நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த அறிவிப்பை
தலைவர் கலைஞர் அவர்கள் தி.மு.க 2016ல் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கு என உறுதி அளித்துள்ளது மகிழ்ச்சியான செய்தி. தமிழகத்தின் தாய்மார்கள் மட்டுமில்லாமல் அனைவருக்கும் இச்செய்தி மிகுந்த நம்பிக்கையையும், ஆறுதலையும், நிம்மதியையும் தரும்.
தமிழகத்தில் மதுவிலக்கை குறித்து சில செய்திகள் சொல்லியாகவேண்டும். ஆங்கிலேயர் காலத்திலிருந்து
தொடர்ந்து தமிழகத்தில் மதுவிலக்கு என்பது தெளிவில்லாத போக்கில் தான் இருந்துள்ளது.
தந்தை பெரியார் காந்தியாரின் அழைப்பை ஏற்று, மதுவிலக்கிற்காகத் தனக்குச் சொந்தமான ஐநூறு தென்னைமரங்களை வெட்டிச் சாய்த்தவர்,
கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு தானும் தனது குடும்பத்தினருமாக கைதாகி சிறை சென்றவர்.
தமிழ்நாட்டில் மது என்ற அரக்கன் இருக்கக்கூடாது என்ற சிந்தனையில் தந்தைப் பெரியார் இருந்தார்.
காந்தி வழி வந்த மூதறிஞர் இராஜாஜி, 1937இல் தமிழக முதலமைச்சராகப் பெறுப்பேற்றதும் மதுவிலக்குச் சட்டத்தைக் கொண்டுவந்தார். முதன்முதலில் தனது சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கு அமுல் செய்யப்பட்டது. அப்போதைய கவர்னர், மதுவிலக்கை அமுல்படுத்தினால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும்; அதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று எச்சரித்தார். அப்போதும், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வழி என்ன என்று யோசித்தாரே தவிர மதுவிலக்கிலிருந்து பின்வாங்கவில்லை இராஜாஜி.
பேரறிஞர் அண்ணா, ‘ஆட்சி நடத்தத் தேவைப்படும் வருமானத்துக்கு, மதுவை அனுமதிப்பது என்பது,
"மூட்டைப் பூச்சியை ஒழிக்க, வீட்டைக் கொளுத்தும் தீங்கு ஆகி விடும்" என்ற உணர்வு கொண்டவராகவே, முழு மதுவிலக்கை நிலைநாட்டினார்.பெருந்தலைவர் காமராஜரும் இதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
இவர்களைப் போலவே பசும்பொன் தேவர் அவர்களும், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், பொதுவுடைமை இயக்கத் தலைவர்களான ஜீவா, பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் மதுவிலக்கு இருக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பியதெல்லாம் கடந்தகால தமிழக வரலாறு.
இந்த இடத்தில் ஒன்றைப் பதிவு செய்ய வேண்டும். 1971ல் எந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் மது வந்தது, அன்றைய தினங்களில் இன்றைக்கு போல மனப்போக்கும் சமுதாயச் சூழலும் இல்லை.
இரண்டு முக்கிய காரணங்களுக்காக தமிழகத்தில் மது அனுமதிக்கப்பட்டது. அண்டை மாநிலங்களுக்குச் சென்று குடிப்பதும், அங்கிருந்து மது வகைகளைக் கடத்தி வருவதும், தமிழகத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சி, அதைக் குடித்து சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதும், இதனால் தமிழர்கள் சாவதும் செய்திகள் வந்தன.
அந்த நிலையில் தான் தமிழகத்தில் மதுவிலக்கு நீக்கப்பட்டது என்ற சூழலைச் சொல்லவேண்டிய கடமையும் உள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கு குறித்து 43ஆண்டுகால வரலாற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
1971 திமுக ஆட்சியில் மதுக்கடைகள் திறக்கப் பட்டாலும் 1974ல் அன்றைய முதல்வர் கலைஞர் மதுவிலக்குக்கு உத்தரவிட்டு மதுக்கடைகளை மூடினார். பின் எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் தெருவுக்கு ஒரு சாராயக்கடை திறக்கப்பட்டு, தனியாருக்கு விற்பனை உரிமங்களும் வழங்கப்பட்டன. 1983ல் இதனை சீர்படுத்த இன்றைய டாஸ்மாக் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தில் ( Tamil Nadu Prohibition Act, 1937) வியாபார ரீதியாக நடத்தக் கூடிய திருத்தங்களும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது.
நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்; நடக்கப் போகிறவை நல்லவையாகவே இருக்கட்டும் என்ற நிலைப்பாட்டில் தலைவர் கலைஞர் அவர்கள், தெளிவாக இன்றைக்கு உறுதியளித்து விட்டார்கள். இதை மக்கள் சிந்தித்து, நல்ல முடிவை 2016 தேர்தலில் வழங்கவேண்டும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-07-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #, #
சமூகம் திருந்தாது, தனிமனிதன் திருந்த வேண்டும்! http://manam.online/News/Social-Issues/2016-MAY-20/Campaign-to-Eradicate-Liquor-6
ReplyDelete