Friday, December 11, 2015

Lr to TN CM....

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,

வணக்கம். தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, நிரந்தர முதல்வர் போன்ற அடைமொழிகள் இல்லாததைக் கண்டு முகம் சுளித்திருப்பீர்கள். அப்படி அழைப்பதற்கான நேரமோ விருப்பமோ இல்லை. முதல்வர் என்ற முறையில் ‘மாண்புமிகு’ என்று அழைத்திருக்கலாம். ஆனால் மக்களின் மீது கரிசனம் கொள்ளும் மாண்பு தங்களுக்கு இல்லை என்று கருதுவதால் அப்படி அழைக்கவும் மனம் வரவில்லை.உங்கள் கட்சிக்காரர்கள் உங்களை ‘அம்மா’ என்று அழைப்பதோடு தமிழகத்தையும் அப்படி அழைக்க வைத்துவிட்டார்கள். நீங்களும் எங்கள் வரிப்பணத்தில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என்று ஏராளமாக, தாராளமாக ‘அம்மா’ திட்டங்களைக் கொண்டுவந்துவிட்டீர்கள். அம்மா என்கிற சொல் தமிழர்களுக்கு உயர்வானது. தாய்மை என்றால் கருணை என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறவர்கள் தமிழர்கள். தன் குஞ்சுகளைக் கொல்ல வரும் பருந்தைக்கூட சாத்தியப்படாத உயரத்தில் பறந்து சண்டையிட்டுக் காப்பாற்ற முயலும் தாய்க்கோழி. ஆனால் நீங்களோ வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களைக் கண்கொண்டும் பார்க்கத் தயாராயில்லை. 
    
நவம்பர் மாத இறுதியில் பெருமழை பெய்து கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டும், கூக்குரல்கள் எவையும் உங்கள் காதுகளை எட்டவில்லை. உங்கள் போயஸ் கார்டன் வீட்டைத் தாண்டியும் சென்னை இருக்கிறது. அங்கே உங்களுக்கு வாக்களித்த அப்பாவி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் உணரவேயில்லை. சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் என பாதிப்புகளைப் போதுமான அளவுக்குப் பட்டியலிட்டும் படம் பிடித்தும் காட்டியபிறகு, ஒருவழியாக உங்கள் வீட்டின் கதவுகள் திறந்தன. நீங்கள் தமிழகத்துக்கே முதல்வர் என்று நினைத்தால், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. மட்டும்தான் என்பதுபோல் ஆர்.கே.நகருக்குச் சென்றீர்கள். காரைவிட்டு இறங்காமலே ‘பார்வையிட்டீர்கள்’. மைக் பிடித்து ‘வாக்காளப் பெருமக்களே’ என்று பேசி இழிவான அரசியலின் அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தீர்கள். ‘ஒருமாதம் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கச்சிதமாக வசனம் பேசினீர்கள். அவ்வளவுதான்!
சரி, அப்போது நீங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் 50 செ.மீ மழை பெய்யும் என்று பி.பி.சி. அறிவித்ததே, வானிலை ஆய்வு மையமும் கனமழை பெய்யும் என்று அறிவித்ததே... அந்த மழைக்கும் பெருகப்போகும் வெள்ளத்துக்கும் என்ன செய்தீர்கள்? ‘செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?’ என்று எங்களைப் பார்த்து கேட்ட நீங்கள், பேரிடர் தருணத்தில் கூட ஒன்றுமே செய்யவில்லையே! டிசம்பர் 1 தொடங்கிய பெருமழை, பெருகிய வெள்ளம், திறந்துவிடப்பட்ட ஏரி சென்னையின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களை, உடைமைகளை, கனவுகளை, சேமிப்பை, கடன்தொகையை, கால்நடைகளை, நம்பிக்கையை, பல உயிர்களை, உறவுகளை அடித்துச் சென்றுவிட்டது. அப்போதாவது போயஸ் கார்டன் கதவு திறந்ததா? இல்லை!

மோடி, ஹெலிகாப்டரில் பார்வையிடப்போகிறார் என்ற செய்தி வந்ததும், அவருக்கு முன்னால் நீங்கள் ஹெலிகாப்டரில் ‘பார்வையிட்டீர்கள்’. அடுத்த மாநிலத்து முதல்வரோ, பிரதமரோ ஹெலிகாப்டரில் வந்து பார்வையிடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சென்னை முழுக்க வெள்ளப் பாதிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்போது சிலநாட்கள் கழித்து ஹெலிகாப்டரில் பார்வையிடுவதற்குப் பெயர்தான் முதல்வரா? பாதிக்கப்பட்ட மக்களைப் போய்ச் சந்திப்பதில் இருந்து எது உங்களைத் தடுத்தது? 

பாதிக்கப்பட்டவர்களைத்தான் பார்க்க வரவில்லை. பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசியிருக்கலாமே. சென்னையின் பாதிப்பு, அதற்கு அரசு எடுக்கப் போகும் முயற்சிகள் என விலாவாரியாக விளக்கியிருக்கலாமே! ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னையில் கமல்ஹாசனைக் குற்றம் சாட்ட மிக நீண்ட பிரஸ்மீட் நடத்தினீர்களே... லட்சோப லட்சம் மக்களைப் பாதிக்கும் இந்தப் பேரிடர் குறித்துப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அரசின் நிலை பற்றி விளக்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? உங்களைச் சுற்றியிருக்கும் ஆலோசகர்கள் உங்களுக்கு உணர்த்தவில்லையா?
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை; பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. இதோ இத்தனை பாதிப்புகளுக்கு இடையில் ஈரநெஞ்சம் கொண்ட சாமான்ய மனிதர்களும்,  சிறுசிறு அமைப்புகளும், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அரசு ஊழியர்களும் நிவாரணப் பணிகளைச் செய்து முடித்தபிறகு, முந்தா நாள் அறிக்கை விடுகிறீர்கள், ‘கனமழை பெய்ததால்தான் வெள்ளம் ஏற்பட்டது’ என்று. இதைக் கண்டுபிடிக்க இத்தனை நாட்களா? ஊரே கதறியபோது, சென்னையில் ஒன்றுமே நடக்காததுபோல் இருந்தது ஜெயலலிதாவும் ஜெயா டி.வி.யும் மட்டும்தான். 

சாதாரண மக்கள் கொண்டுசேர்த்த நிவாரணப் பொருட்களைப் பறித்து அதில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். பல இடங்களில் நிவாரண உதவிகள் செய்யப்போனவர்களை மிரட்டினார்கள். ‘தவறு செய்யும் கட்சிக்காரர்களைத் தண்டிப்பவர் ஜெயலலிதா’ என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். ‘அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குத்தான் அமைச்சர் பதவி போகுமே தவிர, ‘குற்றவாளி’ என்று குன்ஹா தீர்ப்பளித்தாலும் ஜெயலலிதாதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்’ என்று புரிந்தவர்களுக்கு இந்தப் பிம்பம் ஒரு மாயை என்று தெரியும். இந்த மாயையை நம்புபவர்கள் சார்பாகவே கேட்கிறேன், அடுத்தவர் பொருட்களில் ‘அம்மா ஸ்டிக்கர்’ ஒட்டிய அடாவடிக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ஜெயலலிதா? கொடுமையிலும் கொடுமையாக துக்க வீட்டிலும் ’அம்மா துதி’ பாடுகிறார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். சகிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் செல்லாதது, நிவாரணப் பொருட்களிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டுமா உங்கள் ஆட்சியின் குற்றங்கள்? இதோ, ‘அதிக மழை பெய்ததால் மட்டும் வெள்ளம் ஏற்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியைச் சீராகத் திறந்துவிடுவதில் ஏற்படும் தாமதமும் ஒரேடியாகத் திறந்துவிடப்பட்டதும், மக்களுக்கு முறையாக அறிவிக்காததும்கூட காரணங்கள்’ என்று செய்திகள் வெளியாகியிருக்கிறதே, இதற்கெல்லாம் காரணம் உங்கள் தலைமையிலான செயல்படாத அரசாங்கம்தானே ஜெயலலிதா அவர்களே..!?

‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கட்சிக்காரர்கள் தொடங்கி கலெக்டர்கள் வரை சொல்ல வைத்திருக்கிறீர்களே, அந்த ‘அம்மாவின் ஆணை’ எப்போது வரும் என்று தெரியாமல் காத்துக்கிடந்ததுதானே இந்த வெள்ளத்துக்குக் காரணம். இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடிவரை தலைமைச் செயலாளரால் உங்களைச் சந்திக்க முடியவில்லையே. பாதிக்கப்பட்ட மக்களையும் பத்திரிகையாளர்களையும், ஏன் பிரதமரையும்கூட சந்திக்காத நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நிவாரணப் பணிகளை முறையாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.

பதவியில் இல்லாதபோதும் ‘மக்களின் முதல்வர்’ என்று உங்களுக்கு நீங்களே பட்டம் சூட்டிக்கொண்டீர்கள். ஆனால், பதவியில் இருக்கும் இப்போதுகூட நீங்கள் மக்களின் முதல்வராக இல்லையே!

உங்கள் கட்சிக்காரர்கள் உங்களை நிரந்தரப் பொதுச்செயலாளர் என்றும்,  நிரந்தர முதல்வர் என்றும் அழைக்கிறார்கள். ஜனநாயகத்தின் வாசனை தப்பித் தவறிக்கூட கசிந்துவிடாத உங்கள் கட்சியில் நீங்கள் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருக்கலாம். நீங்கள் நிரந்தர முதல்வரா இல்லையா என்பதை ஆறுமாதங்களில் வரப்போகும் தேர்தல் சொல்லிவிடும். ஆனால் ஒன்றுமட்டும் உறுதி - இந்த இயற்கைப் பேரிடரும், அதில் உங்கள் தலைமையிலான அரசு காட்டிய அலட்சியமும், உங்கள் கட்சிக்காரர்கள் காட்டிய அடிமை மோகமும், தமிழகத்துக்கு நிரந்தரக் களங்கம். 
தனிமனிதத் துதியை விரும்பும், ஊக்குவிக்கும் ஓர் அரசின்கீழ் நாங்கள் வாழ்வது தமிழர்களான எங்களுக்கு நிரந்தர அவமானம்!

இப்படிக்கு, 
தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட பிரதேசமான போயஸ் கார்டனுக்கு அப்பால் வசிக்கும் ஒரு சென்னைவாசி!

No comments:

Post a Comment

You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time to act, the energy will come.

  You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time t...