#சில_கடந்த_கால_நினைவுகள்......
------------------------------------
நேற்றைக்கு பெங்களூரில் காவேரி – வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு 45 டி.எம்.சி உபரி நீரை தமிழகம் பயன்படுத்த முடியாது என்று நாட்டின் பிரதமராக இருந்த தேவகவுடா புரிதல் இல்லாமல் கூறியுள்ளார். அவர் காவேரி பிரச்சினையில் சிக்கல் வரும்போதெல்லாம் கர்நாடகத்தின் பிரதிநிதி போல தப்பும் தவறுமாக தமிழ்நாட்டை பழித்து தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் தேவகவுடா போலவே காவேரி சிக்கலில் நியாயம் இல்லாமல் இன்று வரை பேசி வருகின்றனர். காவேரி – வைகை – குண்டாறு இணைப்புக்கு எதிராக வாட்டாள் நாகராஜ் கர்நாடக தமிழக எல்லையில் உள்ள ஓசூர் வரை வந்து ஆர்பாட்டம் நடத்தி விட்டு சென்றுள்ளார்.
கர்நாடக அரசியல் கட்சித்தலைவர்கள் தான் இப்படி என்றால் நாட்டின் பிரதமராக இருந்த தேவகவுடாவும் இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்நாடகத்தை சேர்ந்த மறைந்த இ.எஸ்.வெங்கட்ராமைய்யாவும் தமிழகத்துக்கு காவேரியில் உரிமைகளை மறுத்து பேசியதுதான் வேதனையான விடயம். நாட்டின் உயர்ந்த பொறுப்பு வகித்த இவர்கள் எப்படி நேர்மைக்கு புறம்பாக குரல் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்கு ஆதரவாக கொடுக்கலாம் என்பது நமது வினா..?
காவேரி கடைமடை நதிநீர் பாத்திய உரிமைகள் தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும், கேரளத்துக்கும் உண்டு என்று காவேரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தும்; கர்நாடகா என்ன நினைக்கிறது என்றால், அங்கு மழை பொழிந்தால் அந்த வெள்ள நீரை அகற்றும் காவேரி மூலமாக தமிழக காவேரி டெல்டா பகுதிகள் அதன் வடிகாலாகத்தான் அங்குள்ள கர்நாடக ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர்.
தமிழகத்திற்கும் காவேரியில் சமஉரிமை உண்டு என்றும் ஹெல்சின்கி கோட்பாட்டின்படி சட்டப்பூர்வமான உரிமைகள் தமிழ்நாட்டிற்கு இருந்தும் கர்நாடகம் அர்த்தமில்லாமல் பிடிவாதமாக காவேரியில் வம்பு செய்கிறது.
தாமிரபரணி – கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம் தமிழகத்தில் ஒரு புறம் நடக்கின்றது. இதில் எந்த சிக்கலும் இல்லை, ஏனெனில் தாமிரபரணி தமிழ்நாட்டில் பொதிகை மலையில் உருவாகி கடலில் புன்னக்காயலில் சேர்வதால் புவியியல் ரீதியாக வேறு மாநிலம் இதில் சம்மந்தபடவில்லை.
தற்போது காவேரி - வைகை - குண்டாறு இணைப்புக்கு பணிகள் துவங்க இருக்கின்றன. இந்த சமயத்தில் தேவையில்லாமல் கர்நாடகத்திலிருந்து இந்த திட்டத்தை எதிர்த்து கூப்பாடு சத்தம் கேட்கிறது. இதை மத்திய அரசும் பாராமுகமாக இருக்கக்கூடாது.
இதே போலவே, எதிர்காலத்தில் தமிழகம் திட்டமிட்ட தென்பெண்ணை - பாலாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடகம் போலவே ஆந்திர மாநிலமும் பிரச்சினையை உருவாக்கலாம் என்பதை நாம் உணரவேண்டும். எனவே, தேவகவுடாக்கள், எடியூராப்பாக்கள், சித்தராமையாக்கள் போடும் கூப்பாடுகளுக்கு தமிழகம் தக்க பதிலடி கொடுத்து, அவர்கள் வாயை மூடி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தேவகவுடா, காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா சார்பில் வழக்கு தொடரவேண்டுமென்று சொல்வதும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல.
சரி, அடுத்து பிரச்சினைக்குள் வருகின்றேன், காவேரி கடைமடை பகுதியான தமிழகம் காவேரி - வைகை - குண்டாறு இணைப்பில் நீரை பயன்படுத்துவதில் சிக்கல்கள் உருவாகும் என்று கர்நாடகம் கூறியுள்ளது. இதே மாதிரி சிக்கல் தானே, கர்நாடகத்திற்கும் மகாராஷ்டிரத்திற்கும் இடையே உள்ள மகதாயி நதிநீர் பிரச்சினை. தமிழகத்தில் காவேரி கடைமடை பிரச்சினை என்றால் மகதாயி கர்நாடகம் கடைமடை பகுதியாகும். நாம் எப்படி காவேரியில் கர்நாடகத்தை மீதுள்ள தவறை எடுத்துச்சொல்கின்றோமோ, அதே போலதான் கர்நாடகமும் மகதாயி நதிநீர் பிரச்சினையில் மகாராஷ்டிரத்தை குறை சொல்கிறது. ஒரே பிரச்சினையில் மகதாயில் ஒரு நியாயம், காவேரியில் மட்டும் அநியாயாம் என்று நினைத்து கர்நாடகம் பிழைப்பட்டு பேசுகின்றது. இதிலிருந்தே கர்நாடகத்தின் சுயநல போக்கை தமிழகம் நிரூபிக்கலாம்.
தமிழக அரசு ராசிமணலில் அணை கட்டக் கூடாது என்று கர்நாடகம் தடுக்கின்றது. ஆனால் மேகதாட்டில் மட்டும் கர்நாடகா நடைமுறையை மீறி அணை கட்ட துடிக்கின்றது. இந்த நிலையில் தமிழகத்திற்கு காவேரி நீரை கூடுதலாக தரமாட்டோம் என்றும், காவேரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசிய தேவகவுடா எப்படி இந்தியா பிரதமராக வந்தார், அப்பொழுது என்ன நடந்தது என்பதையும் இப்போது சொல்லவேண்டும்.
கடந்த 1996 நாடாளுமன்ற, சட்டமன்ற பொது தேர்தல் கட்டத்தில் மறுமலர்ச்சி திமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு ஏறத்தாழ 33,000 ஓட்டுக்கள் வாங்கி வெற்றி வாய்ப்பை இழந்தேன். ஆனாலும், வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அந்த தொகுதி வாக்காளர்களுக்கு கிராம கிராமமாக சென்று நன்றி சொல்லிவிட்டு சில நாட்களுக்கு பின் காரில் சென்னைக்கு திரும்பினேன். திருச்சியை கடந்து காவேரி ஆற்றின் பாலத்தில் பயணம் செய்யும்போது, நண்பகல் 2 மணி என்று நினைக்கின்றேன், தேவகவுடா இந்தியாவின் புதிய பிரதமர் என்று காரிலிருந்த வானொலியில் செய்திகளைக் கேட்டதும் எனக்கு மனதில் வேதனையாக இருந்தது. ஏனெனில் காவேரி நடுவர் மன்ற தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி சித்தோஷ் முகர்ஜி காவேரி டெல்டா மக்களின் பிரச்சினையை அறிய டெல்டா பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டப்பொழுது அங்குள்ள மக்கள் அவரை பூர்னகும்பத்தோடு வரவேற்றனர். தஞ்சை மாவட்ட கோவில்களுக்கு அவரே வேண்டிவிரும்பி சென்றபோது பரிவட்டம் கட்டப்பட்டது. இதை எல்லாம் குற்றச்சாட்டுகளாகச் சொல்லி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காவேரி நடுவர் மன்ற நீதிபதி சித்தோஷ் முகர்ஜி பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று Quo warranto ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த ரிட் மனுவில் தமிழகம், புதுச்சேரி, கேரளம் மாநிலங்களை எதிரியாக (Responds) சேர்த்து இருந்தார். நிலுவையில் இருந்த அந்த வழக்கு திரும்ப பெறவில்லை. தமிழகம், புதுவை, கேரளத்தை எதிரிகளாக சேர்த்து வழக்கு தொடுத்த மனிதர் எப்படி இந்திய நாட்டின் பிரதமர் ஆகமுடியும்…?
பிரதமர் பதவி ஏற்று தேவகவுடா அந்த பதவிக்கான அரசியல் சாசனம் உறுதிமொழி எப்படி எடுக்கமுடியும்..? என்ற கேள்விகள் காவேரி பாலத்தினை கடக்கும் போது என் மனதில் ஓடின.
சென்னைக்கு திரும்பிய பின் இதன் தரவுகளை எல்லாம் சேகரித்தேன். வழக்கறிஞர் நண்பர் பாத்திமாநாதனும் நானும் தேவகவுடா எப்படி பிரதமராக முடியும்? தமிழகம், புதுவை, கேரளத்தை எதிரிகளாகச் சேர்த்து வழக்கு தொடுத்தவர் இந்திய நாட்டின் பிரதமர் பதிவிக்கு தகுதியற்றவர் என்று Quo warranto ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக 28.11.1996 அன்று நான் தாக்கல் செய்தேன். இது அரசியல் அமைப்புக்கு விரோதமானது மட்டுமல்ல அரசியல் சாசன சிக்கலை உருவாக்குமென்று பல தரவுகளோடு ரிட் மனுவில் குறிப்பிட்டு இருந்தேன்.
மேற் குறிப்பிட்ட வழக்கு சென்னை உயர்நீதிம்னற நீதிபதி ஜே.கனகராஜ் முன்னிலை 29.11.1996 அன்று விசாரணைக்கு வந்து வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது நான் பிரதிவாதிகளாகச் சேர்த்த மத்திய அரசு, பிரதமர் தேவகவுடா, தமிழக அரசு, புதுவை அரசு, கேரள அரசு, காவேரி நடுவர் மன்றம் என்று 6 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அன்று பகல் 12 மணிக்கு இந்த வழக்கு விசாரணை முடிந்ததும், இந்த செய்தி உளவு துறை மூலம் டெல்லி வடக்கு பிளாக் பிரதமர் அலுவலகத்திற்கு உடனே தெரிவிக்கப்பட்டது.
அன்றே, சென்னை மத்திய உளவுத்துறையில் ஐபி அதிகாரிகள் இருவர் இந்த வழக்கு மனுவை வாங்க என்னுடைய 22 லா-சேம்பருக்கு வந்தனர். இந்த வழக்கு மனுவின் நகலை பரபரப்பாக வாங்கிச் சென்று, மறுநாளே இந்த வழக்கை பிரதமராக இருந்த தேவகவுடா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் திரும்பப்பெற்றார்.
அந்த புண்ணியவான் அன்றைய பிரதமர் தேவகவுடா. இவர் வகிக்கும் பதவிக்கு ஏற்ற கண்ணியம் இல்லாதவர். முன்னாள் பிரதமராக இருந்தவர் இப்போதும் வாட்டாள் நாகராஜ் மாதிரி பேசிவருகிறார். இப்படிப்பட்ட மனிதர்களையும் அகில இந்திய தலைவர்களாக கொண்டாடுகிறோம் என்ன சொல்ல. அன்றைக்கு அரசியல் களத்தில் இருந்த யாரும் இது குறித்து கருத்து சொல்லவே இல்லை.
கங்கை - மகாநதி - கிருஷ்ணா - காவேரி - வைகை குமரி மாவட்ட நெய்யாறு, கங்கை குமரியை தொடவேண்டுமென்றும் தேசிய நதிகளை இணைக்க வேண்டுமென்றும், கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரை அரபிக்கடலுக்கு போகவேண்டிய நீருக்கு எவ்வளவு தேவையோ அதன்பின் உள்ள உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பவேண்டுமென்றும், கேரள அச்சன்கோவில் – பம்பை தமிழகத்தில் சாத்தூரில் உள்ள வைப்பாற்றுடன் இணைக்க வேண்டுமென்றும், தென்னக நதிகள் இணைப்பு குறித்தும், தாமிரபரணி- கருமேனியாறு - நம்பியாறு இணைப்பும், காவேரி - வைகை - குண்டாறு இணைப்பும் தென்பெண்ணை பாலாறு இணைப்பு தொகுப்பை குறித்தும் என்பதை உள்ளடங்கிய தேசிய நதிநீர் இணைப்பு 1983-ல் பொதுநல வழக்கு தொடுத்தேன்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது தேசிய நதிகளை இணைக்கவேண்டுமென்று பிரதமர்கள் பி.வி.சிங், நரசிம்மராவ், எச்.டி.தேவகவுடா, மன்மோகன் சிங் அமைச்சர்வையில் இருந்த நீர்வளத்துறை அமைச்சர் ஹரிஸ் ராவத், மோடி அமைச்சரவையில் இருந்த உமாபாரதி, ஆகியோரை என்னுடைய உச்சநீதிமன்ற நதிநீர் இணைப்பு பொது நலவழக்கு மனுவை வழங்கி வெவ்வேறு காலங்கட்டங்களில் சந்தித்து இவர்களிடம் பேசியது குறித்து ஏற்கனவே என் சமூக ஊடகங்களில் புகைப்படத்துடன் பதிவிட்டுயுள்ளேன்.
தேவகவுடாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பின் கடந்த 1997 ஜனவரி டெல்லி குளிர் காலத்தில் மறைந்த மத்திய அமைச்சராக இருக்க ராம்விலாஸ் பாஸ்வான் பரிந்துரையில் அன்றைய பிரதமரை தேவகவுடாவை சந்தித்து என்னுடைய நதிநீர் இணைப்பு உச்சநீதிமன்ற வழக்கு குறித்து பேச சந்தித்த போது; நிற்க வைத்து என்னிடம் கேட்டக் கேள்விகள் எல்லாம் இன்றும் மனதில் உள்ளன. அன்றைக்கு மறுமலர்ச்சி திமுகவில் இருந்தேன். பிரதமர் தேவகவுடாவை சந்தித்து உச்சநீதிமன்றத்தில் நதிநீர் இணைப்பு குறித்து என் மனுவின் நகலையும், என் கடித்தத்தையும் கொடுத்தேன் அதை பார்த்து படிக்கக் கூட மனமில்லாமல் என்னிடம் நடந்து கொண்ட பண்பினை இந்த இடத்தில் சொல்லவேண்டும். ‘You are Radha Krishnan, you filed case against me, you are from vai.gopalsamy party’ என்று கேட்டுவிட்டு ’where is water to give tamilnadu’ என்று மொட்டையாக பேசி அனுப்பிய மனிதர் தான் இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடா.
பிரதமர் என்ற உச்சப் பதவிக்கு சென்ற
பின்பும் பக்குவமில்லாத மனிதராகவே இன்று வரை இருந்து வருகிறார். இன்றைக்கு பண்பற்ற முறையில் காவேரி தண்ணீர் தரமுடியாது, காவேரி வைகை குண்டாறு இணைப்பு நீரைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறார். முன்னாள் பிரதமர் என்ற தகுதியை இழந்துவிட்டர் என்பதை நாம் உணரவேண்டும்.
கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தோடு நதிநீர் சிக்கல்களில் தமிழகத்திற்கு நியாயம் இருந்தும் அனைத்தும் மறுக்கப்படுகின்றது. அதற்கு பல பின்னணிகளும் சில காரணங்களும் உள்ளன. அதை உணராமல் நாம் வெட்டி கூப்பாடு போட்டு கொண்டிருந்தால் அண்டை மாநிலங்களில் நதிநீர் சிக்கல்களை தீர்த்துக்கொள்ளமுடியாது. ஐரோப்பாவில் யுகோஸ்லேவியா மலைப்பிரதேசத்திலிருந்து தமிழகம் போன்ற ரூமேனியாவிற்கு தாராளமாக நீரை வழங்குகின்றன. நைல், ரைன் நதி, துர்க்மெனிஸ்தான் கேரிங்கம் கால்வாய் அண்டை நாடுகளுக்கு எல்லாம் உபரி நீரை வழங்கும் போது இங்கு மட்டும் ஒரே நாட்டில், கர்நாடகம், கேரளம், ஆந்திரா மாநிலங்கள் தமிழகத்திற்கு எல்லா நியாயங்கள் இருந்தும் நீர் வழங்க மறுத்து நொண்டியாட்டம் அண்டை மாநிலங்கள் ஆடுகின்றன. காவேரி நடுவர்மன்றம் தீர்ப்பு கொடுத்த பின்பும் தேவகவுடா போன்ற பண்பற்ற, விசாலமான எண்ணங்கள் இல்லாத மனிதர்களால் இப்படி எல்லாம் அலங்கோலங்கள் நடக்கின்றன.
தமிழகத்தில் இருப்பவர்களுக்கு இப்பிரச்சினைகள் பற்றிய தொலைநோக்குப் பார்வையும் இல்லை, யதார்த்த புரிதல்களும் இல்லை. ஏன் குடியரசுத் தலைவராக இருந்த மறைந்த ஆர்.வெங்கட்ராமன், காவேரி பாயும் தஞ்சையில் பிறந்தவர்தான். ஆனால், தன்னுடைய நினைவு தொகுப்பில் 1995 கட்டத்தில் வெளியான ’My Presidential Years’ என்ற புத்தகத்தில் 506-வது பக்கத்தில் காவேரி பிரச்சினை குறித்து சரியாக அறியாமலும் தெளிவில்லாமலும் பிழையாகவே கூறி இருக்கிறார். இப்படித்தான் பிரச்சினைகளின் தன்மைகளை தெரியாத தலைவர்கள் நம்மிடம் இருக்கின்றன. இவர் தமிழக அமைச்சர், மத்திய அமைச்சர் இந்தியாவின் குடியரசு தலைவர், நுண்மான் நுழைபுலம் கொண்டவர் இவரே காவேரி பிரச்சினையைத் தவறாக எழுதியுள்ளார். வேற யாரை குறை சொல்ல..?
தேவகவுடாக்கள் எடியூரப்பாக்கள் சித்தராமையாக்கள் போகிற போக்கில் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். தமிழகத்தின் உரிமைகளைத் தெரிந்தவர்கள், புரிந்தவர்கள் அதை சரியாக வாதிடுபவர்களை நாடாளுமன்றம், சட்டமன்றம் செல்ல தமிழக மக்கள் வாய்ப்பு வழங்காத போது தேவகவுடா போன்றவர்களின் உளரல்களைக் எப்படி கட்டுப்படுத்தமுடியும். இந்த விடயங்கள் இன்றைக்கு உள்ள முன்னால் இன்னால் அமைச்சர்களுக்கோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ, சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ தெரியுமா என்பதே சந்தேகம். ஆனாலும் நடந்தவற்றை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கில் இதை சொல்கின்றேன்.
No comments:
Post a Comment