேண்டும். மத்திய அரசு தமிழ்நாட்டுக்காரர்தானே என்று நினைக்கக்கூடாது.

அப்துல் கலாம் பதவியிலிருந்தபோது அவரது அணுகுமுறை எப்படி என்றால், கசப்பான மருந்தைக் கொடுத்தாலும் நயம்பட விமர்சனத்தைச் சொல்லி நியாயங்களின் பக்கம் நின்றார். மரண தண்டனை கூடாது என்று தன் கருத்தை வெளியிட்டார். இந்தியக் குடியரசுத் தலைவர்களில் தரவரிசையில் முன்னணியில் எப்போதும் இருப்பார் நமது கலாம்.

ஒரு முன்னாள் குடியரசுத்தலைவர் சுற்றுப்பயணத்தின்போது, மருத்துவ உதவிக்கான குழுவுடன் அவசர ஊர்தியும் பயணிக்க ஏன் அசாம் மாநில அரசு ஏற்பாடு செய்யவில்லை என்ற வினாவும் எழுந்துள்ளது. கலாம் இன்னும் நூறாண்டுக்கும் மேலாக ஆரோக்கியமாக வாழக்கூடிய வாழ்க்கை முறைகளைக் கொண்டவர். அவருக்கு இப்படியொரு திடீர் முடிவா? இயற்கை இப்படிச் சோதிக்கின்றது….!



முதன்முதலாக ஒரு தலைவாின் இறப்பிற்காக, எந்த ஒரு பேருந்தின் கண்ணாடியும் உடைபடவில்லை, கடைகள் அடித்து மூடப்படவில்லை, வாகனங்கள் தீக்கிரையாக்கப் படவில்லை, வன்முறை ஏதும் ஏற்படும் என்ற பயத்தில் பொதுவிடுமுறை விடப்படவில்லை, யாரும் போலியாக அழவில்லை, மதுவிற்க்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டு எந்த கூட்டமும் வரவில்லை.


இதுதான் ஒரு தலைவா், மகத்தான மனிதருக்கு மக்கள் செலுத்தும் இறுதிமரியாதை. இறுதிமரியாதை என்பதை விட புகழஞ்சலி என்றுதான் கூறவேண்டும். வாழ்நாளில் எந்த தனிமனிதருக்கும் இதுவரை வழங்கப்படாத, ஏன் இனிமேலும் இதுப்போல நடந்திராத அளவிற்க்கு புகழஞ்சலி செலுத்தப்படுகிறது.



 - கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-07-2015

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...