கடந்த நவம்பர் 26ம் தேதி அரசியல் அமைப்பு சட்ட நாள் அன்று, நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா அவர்கள் பேசும்போது நாட்டு நலனுக்காக நூற்றுக்கும் அதிகமான திருத்தங்களை அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தியுள்ளோம் என்ற இன்றைக்கு அவருடைய முழுப் பேச்சை படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அவருடைய மாமியார் இந்திரா காந்தி அவர்கள் அவசர காலத்தில் கொண்டு வந்த 42வது அரசியலமைப்பு திருத்தம் நியாயம்தானா? அந்த திருத்தத்தினால் ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சி எல்லாம் குழி தோண்டி புதைக்கப்பட்டதே.
மற்றொரு திருத்தம், 39வது திருத்தம் என்ன சொன்னது? இதன்படி தேர்தல் தாவா மனுக்கள் எல்லாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யமுடியாது என்று திருத்தப்பட்டதை தவறு என்று நீதிமன்றம் குறிப்பிட்டதே? இந்திரா காந்தி அவர்கள் ரேபரேலி தொகுதியில் வெற்றிபெற்றது செல்லாது என்று ராஜநாராயணன் தொடர்ந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்திராவுக்கு எதிராக தீர்ப்பு கொடுத்ததினால் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த திருத்தத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவசர அவசரமாக 17 மாநில சட்டமன்றங்களிலும் 1975 ஆகஸ்ட் 9ம் தேதி ஒரே நாளில் சனிக்கிழமை அன்று விடுமுறை நாள் என்றெல்லாம் பார்க்காமல் இந்திரா காந்திக்காக அவசர அவசரமாக சட்டம் கொண்டுவரப்பட்டதே? இது சோனியா காந்திக்கு தெரியாதா?
42வது திருத்தத்தில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுடைய எண்ணிக்கை அவசியம் இல்லை என்று கூட சட்டத் திருத்தத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதே? இப்படி அபத்தமான திருத்தங்களையும், ஜனநாயகத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு திரும்பப் பெறப்பட்டதே? இதெல்லாம் சோனியாவுக்குத் தெரியாதா? இது ஜனநாயகமா? இதில் என்ன மக்கள் நலன் உள்ளது?
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் எல்லாம் மக்கள் நலனுக்காக கொண்டுவரப்பட்டது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஜனநாயக பூக் காட்டில் இவையெல்லாம் களைகளாக அன்றைக்குத் தெரிந்ததே? இன்றைக்கு சோனியா இதை நியாயப்படுத்தி பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
No comments:
Post a Comment