Friday, July 24, 2015

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - Sri Lanka Parliament Election .

இன்றைக்கு வெளியான 28-07-2015 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் , இலங்கையில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையும், அங்குள்ள அரசியல் சூழ்நிலைகளை வெளிப்படுத்தும் விதமாக எனது கட்டுரை வெளியாகி உள்ளது.







***

இலங்கையில் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாக நடந்தாலும், அங்குள்ள தமிழ் மக்களிடம் ஒரு இறுக்கமான நிலையே இருக்கின்றது.   தமிழகர்களின்  பிரதிநிதியாக யார் நாடாளுமன்றம் சென்றாலும் தங்களுடைய வேதனைகள் தீர்ந்துவிடுமா என்ற கேள்விக்குறியோடான மனநிலைதான் தமிழர்களிடம் இருக்கின்றது.  ஆனாலும் தேர்தல்களம் சூடேறி உள்ளது.

அதற்கு முக்கியக் காரணம் கடந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த இராஜபக்‌ஷே  இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையின் ஆளும் கட்சியான ‘ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு’ சார்பாக இலங்கையின் வடமேற்கில் அமைந்துள்ள குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவது தான்.

கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் இராஜபக்‌ஷே வுக்கு தேர்தலில் போட்டியிட கட்டாயத்தின் பேரில் வாய்ப்பு வழங்கியதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்திருக்கிறார். இதன்மூலம்  தனக்கு வாக்களித்த மக்களில் முதுகில் குத்தும் துரோகச்செயலில் இறங்கிவிட்டார் மைத்ரி என்பதை பலரும் கவனிக்கத் தவறவில்லை.

இலங்கையில் நடக்கும் சிறிசேனாவின் கடந்த ஆறுமாதகால ஆட்சியை இதற்குச் சான்றாகச் சொல்லலாம். யார் தன் வெற்றிக்குக் காரணமாக இருந்தார்களோ அந்த மக்களின் மீதுள்ள அடக்குமுறைகளை நிறுத்த முன்வரவில்லை.

இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் மட்டும் இராணுவக் கட்டுப் பாட்டில் இருப்பதும், தமிழர்கள் திருமணம் போன்ற எந்த  சமுதாய நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமென்றாலும் இராணுவத்தின் அனுமதியைப் பெறவேண்டியுள்ள நிலைமையும் இன்றும் தொடர்ந்தபடியே உள்ளன. அதுமட்டுமில்லாது சிகை திருத்தும் நிலையம் ஆனாலும்கூட அனுமதி பெற்றுத்தான் நிறுவ வேண்டியுள்ளது. பதட்டத்தை உருவாக்கும் இராணுவத்தை திரும்பப் பெறவும் மைத்ரி சிறிசேனா அக்கறை செலுத்தவில்லை.

தமிழர்களிடம் பறிக்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைப்பேன் என்றி சொன்ன உறுதிமொழியை கிடப்பில் போட்டுள்ளது இன்றைய சிங்கள அரசு.
 வடக்கு, கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு , காவல்துறை, நில நிர்வாகம், நிலவருவாய், மீன்பிடித்தொழில் போன்ற அதிகாரங்கள் வழங்கப் படாததால் வரிகளும், வருவாயும் இல்லாமல் மாகாண கவுன்சிலின் நிர்வாகம் கைகள் கட்டப் பட்ட நிலையிலே நீடிக்கிறது.

மாகாண கவுன்சிலின் முதல்வர் விக்னேஸ்வரன் தன் அலுவலகத்துக்கு பேனா பென்சில் வாங்க வேண்டுமென்றால் கூட ஆளுநர் மூலமாக கொழும்பு அரசாங்கத்தை கையேந்தவேண்டிய நிலை.

தமிழர்களுக்கு இலங்கையில் சேர்ந்துவாழ விருப்பம் இல்லை என்றால் அதைக்குறித்து தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக் கூடிய வகையிலும், 2009ல்  இராஜபக்‌ஷே இலங்கையில் நடத்திய இனப் படுகொலை குறித்தான சர்வதேச, சுதந்திரமான, நம்பகமான விசாரணை குறித்து தெளிவாகப் பேசி எந்த முடிவும் சிறிசேனா எடுக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக தன் ஆட்சிகாலத்தில் இராஜபக்‌ஷே செய்த அட்டூழியங்கள், ஊழல்கள் குறித்து வழக்கு கூடத் தொடுக்கப் படவில்லை. இந்நிலையில் நாடாளுமான்ற  தேர்தல் களத்தில் குருநாகல் மாவட்டத்தில் இராஜபக்‌ஷே போட்டியிடுகின்றார்.
தன் அதிகாரங்களைச் சரியாக பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் மைத்ரி சிறிசேனா செயல்படாததின் விளைவு தான் “கட்டாயங்களுக்கு அடிபணிந்ததாக” அவரையே சொல்ல வைத்திருக்கிறது.

சிங்களர்களிடையே இராஜபக்‌ஷே வுக்கு இருக்கும் செல்வாக்கு பௌத்த சிங்களரான அதிபர் மைத்ரி சிறிசேனாவுக்கு இருக்கவில்லை என்பது தான் உண்மை. எந்தப் பிரச்சனைகளிலும் அடிபடாததும், போர்காலங்களில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை ஏற்று நடத்தியதும் சிறிசேனாவுக்கு அரசியல் வட்டத்திலே நன்மதிப்பைக் கொடுத்திருந்தாலும் அவர் தன் சொந்த மாவட்டமான பொலநறுவைத் தவிர அதிகம் அறியப்படாதவர்.

அப்படியிருந்தும் அவர் அதிபர் தேர்தலில் வெற்றிபெற முக்கியக் காரணம் தமிழர்களும் இஸ்லாமியர்களும் அளித்த வாக்குகள் மற்றும் இராஜபக்‌ஷே  மீது அவர்களுக்கு இருந்த வெறுப்புகள் தான்.

ஆட்சிபீடத்துக்கு வந்த சிறிசேனாவால் இலங்கை அரசியலின் நெழிவு சுளிவுகளைச் சமாளிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. ஒருபக்கம் தன்னுடைய சுதந்திரா கட்சியை நிர்வகிப்பதும், மறுபக்கம் தன் வெற்றிக்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஆதரப்பதும் என்ற இரட்டைக்குதிரைச் சவாரிக்கு அவர் சரிப்பட்டுவரவில்லை.

புவியியல் ரீதியாக இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு இலங்கை முக்கியத் துருப்புச் சீட்டாக இருப்பதால் அதன் அரசியல் மாற்றங்களை கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டு வருகின்றன.
இராஜபக்ஷே  தன்னை வெளிப்படையாக சீனாவின் ஆதரவாளனாகக் காட்டிக்கொண்டார்.

இலங்கையுடனான சீனாவின் ஒப்பந்தங்கள் பல இவர் ஆட்சிகாலத்தில் கையெழுத்தாகின. போருக்குப் பிறகு பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த இலங்கையை   புணரமைக்க சீனா உதவியதுகூட இராஜபக்ஷே  மீதிருந்த நம்பிக்கையின் காரணமாகத்தான். சீனாவும் இராஜபக்‌ஷே  வெற்றிபெற காய்களை நகர்த்திவருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சிகள் உட்பட எதிர்கட்சிகள் இணைந்து தனிக்கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்தத் தேர்தலிலும் இராஜபக்‌ஷே  தோல்வியைத் தழுவுவார் என்று சிறிசேனா குரல் கொடுத்திருப்பது கூட சந்தேகங்களுக்கு உட்படுத்தப் படவேண்டியது.

கொழும்பில் இரவு நேரங்களில் ரகசியமாகவும், பத்திரிகையாளர்கள் முன்புமாக  மொத்தம் மூன்று முறை மைத்ரி சிரிசேனாவும்,இராஜபக்‌ஷே வும் புளகாங்கிதமாகச் சந்தித்துக் கொண்ட  காட்சிகளை அவ்வளவு எளிதில்  மறந்துவிட முடியாது.

இலங்கைத் தமிழர்கள் உள்ளத்தில்இராஜபக்‌ஷே ஒருவேளை வெற்றியடைந்தால் தோற்கடித்த மக்கள் மீது தொடுக்கும் பழிவாங்கல் நடவடிக்கை எத்தனை கொடூரமானதாக இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

இராஜபக்‌ஷே வுக்கு பழிவாங்கும் எண்ணம் என்பதொன்றும் புதிதல்ல. கடந்த அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பென்சேகோவை சிறையிலடைத்து சித்ரவதை செய்து உள்ளூரக் குளிர்ந்தவர் தான் இராஜபக்‌ஷே  மைத்ரி தன்னை எதிர்த்து தேர்தலில் நின்றபோது கூட மரணத்தோடு மோதுகிறார் என்று அறிவிக்கவும் துணிந்தவர் இராஜபக்‌ஷே .

துட்டகைமுனு மன்னனுக்குப் பிறகு இலங்கையை முழுவதுமாக ஆட்சி செய்தவர் என்ற பிம்பத்தை இராஜபக்‌ஷேவுக்கு வழங்கிய அவரது ஆதரவாளர்களுக்கு இந்த மீள்பிரவேசம் புத்துணர்வு தரலாம். ஆனால் புலம் பெயர்ந்தும், தன் நிலைகள் இழந்தும், பல உயிர்களைக் காவு கொடுத்தும் போராடின மக்களுக்கு ஒவ்வொரு நாளும் கலக்கமாகவே முடிகிறது.


இலங்கை தேர்தல் வரலாற்றில் இரண்டு தேர்தல் முறைகள் அமுலில் இருந்துள்ளன. சுதந்திரத்தின் பின்னர் 1978ஆம் ஆண்டு வரையில் அமுலில் இருந்த தொகுதிவாரி தேர்தல் முறையும் 1978ஆம் ஆண்டு முதல் இன்று வரை அமுலில் இருக்கும் விகிதாசார தேர்தல் முறைகளாகும்.. இந்த இரண்டு வகையையும் கலந்து கலப்பு தேர்தல் முறையொன்றையே கடந்த வாரம் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொகுதிவாரி தேர்தல் முறை விகிதாசார தேர்தல் முறை ஆகியவற்றிலுள்ள நல்ல அம்சங்களை பயன்படுத்திக் கொள்வதே புதிய சட்ட திருத்தத்தின் நோக்கமென கூறப்படுகிறது. ஆனால் கலப்பு தேர்தல் முறைக்குள் அவ்விரண்டு தேர்தல் முறைகளினதும் நல்ல அம்சங்கள் மட்டுமன்றி மோசமான அம்சங்களும் புகுந்துள்ளன.

கடந்த சிலநாட்கள்முன்பு, உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாக இரண்டு சட்டத் திருத்தங்கள் இலங்கையில் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் இந்த தேர்தல்திருத்த சட்டமே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் அதன் மூலம் எதிர்கால அரசியல் களத்தில் பெரிய மாற்றங்கள் இடம் பெறும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. அதேவேளை இந்த சட்ட மூலம் சிறுபான்மையினரின் அரசியலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதே.

இரண்டு கட்சிகள் போட்டியிட்டு, ஒரு கட்சி 51 சதவிகித வாக்குகளை பெற்று, பலதொகுதிகளையும் வென்றும் இருந்தால் அக் கட்சிக்கும் 70 இடங்கள் கிடைக்கும். மற்றக் கட்சி மிகச் சிறிதளவு வாக்குகளை குறைவாக பெற்றிருந்தால் அதாவது 49 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தால் 30 இடங்கள் வழங்கப்படும். அதாவது வாக்கு விகிதம் 51:49  என்று இருந்தாலும்  கிடைக்கும் இருக்கைகள் 70:30 என்ற விகிதத்திலே அமையும்.

இதுவரை இல்லாத அளவுக்கு 150க்கும் மேலான பௌத்த பிக்குகள் இந்த பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.  எந்த நாட்டில் தேர்தல் நடைபெற்றாலும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் அனதில் கலந்துகொள்வது உண்டு. கடந்த முறை மைதிரி சிரிசேனா வெற்றிபெற்ற அதிபர் தேர்தலில் இந்தியாவிலிருந்து முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி கோபாலசாமி பார்வையாளராக கலந்துகொண்டார். தற்போது இலங்கையில்  நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த என்பதுபேர் கொண்ட குழு கலந்துகொள்ள உள்ளது.

மைத்ரியின் நிலைமை ஒரு ஆளுமைக்கு உட்படாமல் இருப்பதும், ரணில் விக்ரமசிங்கேவும், சந்திரிகாவும், மைத்ரியுமாக மூவர் என்ற நிலையை விட்டு ஒருவருக்கொருவர் சிரித்துக்கொண்டே தனித் தனியாக வெவ்வேறு திசையில் முகத்தைத் திருப்பிக்கொண்டு பயணிக்கும் நிலைதான் உள்ளது.

இதற்கிடையில் ரணிலுக்கும் சந்திரிகாவுக்கும் உள்ளார்ந்த போட்டிகள். யார் சொல்வதை மைத்ரி சிறிசேனா கேட்பார் என்ற பலப்பரிட்சைகள். பொம்மையான மைத்ரி சிறிசேனாவுக்கும் கொடிய இராஜபக்‌ஷே வுக்கும் நடக்கும் பலப்பரிட்சைதான் இந்த நாடாளுமன்றத் தேர்தல்.

தமிழர் பகுதியில் போட்டியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியிலும் சரியான ஒருங்கிணைப்பும் இல்லை. மைத்ரி வந்தாலும் இராஜபக்‌ஷே  வந்தாலும் தமிழர்களுடைய நிலைமை மேம்படாது என்பதுதான்  நிலை.

இந்திரன்கள் மாறினாலும் இந்திரசபை ஒன்றுதான்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-07-2015.


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...