Friday, February 26, 2021

#தா_பாண்டியன்


—————————-
*இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் தா. பாண்டியன் காலமாகிவிட்டார்.*
சற்று பின்னோக்கிப் பார்க்கையில் அவருடனான அறிமுகம் 1972ல் இருந்து. அவருடைய இளமைக் காலத்தில் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பிதப்புரத்தில் தலைமறைவாக வாழ்ந்தார். பிதப்புரத்தில் தான் பாரதியின் தந்தையார் பருத்தி ஆலை தொடங்கி அது முழுவதும் முடியாமல் இன்றைக்கும் அந்த ஆலை இடிபாடுகளுடன் மகாகவி பாரதியை நினைவுப் படுத்திக் கொண்டு இருக்கிறது. கோவில்பட்டி பக்கம் அடிக்கடி வருவார்.
சென்னையில் படிக்கும் பொழுது பிராட்வேயில் உள்ள ஜனசக்தி அலுவலகத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் மறைந்த சோ. அழகர்சாமி அவர்களோடு சென்று அவருடனும் ஜெயகாந்தனுடன் பேசிக்கொண்டிருந்த காலங்கள் எல்லாம் உண்டு. அந்த காலகட்டத்தில் என்ஃபீல்ட் மோட்டர் பைக்கில் இதேபோன்று அரைக்கை சட்டை அணிந்து தோளில் சிகப்பு துண்டுடன் அவர் ஓட்ட, நான் அவர் பின் அமர்ந்து சென்ற நினைவுகள் வருகிறது.
இந்திய சோவியத் நட்புறவு ISCUS கூட்டங்களுக்கு அதே பைக்கில் அவருடன் சென்றது நினைவுக்கு வருகிறது. வழக்கறிஞர் என்.டி. வானமாமலை, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் என்.டி. சுந்தரவடிவேலு, மதுரை டாக்டர் திருஞானம், ராஜபாளையம் அலெக்ஸ் எனப் பெரும் மக்கள் அன்றைக்கு அந்த அமைப்பில் இருந்தனர்.
ஜனசக்தி ஆசிரியராக இருந்தபோது ஜனசக்தி இதழ் டேப்லாய்ட் (tabloid) வடிவில் வரும். பிலிட்ஸ் கரண்ட் பத்திரிகை போன்று வரும். அதில் அதில் கடைசி பக்கம் தா.பா பக்கம் என்று வரும். அந்தப் பக்கத்தில் அவர் பல புதிய விஷயங்களையும், உலக அரசியல், இந்திய அரசியல் தமிழக அரசியல் குறித்து அவர் எழுதி வந்ததையெல்லாம் அன்றைய காலகட்டத்தில் ஆர்வத்துடன் படித்ததுண்டு. காங்கிரஸ் மாணவர் அணியில் இருந்த போது சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சி அன்றைக்கு காங்கிரஸ் கூட்டணியை இரண்டு போது மக்களுக்காக அவர் நடை பயணம் மேற்கொண்டபோது அவருடன் இரண்டு மூன்று முறை சென்றதுண்டு. சில நேரங்களில் நல்லகண்ணு, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சோ. அழகிரிசாமி, எ.நல்லக்கண்ணு ஆகியோர் தலைமையில் அந்த நிகழ்ச்சி நடந்த போது தா. பாண்டியன் அதில் கலந்துக் கொள்வார். இப்படி எல்லாம் பழைய நினைவுகள். நல்ல சிந்தனையாளர். ஆங்கிலப் பேராசிரியர். நுண்மான் நுழைப்புலம் கொண்டவர். உசிலம்பட்டியில் பிறந்தாலும் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். பழ கருப்பையாவுக்கு பேராசிரியர். என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருக்கிறார். கி.ரா. உடன் அவரை சந்தித்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. கதைசொல்லி வாசகர். இதெல்லாம் கடந்த கால நினைவுகள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார். அவருடைய மறைவு கவலையளிக்கிறது.



ஆழ்ந்த இரங்கல்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26.02.2021.

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...