Saturday, February 13, 2021

#முல்லைப்_பெரியாறு_அணையின்_நீர்_கொள்ளளவை_குறைக்கக்_கோரும்_இடைக்கால_மனுவை_உச்சநீதிமன்றம் #முடித்துவைத்தது...


———————————————————
முல்லைப் பெரியாறு அணையின் நீர் கொள்ளளவைக் குறைக்க உத்தரவிடக் கோரி தாக்கலான இடைக்கால மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை முடித்துவைத்தது. எனினும், அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவுக்கு எதிராக தாக்கலான மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்கும் வகையில் வழக்கை மார்ச் 2-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரி கேரள மாரிலம், ஆலுவாவைச் சேர்ந்த ரஸ்ஸல் ஜாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2017-ல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த விவகாரத்தில் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை அறிவிக்கக் கோரிய இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2018-ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டம் தொடர்பாக சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், ரஸ்ஸல் ஜாய் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இடைக்கால மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதே போல் அணையின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜோ ஜோசப் உள்ளிட்ட மூவர் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
ரஸ்ஸல் ஜாய் தாக்கல் செய்த மனுவுடன் ஜோ ஜோசப் உள்ளிட்டோர் தாக்கல் செய்த ரிட் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த விவகாரத்தில் தமிழகம், கேரள அரசுகள் பதில் மனுக்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
கேரள அரசு தாக்கல் செய்த பதிலில் ‘முல்லைப் பெரியாறு அணையில் 1939-ல் தயாரிக்கப்பட்ட காலாவதியான கதவு செயல்பாடு அட்டவணையை தமிழகம் பயன்படுத்தி வருகிறது. புதிய கதவு செயல்பாடு அட்டவணை இல்லாததால் வெள்ளக்காலத்தின்போது மிகவும் சிரமம் ஏற்படுகிறது. புதிய கதவு செயல்பாடு அட்டவணையை ஏற்படுத்த வேண்டும் என்று கேரளம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதைச் செயல்படுத்த மேற்பார்வைக் குழு உத்தரவிட்டும் தமிழகம் இன்னும் செயல்படுத்தவில்லை’ என தெரிவித்திருந்தது.
அதற்கு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதிவில், ‘அணை பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளது. மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே, வழக்குரைஞர் ஜி.உமாபதி ஆகியோர் ஆஜராகி ‘இந்த வழக்கைப் பொருத்தமட்டில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவாகத் தீர்ப்பு அளித்துவிட்டது. அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருப்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது தாக்கல் செய்துள்ள நீர்மட்டம் தொடர்புடைய விவகாரம் பயனற்றது’ என்று வாதிட்டனர்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஜோ ஜோசப் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க ஒருவாரம் அவகாசம் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ரஸ்ஸல் ஜாய் தாக்கல் செய்த மனுவை முடித்து வைப்பதாகக் கூறி, மத்திய அரசு பதில் தாக்கல் செய்யும் வகையில் வழக்கு விசாரணையை மார்ச் 2-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
13.02.2021

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...