இளையராஜாவிலிருந்து இன்றைக்கு தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் வரை ஊடகங்களை விமர்சித்து குற்றம் சாட்டும் வகையில் நிலைமைகள் வந்துவிட்டன. இதற்கு காரணமென்ன?
துலாக்கோல் நிலையில் ஒரு காலத்தில் இயங்கிய செய்திதாள்களும், ஊடகங்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடந்துகொண்டதனால்தான் இப்படிப்பட்ட விமர்சனங்கள்.
பத்திரிகைத் துறையில் பிதாமகன்களாக இருந்த ராம்நாத் கோயங்கா, ஏ.என். சிவராமன், விகடன் வாசன், சி.ப. ஆதித்தனார், இராமசுப்ப ஐயர், கல்கி ராஜேந்திரன் போன்றோர்கள் பத்திரிகை தர்மத்தை அறமாகவும், தவமாகவும் காத்தனர்.
இன்றைக்கு ஊடகங்களில் விவாதங்களில் கூட தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு நடத்துவதும், தினமும் நடக்கும் விவாதத்தில் சரியான விவாத பொருளும் இல்லாமலும், அதில் பங்கேற்பவர்கள் தகுதியெல்லாம் கவனிக்காமல் அழைப்பதும் ஏதோ விவாதம் நடத்தவேண்டும், இன்றைய நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்ற நிலைதான். பரபரப்பும், விமர்சனமும், என்ற நிலையில் செய்திகளை தந்தால் போதும் என்று நினைப்பது தவறானது. செய்தி ஊடகங்கள் தனிப்பட்டவருடைய சொந்தமாக இருக்கலாம். விருப்பு, வெறுப்புக்கு அப்பால் நடுநிலையோடு ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற நிலைப்பாட்டோடு இருந்தால்தான் பத்திரிகைத் துறையின் ஆளுமை வெளிப்படும். சிறுக சிறுக இந்தத் தன்மை சிதைந்துகொண்டு இருப்பது ஆரோக்கியமான நிலை இல்லை. ஒரு கட்டத்தில் மக்களே இம்மாதிரி நிலையை எதிர்த்து ஊடகங்களை நோக்கி வினாக்கள் எழுப்பலாம்.
நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடை என்ற முண்டாசுக் கவி பாரதியின் வார்த்தைகளுக்கு ஒப்ப செய்தி ஊடகங்கள் இருக்க வேண்டும். இந்த நிலையிலிருந்து தவறினால் மக்கள் மன்றம் இதை மன்னிக்காது.
No comments:
Post a Comment