Monday, December 7, 2015

பாளை புனித சவேரியர் கல்லூரியில் நடந்த கரிசல் இலக்கிய கருத்தரங்கு

கடந்த 28.11.2015 அன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டை புனித சவேரியர் கல்லூரியில், இக்கல்லூரியும், உலகத் தமிழ் பண்பாட்டு மையம், கோவை இணைந்து கரிசல் இலக்கிய வளம் என்ற கருத்தரங்கு சிறப்பாக நடந்தேறியது.

கரிசல் படைப்பாளிகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளும் வாசிக்கப்பட்டு அதைத் தொகுத்து உலக தமிழ் பண்பாட்டு மையம் நூலாக வெளியிட்டுள்ளது.  இதை சிற்பி பாலசுப்ரமணியமும், ப.க. பொன்னுசாமியும் இணைந்து தொகுத்து அணிந்துரையோடு வெளியிட்டுள்ளனர்.

இது ஒரு நல்ல முயற்சி. கரிசல் இலக்கிய வளம் என்ற தொகுப்போடு பல பதிவுகளோடு பயனுள்ளதாக உள்ளது.  ஆய்வுக்கு பயன்படும் நூலாகும்.

தமிழ் இலக்கிய உலகில் கரிசல் இலக்கியம், கரிசல் மண் என்பது தவிர்க்க முடியாதது. கிராமப்புற அப்பாவி சம்சாரிகளும் அவர்களுடைய வாழ்க்கை முறைகளும் கரிசல் வட்டார மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. இந்த படைப்புகளை படிப்பது மட்டுமல்ல மனதை ஈர்க்கக் கூடியதாகும்.  கவடு, சூது இல்லாத இந்த மக்களின் வாழ்க்கை முறைகளை அனைவரும் கவனிக்க வேண்டும்.

இது குறித்து எனது நிமிர வைக்கும் நெல்லையில் கரிசல் பூமி என்ற தலைப்பில் எனது பதிவு:

கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்‘ கதையை இயக்குநர் பாலச்சந்தர் இயக்க, கோவில்பட்டி அருகே ஏழுபட்டி என்ற கிராமத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம். அத்திரைப்படம் மூலமாகக் கரிசல் மண்ணின் வாழ்க்கையைத் தெளிவாகத் தமிழகம் பார்த்தது. அரசின் திட்டங்கள் கூட அங்கு எட்டிப் பாராத நிலையையும் திரைப்படம் தெளிவுபடுத்தியது.‘

ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள கரிசல் கந்தக பூமி போராளிகளையும், இலக்கியகர்த்தாக்களையும் உருவாக்கியுள்ளது. திரு. ஆர்.எஸ். ஜேக்கப் கந்தக பூமியைப் பற்றிச் சொல்லும்பொழுது ”கரிசல் பூமி, குடிதண்ணீருக்குக் கூப்பாடு. ஆனா அதுக்குன்னு ஒரு பெருமை இருக்கு. உப்புத் தண்ணிக்கு எங்க ஊரு உலகப் பிரசித்தம். நிறைய இறவைக் கிணறு இருக்கு. எல்லாம் உவர் தண்ணீர். குளத்துக்குள்ள ஊத்து தோண்டி ஊற ஊறத் தண்ணி எடுத்துக் குடிப்போம். கண்ணீர் மாதிரி சொட்டுச் சொட்டா தண்ணி சுரக்கும். அதைச் சிரட்டையில் வழிச்சி வழிச்சி மண் குடத்துல ஊத்துறது தனிக் கலை. கரிசல் மண்ணுக்குன்னு தனியா ஒரு மணமுண்டு. ஆண்டுக்கு மூணு மழை பெய்தா வானம் பார்த்த பூமி. அந்த மழையும் பெய்யாட்டா வனாந்தர பூமி. எந்த நதியும் எங்களை நனைத்ததுமில்லை. உவர் தண்ணிக்கு மிளகாய் நல்லா காய்க்கும். எள்ளுச் செடி தள்ளி வளரும். எங்க மொழியே தனி. ‘என்லே எப்படி இருக்கா?‘ இப்படித்தான் நலம் விசாரிப்போம். எங்க பேச்சுமொழி கொச்சையாத்தான் இருக்கும். ஆனா, இலக்கியம் கொஞ்சி விளையாடும்“ என்று குறிப்பிடுகிறார்.  இப்படி என்னுடைய நிமிர வைக்கும் நெல்லையில் கரிசல் பூமியும், கரிசல் இலக்கியங்களை குறித்து விரிவான பதிவுகளும் உள்ளன. வெளிவர இருக்கும் இரண்டு தொகுதிகள் அடங்கிய விரிவான பதிப்பிலும் அதிகமான தரவுகளோடு வெளியிடப்படும்.

கரிசல் இலக்கியத்தின் முன்னோடிகளான கி.ராஜநாராயணனும் அவருடைய சகா கு. அழகிரிசாமியும் இதற்கு பிதாமகன் மட்டுமல்லாமல் விதையிட்டு இந்த இலக்கியங்களை வளர்த்தவர்கள்.  முன்னயத்தி ஏரான கி.ரா.வினுடைய அரவணைப்பால் பல இளம் கரிசல் படைப்பாளிகள் தோன்றினர்.

இப்படியான வரலாறும் கீர்த்தியும் பெற்றதுதான் கரிசல் இலக்கியம்.

புனித சவேரியர் கல்லூரியில் நடைபெற்ற கரிசல் இலக்கிய கருத்தரங்கில் கதைசொல்லி பொறுப்பாசிரியர் கழனியூரான், தி.சு. நடராஜன், இரா. காமராசு, பேராசிரியர் க. பஞ்சாங்கம், சு. வேணுகோபால், ந. முருகேசபாண்டியன், ம. மணிமாறன், துரை. சீனிச்சாமி, ஆ. பூமிச்செல்வம், ஜெ. ஷாஜகான், எஸ். தோதாத்ரி, ந. ரத்னகுமார், பா. ஆனந்தகுமார் என்ற முக்கிய ஆளுமைகள் கரிசல் இலக்கியத்தை குறித்து ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர்.




இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட கரிசல் இலக்கிய நூலுக்கு சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களும். ப.க. பொன்னுசாமி அவர்களும் வழங்கிய முன்னுரையில் சில பகுதிகள்:

கரிசல் வெளியின் ஒளி

நிலம் முதற்பொருள் என்பது தமிழ் மூதாதையர் கொள்கை.  எந்த நிலத்தில் பயிர்களும் உயிர்களும் வளர்கின்றனவோ அந்த நிலத்தின் சாரமும் பண்பும் அவற்றில் கரைந்திருப்பது இயற்கையின் தத்துவம்.

‘நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்‘

என்று சொன்ன பாரதி கரிசல் நிலம் கண்டெடுத்த அசுரவித்து.

தமிழகத்து நிலங்கள் பொதுவாக மலையும், காடும், வயலும், கடலுடுத்த கரையும் என்று பேசப்பட்டாலும் நுண்ணிய நோக்கில் அவை பல்கிப் பெருகியிருப்பதைக் காணலாம். கடலோரத்து வாழ்விலும் கடற்கரைக்குக் கடற்கரை மாறுதல்கள் உண்டு. அவ்வாறே தஞ்சை வயல் நாகரிகமும் கொங்கு வயல் நாகரிகமும் ஒன்றல்ல. மற்ற பெருநிலங்களிலும் மொழி, வாழ்வியல், பண்பாடு, வழிபாடு என ஆயிரம் வேறுபாடுகள் உண்டு.

பழைய நெல்லை, மதுரை மாவட்டத்தின் பகுதிகளில் சில, கரிசல் வாழ்வியலில் பெருமளவு ஒற்றுமையான கூறுகள் கொண்டவை. கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் முதலிய பகுதிகளில் கரிசல் நிலப் பண்பாடும், வாழ்வியலும் ஏறத்தாழ நிகரானவை. புன்செய்ப் பயிர்கள், மானாவாரி நிலங்கள், எளிய மக்கள் - பொய்த்துப் போகும் வேளாண்மையால் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் கருகும் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என வாழும் சமுதாயத்தை - வெயிலின் மக்களை அவர்களின் நம்பிக்கையோடும் நிராசைகளோடும், இளைத்துக் களைத்த ஏக்கங்களோடும், அவலங்களோடும், ஆனந்தங்களோடும், நாட்டுப்புறச் சந்தங்களோடும் நகரிய வாசனைகளோடும் உயிர்ப்பதிவு செய்திருக்கிறது கரிசல் இலக்கியம்.

தமிழ் இலக்கியத்தில் படைப்பின் வீரியம் ததும்பும் ஒளி அத்தியாயமாகக் கரிசல் இலக்கியப் படைப்புகள் நின்று நிலைக்கின்றன.

கரிசல் இலக்கியத்தின் எழுச்சி அலைக்கு இசைசெவல் கிராமத்தைச் சேர்ந்த இரட்டையர்களான கு. அழகிரிசாமியும், கி. ராஜநாராயணனும் தான் மூலவர்கள். ஒருவர் தொடங்கி வைத்ததை மற்றொருவர் அக வளமும் விசாலமும் கொண்டதாக வளர்த்தெடுத்தார். வறண்ட கரிசலிலும் வற்றாத கிணறான கி.ரா. வாய்க்கால் வழிய வழியப் பாயவிட்ட நீரால் கரிசல் இலக்கியம் பாத்தி பாத்தியாகப் பருத்தி வெடித்தது போல் இன்றும் வளமோங்கி நிற்கிறது.

கு. அழகிரிசாமி, கி.ரா., கோணங்கி, தமிழ்ச்செல்வன், பூமணி, சோ. தர்மன், பா. செயப்பிரகாசம், முத்தானந்தம், சுயம்புலிங்கம், மேலாண்மை பொன்னுசாமி, தனுஷ்கோடி ராமசாமி, வேல இராமமூர்த்தி, உதயசங்கர், இலட்சுமணப் பெருமாள், வீர வேலுசாமி ஆகியோர் கரிசல் படைப்பாளிகளில் முக்கியமானவர்கள். இவர்களில் பா. செயப்பிரகாசம் குறித்த கட்டுரை உரிய நேரத்தில் எங்களுக்குக் கிடைக்காமல் போனது பேரிழப்பு.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...