Tuesday, July 14, 2015

டெல்லியில் நடந்த நதிநீர் இணைப்புக்கூட்டம் - River Linking.





நேற்றைக்கு (13-07-2015)  நதி நீர் இணைப்பு குறித்து
ஐந்தாவது கூட்டம் டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றது.

உச்சநீதிமன்றம் 27-02-2012 அன்று அளித்த  எனது வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் நடப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், ஆமை வேகத்தில் இந்த பிரச்சனை நகர்கிறது.

 நதிநீர் இணைப்பு வழக்கை குறித்து பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் (1992), தேவகவுடா (1996 இறுதி), ஐ.கே. குஜ்ரால் (1997) ஆகியோரை நான் நேரடியாகச் சந்தித்து இதுகுறித்துப் பேசி பத்தொன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.

எனது வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானவுடன் மன்மோகன் சிங் அமைச்சரவையில் இருந்த நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ரவுத்தை இரண்டு முறையும், பா.ஜ.க நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியையும் சந்தித்து இதுகுறித்தான உச்சநீதிமன்ற ஆணையை நி|றைவேற்றுங்கள் என்று கோரிக்கை வைத்திருந்தேன்.

இதைத் தொடர்ந்து நதிநீர் இணைப்பு தொடர்பாக பி.என். நவலவாலா தலைமையில் மத்திய அரசின் குழு அமைக்கப்பட்டு இந்த ஐந்தாவது கூட்டம் நிகழ்ந்திருக்கிறது. இந்த நவலவாலா குழுவின் துணைக்குழுக்கலான இரண்டு குழுக்களின் காலத்தையும்  மத்திய அரசு  நீட்டிக்கவேண்டும்.

தமிழகத் நதிநீர்த்திட்டங்கள் நிலுவை யிலிருந்தாலும்  கேரளாவில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் உபரி நீரை தமிழகத்துக்குத் திருப்புவதும், கேரளாவின் அச்சங்கோவில் பம்பை நதியின் 25டி.எம்.சி நீரை தமிழக வைப்பாற்றோரு இணைப்பது போன்ற தமிழகத்தின் திட்டங்களை மத்திய அரசு கொள்ள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும், அதுகுறித்தான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இல்லை என்பது மனநிறைவைத் தரவில்லை.

தமிழக நதிநீர்த்திட்டங்கள் :  தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்,  காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம்
தென்பெண்ணை - செய்யாறு இணைப்புத் திட்டம் குறித்த முழுமையான பதிவை ஏற்கனவே இத்தளத்தில் பதிந்துள்ளேன்.

இதனால்  தமிழகத்தில் பாயும் பெண்ணையாறு (சாத்தனூர் அணை) பாலாறு இணைப்பு, பெண்ணையாறு (நெடுங்கல் அணைக்கட்டு) பாலாறு இணைப்பு; காவிரி (மேட்டூர் அணை) சரபங்கா இணைப்பு; அத்திக்கடவு- அவினாசி வெள்ளக்கால்வாய்த் திட்டம், தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டங்களை வகுத்திருந்தாலும் உரிய நிதி ஆதாரங்கள் மத்திய அரசிலிருந்து கிடைக்காமல் தொய்வில் உள்ளது.

திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தாமிரபரணி இணைப்புத் திட்டம்
 நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் தமிழ்நாட்டு நிதியில் கட்டப்பட்ட கன்னியாகுமரி நெய்யாறு அணை, நெல்லை மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் நீர்வரத்து, உள்ளாறு, செண்பகத்தோப்பு, அழகர் அணைத்திட்டம், முல்லைப் பெரியாறு, ஆழியாறு- பரம்பிக்குளம், பாண்டியாறு புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி எனப் பல நீர் நிலைப் பிரச்சனைகள் கேரளாவோடு உள்ளது.

அதேபோல கர்நாடகத்தோடு, காவேரி ஒகேனக்கல், தென்பெண்ணையாறு. ஆந்திராவோடு பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏறி போன்ற நீர்நிலைப் பிரச்சனைகளோடு ஒரு தீர்வு எட்டாமல் ஆண்டுகணக்கில் பிரச்சனைகளாகவே நிற்கின்றன. இந்த நதிநீர் இணைப்பைக் கொண்டு வந்தால் இந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வு எட்டப்படும்.

ராகுல் காந்தியினுடைய விருப்பத்திற்கேற்ப காங்கிரஸ் அரசு நதிநீர் இணைப்பை கிடப்பில் போட்டது.  பாட்டி இந்திராகாந்தி ஆதரித்த திட்டத்தை பேரன் ஏன் விரும்பவில்லை என்று தெரியவில்லை.  வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது அமைக்கப்பட்ட சுரேஷ் பிரபு குழுவின் அறிக்கையை முழுமையாகத் தாக்கல் செய்திருந்தால் இத்திட்டங்களுக்கு இப்போது அடிக்கல் நாட்டி இருக்கலாம். ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் அந்தக் குழுவின் காலத்தை நீட்டித்துத் தரவில்லை என்பது கவலைக்குரிய செய்தி.  என் வழக்கு நிலுவையிலிருந்தபோது இந்த குழுக்களின் காலத்தை நீட்டிக்கவேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.

சுற்றுச் சூழலையும் கவனத்தில் கொண்டு, உபரி நீரை வீணடிக்காமல் சமன் செய்து வறட்சியினால் பாதிக்கப்படும் தீபகற்ப இந்தியாவின் பிறபகுதிகளுக்கு வழங்குவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை.

ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும், சீனாவிலும், ஆப்ரிக்கா போன்ற நாடுகள் நதிநீர் இணைப்பை வெற்றிகரமாக செய்துள்ளனர்.  அதன் அடிப்படையில் இந்தியாவிலும் நதிநீர் இணைப்பை மேற்கொள்வதில் என்ன பிரச்சனை உள்ளது. நதிநீர் இணைப்புக்கு கேரளா, கர்நாடகா, ஒரிசா ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மகராஷ்ட்டிரா இதில் விருப்பப்படாமல் மௌனம் சாதிக்கிறது.

பிரதமராக தேவக்கௌடா இருந்தபோது, நான் அவரைச் சந்தித்து நதிநீர் இணைப்பை பற்றி பேச்செடுத்ததுமே “ அதெல்லாம் சாத்தியமில்லை” என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.  பெரிய பதவிகளில் இருந்து கொண்டு இப்படியான மனப்போக்கு இருந்தால் நாடு எப்படி முன்னேற்றமடையும் .

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் மன்மோகன்சிங்கைச் இது குறித்து சந்திக்க நேரம் கேட்ட பொழுது,  சம்பந்தப்பட்ட நீர்வளத் துறை அமைச்சர் ஹரீஷ் ரவுத்தைச் சந்திக்க பிரதமர் அலுவலகம்   கேட்டுக் கொண்டது.  ஹரிஷ் ரவுத்தை இரண்டு முறை சந்தித்தும், ராகுல்காந்திக்காக நதிநீர் இணைப்பு குறித்து தெளிவாகப் பேசாமல் வாய்மூடி மௌனியாக இருந்தார்கள்.

மோடி அரசின் நீர்வள அமைச்சர் உமாபாரதி அவர்களைச் சந்தித்தபின் இதுகுறித்து ஆராய மத்திய அரசின் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஐந்தாவது கூட்டம் ஆக்கப்பூர்வமாகவும் வேகமாகவும் இல்லாமல் உள்ளது.

மேலும், தென்னிந்திய நதிகளின் இணைப்பைக் குறித்து தீவிரம் காட்டாமல் , வட மாநிலங்களின் நதிகளான கேன் - பேட்வா நதிகள் இணைப்பதில் முனைப்புகாட்டுகின்றன. இதனால்  மத்திய பிரதேசம் உத்திர பிரதேசம் ராஜஸ்தான் வரை பயன்பெறும்.



தார் பாலைவனத்தில் உள்ள ராஜஸ்தானுக்கே பக்கத்து மாநிலங்களின் ஒத்துழைப்புடன் நதிநீரைத் திருப்பும் போது. கேரளாவில் வீணாகக் கடலில் சென்று கலக்கும் அதிகப்படியான நீரை தமிழகத்துக்குத் திருப்புவதில் மட்டும் ஏன் சண்டித்தனம் என்று தெரியவில்லை.

மத்திய அரசு 1975லிருந்து  கொள்கையளவில் ஏற்றுக்கொண்ட, கேரள உபரி நீரை தமிழகத்துக்கு திருப்ப வேண்டுமென்ற விவாதம் எழுத்துகளில் உள்ளதே தவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை.  11வது ஐந்தாண்டு திட்டத்தில் 22.6மில்லியன் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசான வசதி செய்யக்கூடிய அளவில் உபரி நீர் பயன்படுத்தப் படும் என்று திட்டமிட்டும் இன்றுவரை அது கொள்கையளவில் மட்டுமே உள்ளது.

நதிநீர் இணைப்பு என்பதில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா என்ற உணர்வு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படவேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-07-2015.


Related Posts 



http://ksr1956blog.blogspot.in/2015/03/river-linking-in-tamil-nadu.html

http://ksr1956blog.blogspot.in/2015/04/river-linking-questions-and-supreme_15.html

http://ksr1956blog.blogspot.in/2015/06/linking-of-ken-and-betwa-rivers.html

http://ksr1956blog.blogspot.in/2015/05/river-linking-and-water-resources.html

http://ksr1956blog.blogspot.in/2015/03/pamba-achankovil-vaippar-link.html

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...