Wednesday, November 2, 2022

*நவ கேரளம் உருவான நவம்பர் 1 ம் தேதி நேற்று டிஜிட்டல் ரீ சர்வே தொடங்குகிறது கேரள. ஆனால் பி.எஸ். மணிகள், மார்ஷல் நேசமணிகள், செங்கோட்டை கரையாளர்கள் இன்று நம்மிடம் இல்லை. என்ன செய்ய?*

*நவ கேரளம் உருவான நவம்பர் 1 ம் தேதி நேற்று டிஜிட்டல் ரீ சர்வே தொடங்குகிறது கேரள. ஆனால் பி.எஸ். மணிகள், மார்ஷல் நேசமணிகள், செங்கோட்டை கரையாளர்கள் இன்று நம்மிடம் இல்லை. என்ன செய்ய?*


நவம்பர் 1,1956 மொழிவழி பிரிவினை சட்ட மோசடிக்கு பிறகு, தமிழகத்திலிருந்து தட்டிப்பறிக்கப்பட்ட 1400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உதவியுடன்,1957 ல் தான் புதிய கேரளம் உருவானது.

ஆனால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், அன்றே தமிழக எல்லையை தெளிவாக வரையறை செய்து வடவேங்கடந் தென்குமரியாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து….என்று கூறுகிறது.அதாவது வடவேங்கடம் என்றழைக்கப்படும் இன்றைய திருப்பதிக்கும், தென்குமரி என்றழைக்கப்படும் இன்றைய கன்னியாகுமரிக்கு தெற்கே கடல் கொண்டழிந்து போன லெமூரியாவுக்கும் இடைப்பட்ட பகுதியையே  பழைய தமிழகம் என எல்லையாக உருவகம் கொடுக்கிறது.

ஆனால் இத்தனையாண்டு பழமை கொண்ட ஒரு நாடு, நேற்று உருவான அல்லது உருவாக்கப்பட்ட கேரளாவிடம் 1956 மொழிவழி பிரிவினையில் எப்படி 1400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை இழந்தது என்பதை நினைக்கும் போது அத்தனை ஆச்சரியமாக இருக்கிறது. 

(அதைவிட கொடுமை கம்பம் நகரில், இன்றைய நவீன கேரளத்தை உருவாக்க களத்தில் நின்று தமிழகத்திற்கு எதிராக  முண்டா தட்டிய,ஏ.கே.கோபாலன் பெயரில்திடல்)

அதற்கு பிறகாவது தமிழகம் விழித்திருக்க வேண்டாமா.மொழிவழிப்பிரிவினையால் தமிழகம் இழந்த பகுதிகளான தேவிகுளம் பீர்மேடு உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்கள்தான், இன்றைக்கு கேரள மாநில வரி வருவாயில் 12 விழுக்காடு வரை, வரியாக வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது.

வனவளம் மிகுந்த நெய்யாற்றின்கரை,நெடுமங்காடு, செங்கோட்டை தாலுகாவின் மேற்கு பகுதி தென்மலை, அட்டிங்கல் என எல்லாம் இன்றைக்கு கேரள மாநிலத்திற்கான வளமான பகுதிகள்

செங்கோட்டை தாலுகாவின் மேற்கு பகுதியில் உள்ள தென்மலை வனப்பகுதி இன்றைக்கு தமிழகத்தோடு இருந்திருக்குமென்றால்,கல்லடா என்றொரு ஆறு கேரளாவிற்கு உண்டோ.அந்த ஆற்றை தமிழகத்தின் பக்கம் திருப்பியிருந்தால், அச்சன்கோவில்-பம்பா-அச்சன் கோவில்-வைப்பாறு ( எனது தேசிய நதிகள்  இணைப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி)தென்காசி மாவட்டத்தின் சுரண்டை, சங்கரன்கோவில், திருவேங்கடம்,வெம்பைகோட்டை,சிவகாசி வட்ட பகுதிகள்,  சாத்தூர் வைப்பாறு பகுதிகள், விளாத்திகுளம், எட்டையபுரம், கோவில்பட்டி பகுதிகள் என முப்போக விளைச்சலை கண்டிருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ.

அதுபோல சிவகிரி தாலுகாவிலுள்ள வாசுதேவநல்லூரின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் செண்பகவல்லி கால்வாய் தண்ணீரை தமிழகம் இழந்திருக்குமோ...
கரிவலம் வந்த நல்லூர் முப்போகம் விளைந்திருக்கும்.

அதுபோல   நெய்யாறு,செண்பகவள்ளி, அழகர் அணை,முல்லைப்பெரியாறு,கல்லாறு,முதிரப்புழா,பம்பையின் ஒரு பகுதி தண்ணீர்,ஆனையிரங்கல் அணை தண்ணீர்,மாட்டுப்பட்டி,குணடல அணைத்தண்ணீரை தேனி மாவட்டம் இழந்திருக்குமோ... கண்ணகி கோவில் சிக்கல் என பல பிரச்சனைகள்…..



இத்தனை நீர்வளத்திலிருந்தும் ஒரு 100 டி எம் சி மேலான தண்ணீரை தமிழகம் பெற்றிருக்காதா...

அதுபோல அமராவதி அணைக்கு மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் இருந்து வரும் தண்ணீரோடு, மூணாறு அருகே ஆண்டுதோறும் தண்ணீர் வழிந்தோடும் பெரிய பாறை தண்ணீரும் இணைந்திருந்தால்,பவானி கூடுதுறை தாங்குமோ... 

தமிழகத்தின் இரண்டாவது பெரிய பாசனமான பவானிப்பாசனதாதோடு,எங்கோ கேரளாவிற்குள் வேண்டா வெறுப்பாய் வழிந்தோடும் எங்கள் மோயாற்றை ,தெங்குமரஹடா வழியாக திரும்பியிருந்தால்,காவிரிக்கு இணையான இன்னொரு பாசனம் தமிழகத்திற்கு கிடைத்திருக்குமே...என சிக்கல் பலவற்றை கேரள செய்தது. நீண்ட பட்டியல் உண்டு.

ஏன் நிலத்தின் மீது நமக்கு அக்கறை ஏற்படாமல் போனது.வீட்டை அடுத்து இருக்கும் கையகல முட்டுச்சந்துக்காக பக்கத்து வீட்டுக்காரனிடம் பல பத்தாண்டுகளாக சண்டையிடும் நம்மால்,ஏன் மலையளவு நிலத்தை கேரள கபளீகரம் செய்யும்போது நம்மால் சண்டையிட முடியவில்லை.

சர்வே ஆஃப் இந்தியா வின் மேற்பார்வை யில் தான் டிஜிட்டல் ரீ சர்வே நடத்தப்படுகிறது என்கிற கேரள வருவாய்த்துறை அமைச்சர் திரு ராஜனின் வாதம் எந்தளவிற்கு நம்பகத்தன்மையுடது.

தமிழகத்திற்கும் கேரளத்திற்குமிடையிலான 822 கிலோ மீட்டர் தூரம் முறையாக இன்னமும் அளவீடு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில், எந்த அடிப்படையில் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் மறு அளவீடு செய்ய முடியும்.

கம்பம் மெட்டு உச்சியில் உள்ள கேரள காவல் துறையின் எல்லைச் சோதனை சாவடி, தமிழக எல்லைக்குள் இருக்கிறது என்று ஆணித்தரமாக நிரூபித்து ஆண்டு ஐந்தாகி விட்டது.என்ன செய்ய முடிந்தது நம்மால்.ஒரு காவல் துறை சோதனை சாவடியையே தமிழக எல்லைக்குள் வைத்திருக்கும் அவர்களுத்தான் வெட்கமின்றி போய்விட்டது என்றால்,அதை மீளத்திரும்பப்பெற நமக்கு ஏன் துணிவில்லாமல் போனது.

எல்லையை அளவீடு செய்யாமல், கேரள மாநில அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் இந்த டிஜிட்டல் ரீ சர்வே, இன்னொரு மொழிவழி பிரிவினை காலத்திற்கு சமமாகவே இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.ஏனென்றால் சர்வே ஆஃப் இந்தியா வின் மேற்பார்வையில் இது நடக்கிறதென்றால் அதற்கு வேறு என்ன அர்த்தம் இருந்துவிட முடியும்.

கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கிராமங்களில், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டத்தின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.கூடுதலாக நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் தனியாக வரைபடங்களின் மூலம் வகைப்படுத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.ஆனால் அண்டை மாநிலத்தோடு எல்லையை அளவீடு செய்வதில் மட்டும் மலையாளிகளுக்கு உடன்பாடில்லை.

நான்கு ஆண்டுகளுக்குள் மொத்த கேரளாவையும்,அளவிட திட்டமிருக்கும் கேரள மாநில வருவாய்த் துறையின் நோக்கம் எதேச்சதிகாரமினது.

ஏதோ ஒரு சதிச்செயலை தமிழக நிலங்களுக்கு எதிராக அரங்கேற்றவே கேரள மாநில அரசு இந்த வேலையை தொடங்குகிறது

அதைவிட அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த நாள் மிக முக்கியமான நாள்.அதாவது 1956 ல் எப்படி தமிழகத்தை வஞ்சித்து இதே நவம்பர் 1 ல்  நவ கேரளத்தை உருவாக்கினார்களே,அதே நவம்பர் 1 ம்  தேதியில் தற்போது இந்த நாசகார டிஜிட்டல் ரீ சர்வேயையும் தொடங்குகிறார்கள்.

கிராமப்பதிவுகள் முடிந்ததும்,நில அளவை ஆவணங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிலப்பரப்பின் விரிவான ஆவணத்தின் உதவியுடன் தொகுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

1956 ல் தமிழக நிலங்களை அபகரிக்க எப்படி ஒரு கே.எம்.பணிக்கர் காரணமாக இருந்தாரோ, அப்படி ஒரு பணிக்கர் இப்போதும் கேரளாவிற்கு கிடைத்திருக்கிறார்,

தமிழக கேரள எல்லையோரங்களில்,பெருவாரியாக விவசாய நிலங்கள் வைத்திருக்கும் அப்பாவி தமிழ் விவசாயிகளின் கூக்குரல்,பெரு ஓலமாக இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால் மாறலாம்.

மலையாள மார்க்சிய இடதுசாரி தோழர்கள், தோழர் பினராயி விஜயன் முன்னெடுத்திருக்கும் இந்த ரீ சர்வே மோசடிக்கு துணை நிற்கப் போவதை நம்மால் யூகிக்க முடிகிறது.ஏனென்றால் முடிவடைந்த சர்வே சபாக்களை கிராமந்தோறும் நடத்தியது வருவாய்த்துறை என்றால், அதற்கு மக்களை அழைத்து வந்தது  கம்யூனிஸ்ட் தோழர்கள் தான். கம்யூனிஸ்ட் ஆனலும் காங்கிரஸ் ஆனாலும் இதில் ஒற்றுமையாக ஓரே மாதிரி நடந்து கொள்வார்கள.

ஆளில்லா விமானங்கள், தொடர்ந்து செயல்படும் குறிப்பு நிலையங்கள், சுற்றுப்பயண நேரம் மற்றும் மின்னணு நிலையங்கள் ஆகியவற்றை செயற்கை கோளுடன் இணைக்கப்பட்டுள்ள 28 நாண் நிலையங்களின் சமிக்ஞைகள்  மூலம் இது  குறித்த வரைபடங்கள், படங்கள்   தாயரிக்போககிறார்கள்.

அத்தனை தொழில்நுட்ப பயன்பாடுகளும், தமிழகத்திற்கு எதிராக திருப்பிவிட வேலை நடக்கிறது.

ஆனால் இதுவரை தமிழக அரசிடம் இந்த டிஜிட்டல் ரீ சர்வே குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை இந்த மோசடியான கேரளா.

தன்னுடைய கட்சி மாநாட்டிற்கு கண்ணூருக்கும், திருவனந்தபுரத்திற்கும்,அமைச்சர்களை அனுப்பி  தமிழக முதல்வர் அவர்களை அழைக்கத் தெரிந்த கேரளாவிற்கு, இப்போது இந்த டிஜிட்டல் ரீ சர்வே குறித்து தகவல் தெரிவிக்க எது தடுக்கிறது.

இது துரோகத்தின் உச்சம்.இது ஒன்றும் புதிதில்லைதான்.நேற்று  அச்சுதனந்தம், முல்லைப் பெரியாறு அணையில், ஐந்து மாவட்ட மக்களுக்கு எதிராக செய்த துரோகத்தை,இன்று டிஜிட்டல் ரீ சர்வே என்கிற பெயரில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்ட மக்களுக்கு எதிராக செய்யத்துடிக்கிறார் தோழர் பினராயி விஜயன்.

ஆனால் பி.எஸ். மணிகள், மார்ஷல் நேசமணிகள், செங்கோட்டை கரையாளர்கள் இன்று நம்மிடம் இல்லை. என்ன செய்ய?

திட்டமிட்டபடி கேரளாவில் நவம்பர் 1 ம் தேதி, டிஜிட்டல் ரீ சர்வே தொடங்கப்பட்டது

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...