——————
இன்று பாஷ்யம் அவர்களின் உறவினர் ஒருவர் இன்று என்னை வந்து சந்தித்தார். அவர் வேதனையோடு சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் சுயராஜ்ய கொடியை ஏற்றியவர் பாஷ்யம் அவரை மறந்தது மட்டுமல்ல அவர் நினைவை களங்கப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று அவர் கேட்டப்பொழுது சற்று வேதனை ஏற்பட்டது.
•••
பாஷ்யம் என்ற ஆர்யா (1907 - 1999) இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 1932-ல் இன்று சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி, பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, இந்திய தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர் பாஷ்யம் எனும் ஆர்யா. சிறந்த ஓவியர்; சிற்பி; தற்காலத்தில் புழக்கத்தில் இருக்கும் மகாகவி பாரதியாரின் படத்தினை வரைந்தவர்.
அன்றைய தேசவிடுதலை புரட்சி அமைப்புகள் இவரை கைநீட்டி வரவேற்றன. அய்யலூர் ரயில்வே நிலையத்துக்கு 7 மைல் தூரமுள்ள பஞ்சந்தாங்கிப் பள்ளத்தாக்குப் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். இதற்காக மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பர் முத்துக்குமாரசாமிப் பிள்ளை மூலம் துப்பாக்கிகள் வாங்கிக்கொண்டார். இங்கு புதுவை விடுதலை வீரர் வ. சுப்பையாவைச் சந்தித்தார். "யுனிவர்சிட்டி டிரைனிங் கோர்" படையில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற பாஷ்யம் தனது நண்பர்களுக்கும் இப்பயிற்சியை அளித்தார்.
ஜவஹர்லால் நேரு ஜனவரி 26-ஆம் தேதியை நாட்டு மக்கள் சுதந்திர தினமாகக் கொண்டாடுமாறு அறைகூவல் விடுத்தார். அதனை ஏற்று பாஷ்யம் ஒரு சாகசத்துக்கு தயாரானார். பெரிய தேசிய மூவண்ணக் கொடியொன்றை இவரே தைத்துக் கொண்டார். நடுவில் மையினால் ராட்டை வரைந்து கொண்டார். அதன் கீழ் "இன்று முதல் இந்தியா சுதந்திரம் அடைகிறது" என்று எழுதினார். ஜனவரி 25, மாலை 7 மணிக்கு கொடியைத் தன் உடைக்குள் மறைத்துக் கொண்டு, தன்னுடன் தியாகி சுப்பிரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபாலனைத் தன்னைப் பின் தொடரும்படி சொல்லிவிட்டுச் சென்றார். ஒரு திரைப்படக் கொட்டகை சென்று சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு காவலர் உடையில் ரகசியமாக தென்புற வாயில் வழியாகக் கோட்டைக்குள் நுழைந்தார். அங்கு 140 அடி உயரமும் 3 அடி குறுக்களவும் உள்ள கம்பத்தில் ஏறினார். அப்போது சென்னைக் கலங்கரை விளக்கில் உள்ள சுழலும் விளக்கின் வெளிச்சம் இக்கம்பத்தின் மீது பட்டது. அதுபடும் நேரத்தைக் கணக்கிட்டுத் திட்டமிட்டு, ஒளி படும்போதெல்லாம், கம்பத்தின் மறுபுறம் ஒளிந்து ஏறி யூனியன் ஜாக் என்ற பிரித்தானியரின் கொடியை இறக்கிவிட்டு அதில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவிட்டு இறங்கி ஓடி தப்பிவிட்டார். காலையில் இக்கொடியினைக் கண்ட கோட்டை ராணுவ வீரர்கள் பதட்டமடைந்தனர். கவர்னருக்குச் செய்தி போயிற்று. இதனைச் செய்தவரைக் கண்டுபிடிக்க போலீஸ் தலைகீழாக நின்றும் பயனில்லை. இன்று வரை அந்த செயலைச் செய்தவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் அரசாங்க ஆவணங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment