சேற்றில் உழைத்து நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளை அமைச்சர் பதவிகளில் அமர்ந்துகொண்டு கேவலப்படுத்தும் வகையில் விமர்சிப்பது கடுமையாக கண்டனத்திற்கு உரியது.
விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்வது அனைவரும் அறிந்தது. அவர்களைக் கொச்சைப் படுத்தும் வகையில், மத்திய விவசாய அமைச்சர் இராதாமோகன் “ விவசாயிகளிடம் ஆண்மையில்லை, காதல் தோல்வியினாலும், வரதட்சணை கொடுமை போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று அபத்தமாகப் பேசியுள்ளார்.
ஏசி அறையில் அமர்ந்துகொண்டு, அரசுப் பரிபாலனங்களைச் சேர்ந்த எவர் எவரோ திரட்டிக் கொண்டுவந்து கொடுக்கும் அண்டப்புழுகு புள்ளிவிபரங்களை (படம்.1) நுனிப் புல் மேய்ந்துவிட்டு கீழ்த்தரமான அறிக்கைகளை விடும் இதுபோலான தற்குறிகள் ஒருகனம் கூட பதவியில் நீடிக்க அறுகதையற்றவர்கள்.
விவசாயி என்பவன் சேற்றில் கைவைத்தால் தான் இது போலான வாய்க்கொழுப்பு பிடித்த அமைச்சர்கள் சோற்றில் கை வைக்கமுடியும் என்பதை மறட்ந்துவிட்டு எப்படி நன்றியில்லாமல் இப்படி நாவெடுத்துப் பேச முடிகிறது என்று தெரியவில்லை.
பருவ மழை பொய்த்துப் போவதும், இடுபொருட்கள் விலை உயர்வுதும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை இல்லாததும், விளைச்சல்கள் குறைந்து கடன் தொல்லை தாளாமல் மானத்தோடு தங்களை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகளின் வாழ்வுக்கு வழிவகை செய்யாமல், அவர்களுக்கு ஆண்மையில்லை என்று அவதூறு பேசியிருக்கும் அமைச்சர் இராதாமோகன் எப்படி மத்திய விவசாயத் துறை அமைச்சராக வலம்வரமுடியும்.
விவசாயிகளைக் கேவலமாகச் சித்தரிக்கும் இராதா மோகன் போன்ற அமைச்சர்கள் நாட்டுக்குத் தேவைதானா. பிரதமர் மோடி உடனடியாக இவரை பதவியிலிருந்து தூக்க வேண்டும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-07-2015.
No comments:
Post a Comment