ஆதிச்சநல்லூர் |
கீழடி |
____________________________________________________
சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமப் பகுதியில் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் ஒன்று கடந்தவாரம் அகழாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை ( பெங்களூர்) இதுகுறித்து ஆய்வு நடத்தியுள்ளது. இது ஒரு பழம்பெரும் நாகரீகமாகக் கருதப் படுகிறது. ஆய்வு செய்த மத்திய தலைமை அகழ்வாராய்ச்சியாளர். அமர்நாத் ராமகிருஷ்ணன், வைகைக் கரையோரம் ஆதியில் இருந்த நாகரீகத்தை இதனால் மேலும் ஆய்வு செய்யலாம் என்று கூறியுள்ளார்.
வைகை ஆற்றோரத்தில் கிட்டத்தட்ட முன்னூறு தொல்லியல் அடையாளங்கள் கொண்ட பகுதிகள் உள்ளன. இந்த ஆய்வில் அக்காலத்தில் சுட்ட செங்கலால் கட்டப்பட்ட கட்டிட அமைப்பு வகைகள், கூரை ஓடுகள், கண்ணாடி, பவளம், பளிங்குகள், தாழிகள், சுடுமண் பொருட்கள், இரும்பு மற்றும் செப்புப் பொருட்கள், மண்பாண்டத் துண்டுகள், பிராமி எழுத்துகள் என பழமையான பொருட்கள் கிடைத்துள்ளன.
இங்கிருந்து ரோமாபுரியுடன் வணிகத் தொடர்புகள் நடைபெற்றதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. நெல்லை அருகே உள்ள ஆதிச்சநல்லூர், மற்றும் அரிக்மேடு, காஞ்சிபுரம், துறையூர், கொற்கை, கரூர், அழகன் குளம் , ஈரோடு, குமரி மாவட்டம் என பரவலாகத் தமிழகம் முழுவதும் தொல்லியல் தரவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிந்துவெளி நாகரிகத்தை விட பழமையான நாகரிகம் திராவிட நாகரிகம் என்று பறைசாற்றக்கூடிய வகையில் இந்த ஆதாரங்கள் இருந்தாலும் மத்திய அரசு இந்த ஆவணங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.
திரு. சத்தியமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆய்வு செய்த ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வறிக்கை, திட்டமிட்டே மத்திய அரசால் பத்தாண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது கண்டனத்துக்குரிய செய்தியாகும்.
தமிழருடைய நாகரிகம் பழமையானது என்று பறைசாற்றப் பட்டுவிடக் கூடாது என்பதில் டெல்லியில் உள்ள சக்திகள் அக்கறை எடுத்துக் கொள்கின்றன. உண்மையைச் சொல்லப்போனால் தமிழகத்தின் வரலாறே சரியாகப் பதிவு செய்யப்படாமல் மறைக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் வரலாறே தென் திசை தமிழகத்தில் இருந்துதான் துவங்குகிறது என்பதை எவராலும் மறுக்கமுடியாது. வடபுலத்து வரலாற்றைப் பற்றி எழுதும்போது தோண்டித் துருவி எழுதுபவர்களுக்கு, உண்மையான தமிழக வரலாற்றை எழுத ஆங்கிலேயர் காலத்திலிருந்து மனம் வருவதில்லை.
வரலாற்றில் உண்மைகள் இருக்கவேண்டும். வரலாற்றை மறைத்தால் நேர்மையை அடகுவைப்பது போன்றதாகும். தமிழகத் தொல்லியல் தரவுகள் இன்னும் ஆய்வு செய்யப்படவேண்டிய இடங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.
தினமணி ஏட்டில், ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து வெளியான எனது இரண்டு கட்டுரைகள் :
1. http://goo.gl/TZkia7
2. http://goo.gl/omI2fE
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-07-2015.
No comments:
Post a Comment