———————————————————-
கல்லணை கால்வாய் வெட்டப்பட்டு 86 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வானம் பார்த்த பூமியாக இருந்த தஞ்சையின் தென் பகுதியில் இருக்கக்கூடிய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி தாலுகாக்கள். இங்குள்ள விவசாய நிலப்பரப்பு சுமார் 3 லட்சம் ஏக்கர். மேடான பகுதி இது. ஆறு என்பது பள்ளத்தை நோக்கித் தான் போகும். இது முழுக்க முழுக்க மேட்டுப்பகுதியாக இருக்கக்கூடிய பகுதிகளில் பாசனத்திற்காக வெட்டப்பட்ட ஒரு கால்வாய்.
கல்லணை கால்வாயில் 149 கிலோ மீட்டரும் மேடான பகுதி ஆகும். இவற்றின் அமைப்பு பொறியியல் துறையின் உச்சம் என்றே சொல்லலாம். பல இடங்களில் இந்தப் பாசன ஆறு மேலே செல்லும், கீழே காட்டாறு செல்லும். ஓரிடத்தில் காட்டாறு மேலே செல்லும் பாசன ஆறு பூமிக்கு அடியில் கீழே செல்லும். இந்த அமைப்பு சூரக்கோட்டை வடக்கே உள்ளது. பாசன ஆறு பூமிக்கு கீழே தண்ணீர் சென்று 200 மீட்டர் தூரத்தில் வெளியே வரும். அந்த 200 மீட்டருக்கு இடையே காட்டாறு. வெட்டிக்காட்டுக்கு தெற்கே கல்லணைக் கால்வாய் மேலே செல்லும். கீழே மகாராஜா சமுத்திரம் என்ற காட்டாறு செல்லும் இது 86 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் துறை செய்து காட்டியுள்ள மாபெரும் சாதனையாகும். இங்கிலாந்தில் இருக்கக்கூடிய தேம்ஸ் நதியை மாதிரியாக வைத்து கட்டப்பட்ட ஆறு இது.
கல்லணையிலிருந்து நாகுடி வரை போகக்கூடிய 149 கிலோமீட்டர் வழியில் 27 சிறிய கிளை ஆறுகள் உள்ளன. கல்லணை கால்வாய் என்பது பிரதான கால்வாய் (மெயின் சேனல்) ஆகும். அதிலிருந்து கல்யாண ஓடை வாய்க்கால் ராஜாமடம் வாய்க்கால், தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்கால் நெய்வாசல், தென்பாதி, வடுவூர், இப்படி செல்லக்கூடிய 27 கிளை வாய்க்கால்கள் உள்ளன.
இதல்லாமல் 337 ஏ சேனல், பி சேனல் வாய்க்கால்கள் உள்ளன. ஒட்டுமொத்த 337 வாய்க்கால்களின் நீளம் 1232 ஆகும். இது கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இதன் முழு கொள்ளளவு 4,400 கன அடி ஆகும். இந்த 4,400 கன அடி தண்ணீரை எடுத்தால், ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாகாமல் முழுக்க முழுக்க பாசனத்திற்கு பயன்பட்டது. தற்பொழுது ஆற்றின் பராமரிப்பு ஒழுங்காக இல்லாத காரணத்தினால் 3 ஆயிரம் கன அடி கூட எடுக்க முடியாமல் கடந்த 10 ஆண்டுகளாக நிலைமை மோசமாக உள்ளது.
கல்லணை கால்வாயை சீரமைக்க முயற்சி எடுக்கப்பட்டு அன்றைய திட்ட மதிப்பீடு சுமார் ரூ.450 கோடியில் திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.140 கோடிகளுக்கு பணிகள் நடைபெற்றது. 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற பணிகள் கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. தற்போது 11 ஆண்டுகள் கடந்த நிலையில் எந்த பணிகளும் நிறைவேற்றப்படவில்லை.
ஒரு திட்ட மதிப்பீடு போடப்பட்டதன் அடிப்படையில், ரூ.2,639.15 கோடி மதிப்பில், ஆசிய உள்கட்டமைப்பு வளர்ச்சி வங்கியின் கடன் கேட்டு, கடன் பெற அனுமதி பெற்று முதல்கட்டமாக பணிகளை துவங்குவதற்கு 1036.07 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்லணை கால்வாயின் சிறப்பு என்னவென்றால் நேரடியாக பாசனம் செய்யாமல் அங்குள்ள ஏரி, குளங்களை நிரப்பி அதன் மூலம் பாசனம் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஏரி, குளங்களையும் இதனுடன் இணைத்து பராமரிப்பு செய்து அந்த திட்டத்தில் அனைத்தையும் முழுமை பெற வைக்க வேண்டும். கல்லணை கால்வாய் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பாசன ஏரி, குளங்களையும் இந்த திட்டத்துக்குள் உட்படுத்தி ஏக காலத்தில் செய்து முடித்தால்தான் இந்த திட்டம் உண்மையிலேயே விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
முதல் கட்டமாக 1,036.07 கோடி ஒதுக்கப்பட்டு 5 கட்டமாக பணிகள் நடக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5 கட்டங்களாக நடைபெற உள்ள இப்பணிகளையும் திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் தரமாகவும் பணிகளைச் செய்ய வேண்டும். பணிகள் நடைபெறக்கூடிய இடங்களில் அப்பகுதி விவசாயிகளை கொண்ட கண்காணிப்பு குழுக்களை அமைத்து அந்தக் குழு குறைகள் ஏதும் சுட்டிக்காட்டி இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்து கண்காணிப்பு குழு மேற்பார்வையில் நடைபெற வேண்டும். அதிகாரிகள் மட்டுமில்லாமல் விவசாயிகளைக் கொண்டு அப்பணிகள் நடைபெற்றால் மட்டுமே பணிகள் தரமானதாகவும் முறையாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment