2002 மே மாதம் இறுதி என்று நினைக்கின்றேன்.
அண்ணா அறிவாலயத்தில் இரவு 7.00மணி அளவில் சன் தொலைக்காட்சி செய்திகளை தலைவர் கலைஞர் அவர்களோடு பார்த்துக் கொண்டிருந்த போது, பி.ஜே.பி கூட்டணி ஆட்சியில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அறிவிக்கப்பட்ட செய்தியை பார்த்தோம்.
உடனே தலைவர் கலைஞர் அவர்கள், “உனக்கு அப்துல் கலாமைத் தெரியுமாய்யா” என்று கேட்டார். தெரியும் என்றேன். அவருடைய தொலைப்பேசி எண் இருக்கின்றதா என்று கேட்கவும் இருக்கின்றது என்று பதில் சொன்னேன்.
அவர் எங்கே இருக்கிறார் என்று தலைவர் கலைஞர் அவர்கள் கேட்டார். அண்ணா பல்கலைக் கழகத்தின் விருந்தினர் விடுதியில் தங்கியுள்ளார் என்று சொன்னேன். உடனே அவரை நாளை காலை பார்க்கவேண்டுமென்றார்.
இரவு வாய்ப்பிருந்தால் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யவும் என்றவுடன் அண்ணா பல்கலைக்கழக அலுவலர் திரு.ராதாகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு முதன்முதலாக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களோடு உடன்சென்று, அப்துல்கலாமைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
அப்போது தளபதி அவர்கள் சென்னை மாநகராட்சி மேயர். அப்துல்கலாம் தளபதி அவர்களிடம், “சென்னையில் குப்பைகளை அகற்றும் உங்களுடைய திட்டம் பாராட்டுக்குரியது. முன்னாள் எங்கு பார்த்தாலும் குப்பைகளும் கூளங்களுமாக இருந்தது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சென்னை நகரில் பாலங்கள் கட்டிய உங்கள் திட்டங்கள் சென்னை மக்களுக்கு பயன் தரும்” என்று சொன்னார்.
அடுத்தநாள் காலை தலைவர் கலைஞர் அவர்களோடு உடன் சென்று, அப்துல்கலாம் அவர்கள் தங்கியிருந்த அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் சந்தித்து தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து, தன்னுடைய திருக்குறள் உரை நூலையும் பரிசளித்தார்.
சமீபத்தில் அப்துல்கலாம் அவர்களை டெல்லியில் சந்தித்த பொழுது நதிநீர் இணைப்பு குறித்து எனது உச்சநீதிமன்ற வழக்கு தீர்ப்பைப் பற்றிக் குறிப்பிட்டு என்னை பாராட்டவும் செய்தார்.
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லவேண்டும்.
2001ல் நள்ளிரவில் உலகமே கண்ணீர் வடிக்கும் வகையில் தலைவர் கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டபோது, அப்துல்கலாம் அவர்கள் வேதனையோடு கைப்பேசியில் அழைத்து என்னிடம் விசாரித்ததும் நினைவுக்கு வருகின்றது.
ஜெயலலிதா 2001ல் ஆட்சிக்கு வந்தவுடன் அவருடைய ஊழல் வழக்குகள் வேறு மாநிலத்துக்கு மாற்றப் படவேண்டும் என்று மறைந்த முரசொலி மாறன் அவர்கள் தலைவர் அவர்களிடம் கருத்து தெரிவித்திருந்தார்.
அப்போது அறிவாலயத்தில் நான் தான் பணிகளைச் செய்து கொண்டிருப்பேன். டெல்லியிலிருந்து முரசொலி மாறன் அவர்கள் இதற்காக என்னை அழைத்த பொழுது, இரண்டு நாட்கள் டெல்லி சென்று தங்கவேண்டியிருந்தது.
மறைந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மோகன் அவர்கள் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு, ஊழல் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்ய வேண்டுமென பேராசிரியர் தாக்கல் செய்ய வேண்டிய மனுவைத் தயாரித்தார். உடனே என்னை சென்னைக்குப் பயணித்து பேராசிரியர் அவர்களிடம் அம்மனுவில் கையெழுத்துப் பெற்றுவரச் சொன்னார்.
அன்று மாலையே, தலைவர் அவர்களிடம் மனுவைக் காண்பித்து ஒப்புதல் பெற்று, பேராசிரியரிடம் கையெழுத்து வாங்கும் பொழுது, என்னிடம் ஒரு சிலர் இதெல்லாம் நடக்குமா என்று சொன்னதும் உண்டு.
2003-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி பேராசிரியர் கையொப்பமிட்ட மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விஷயங்களை எல்லாம் அறிந்தவர்களான முரசொலி மாறனோ, டெல்லி சம்பத்தோ இப்போது இல்லை. ஆனால், முன்னாள் மத்திய அமைச்சர் இராசாவின் தனிச் செயலாளராக இருந்த அகிலன் இராமநாதனுக்கு இதெல்லாம் தெரியும்.
ஜெயலலிதா ஊழல் வழக்கிற்காக மூன்று முறை டெல்லிக்குச் சென்றபோதும் அப்துல் கலாம் அவர்களையும் சந்திப்பதுண்டு. இராஷ்ட்டிரபதி பவனில் கலாம் அவர்களோடு நடைப்பயிற்சியில் இருந்தபோதும், அவரோடு உணவு அருந்தும் போதும், “அரசியலில் உங்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தள்ளிக் கொண்டே போகிறதே” என்று என் மீதுள்ள அன்பின் காரணமாகச் சொன்னது இன்றைக்கும் நினைவுக்கு வருகின்றது.
தலைவர் கலைஞர் அவர்கள் 2001ல் நள்ளிரவில் கைது செய்து விடுதலை செய்யப்பட்டபின் நடந்த (29-07-2001) தி.மு.க பொதுக்குழுவில் மறைந்த முரசொலி மாறன் அவர்கள், ஜெயலலிதாவுடைய அராஜக ஆட்சியில் இக்கட்டான நிலையில் அறிவாலயத்தில் “ம.தி.மு.கவிலிருந்து வந்த இராதாகிருஷ்ணன் தான் எப்போதும் இருக்கின்றார். எல்லோரும் தலைவர் வந்ததும் வந்துவிட்டுப் போகிறார்கள்” என்று பேசியது மறுநாள் தினமலரில் செய்தியாக வந்திருந்தது.
அந்தச் செய்தியை படித்துவிட்டு அப்துல்கலாம் என்னிடம், “முரசொலி மாறனே உங்களைப் பாராட்டியுள்ளாரே” என்று கைப்பேசியில் அழைத்துப் பேசியதெல்லாம் நினைவில் உள்ளன.
பேராசிரியர் வழக்கு இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது என்றால் அன்றைக்கு என்போன்றவர்கள் எடுத்த நடவடிக்கைகள் பலருக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. அதைச் சொல்வதற்கும் மனம் வேண்டும். உண்மையை அச்சமில்லாமல் சொல்ல வேண்டுமென்று தான் இந்தப் பதிவில் இதைக் குறிப்பிடுகின்றேன்.
என்னாளும் என்னோடு பாசத்தோடும், பரிவோடும் இருந்து என்னைப் பற்றிய செய்திகளையும், நான் எழுதும் தினமணி கட்டுரைகளையும் படித்துவிட்டு காலையில் கேட்கும் ஏ.பி.ஜே அப்துல்கலாமுடைய குரல் நின்றுவிட்டதே...
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-07-2015.
No comments:
Post a Comment