Saturday, November 26, 2022

இன்றைய (26-11-2022) தினமணியில் தமிழக நீர் நிலைகள் குறித்த என கட்டுரை *குளம் தொட்டு கோடு பதித்து வழி சீத்து*...!

இன்றைய (26-11-2022) தினமணியில் தமிழக நீர் நிலைகள் குறித்த என கட்டுரை

*குளம் தொட்டு கோடு பதித்து வழி சீத்து*...!
 —————————————
 ஒவ்வொரு வருடமும் அக்டோபர் – நவம்பர் மாதம் தமிழகத்தில் ஏதோ ஒரு வட்டாரத்தில் மழையினால் மக்கள் பாதிக்கப்படுவதும், மக்கள் வாழும் குடிசைகள், வீடுகள் பாதிக்கப்படுவதும் குறித்த செய்திகள் தவறாமல் வருகின்றன. இந்த ஆண்டு மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் பெரும் பலத்த மழையால் கடுமையான பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன.  
 தமிழகத்தில் மழை அதிகம் பெய்யும்போது, அந்த நீர் வளத்தைப் பாதுகாத்து பயன்படுத்த வேண்டும் என்கின்றஅக்கறை நம்மிடம் இல்லை. அதற்கான கடப்பாடுகளை தொடர்ந்து எடுக்க நாம் தவறிக் கொண்டு இருக்கிறோம்.
‘ நீரின்றி அமையாது உலகு’ என்று வள்ளுவப் பேராசான் சொல்கின்றார். நமக்கோ மழைநீரை சேகரிக்க மனதில்லை. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று ஒருபக்கம் குரல் கேட்கின்றது. இன்னொரு பக்கம் மழைக்காலங்களில் காவிரியில் பெருகி வரும் தண்ணீரை தடுப்பணைகள் கட்டி சேகரிக்காமல், அதை வங்கக் கடலில் வீணாகக் கலக்கவிடுகிறோம். நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. இயற்கையின் அருட்கொடையாக நமக்குக் கிடைக்கும் நீர்வளத்தின் அருமை தெரியாமல், அதை வீணடிக்கின்றோம் என்பதுதான் உண்மை. 
குளம் தொட்டு கோடு பதித்து வழி சீத்து
உளம் தொட்டு உழுவயல் ஆக்கி, 
வளம் தொட்டுப் பாடுபடும் கிணற்றோடு என்று
இவை பாற்படுத்தான் ஏகும் சுவர்க்கம் இனிது
 
என்று பண்டைய தமிழ் இலக்கியமான சிறுபஞ்சமூலத்தில் புலவர் காரியாசான் நீர்மேலாண்மை பற்றிசொல்லியிருக்கிறார். 
 தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்க மன்னர்கள், தஞ்சையை ஆண்ட மராத்தியர்கள் ஆட்சிக் காலத்தில் நீர்நிலைகள் ஏரி, குளங்கள் பாதுகாப்பதைமுக்கிய கடமையாகச் செய்து வந்தனர். அதற்கு இன்றைக்கு அடையாளமாக இருப்பது கரிகாலன் கட்டிய கல்லணை, சோழமன்னர்களின் அர்ப்பணிப்பான இன்றைக்கும் நம் கண்முன் இருக்கிற வீராணம் ஏரி, ராஜேந்திர சோழன் கங்கை வரை வடபுலத்துக்குப் படையெடுத்துச் சென்று அந்த வெற்றியின் அடையாளமாக அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பொன்னேரியில் கங்கை நீரை ஊற்றி அமைத்த சோழகங்கம் ஏரி, திருச்சி தெப்பக்குளம் மற்றும் மதுரையில் வண்டியூர் தெப்பக்குளம், மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளம், நெல்லை டவுன் தெப்பக்குளம், ஒவ்வொரு திருக்கோவில்களிலும் முறையாக தண்ணீரைச் சேமிக்க உதவும் கோவில் தெப்பக்குளங்கள் என பல நீர்நிலைகளை இன்றைக்கும் நம் கண்முன்னே காண்கின்றோம். இவை யாவும் தமிழகத்தை ஆண்ட அரசர்கள் முன்னெடுப்பில் செய்யப்பட்ட மக்கள் நலனுக்கான பணிகள். இவற்றை அறப் பணிகளாக நினைத்து அரசர்கள் செய்தார்கள். 
நாட்டின் விடுதலைக்கு முன் தமிழகத்தைப் பொருத்தவரை அதாவது 1940 காலகட்டங்களில், ஏறத்தாழ 65 ஆயிரம் ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் இருந்தன. இன்றைக்கு அவை யாவும் ஏறத்தாழ 35 ஆயிரமாகக் குறைந்துவிட்டன. இவை யாவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘மகேசன்’ என்ற மன்னர்களால் சூறையாடப்பட்டன. 30 ஆயிரம் குளங்கள் என்னவாயிற்று? இந்த குளங்களை வீட்டுமனைகளாக்கி விற்றது யார் என்று ஒரு கேள்வி எழுப்பினால் நமது மனசாட்சிக்கு நிச்சயமாக விடை தெரியும்.  
 மன்னாராட்சிக்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட, இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் குடிமராமத்து, ஆயக்கட்டு என்ற உள்ளூர் நிலைக்கேற்றவாறு, திட்டங்களைத் தீட்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மெட்ராஸ் வாட்டர் போர்டுஆக்ட் என்று 1930 - இல் நடைமுறைப்படுத்தினர். இந்த சட்டத்தை ஆங்கிலேயர் நடைமுறைப்படுத்தினாலும் தொன்று தொட்டு நாம் பழக்கத்தில் இருந்த முறைகளை நடைமுறைப்படுத்தத்தான் இதை 1930 - இல் கொண்டு வந்தார்கள்.
குடிமராமத்து என்பது ஒரு கிராமத்தில் உள்ள குளத்தை அந்தக் கிராமத்தில் உள்ள மக்களே கூட்டுறவு முறையில் பராமரிப்பது, குளங்களுடைய மதகுகளை மசகு போட்டு பராமரிப்பது, குளத்தில் தேவையில்லாமல் மரங்களோ, கருவேல முள் மரங்களோ முளைத்தால் உடனே அப்புறப்படுத்துவது, மழைக்காலங்களில் நீர் வரும்போது நீரில் கிடைக்கும் மீன்களை ஏலம் விட்டு அதில் வரும் வருவாயை ஊர்ப் பொதுவில் வைப்பது என இப்படியெல்லாம் கிராமங்களில் குளங்களை ஒவ்வொருவரும் தங்கள் ஊர் ஆலயங்களைப் போல பாதுகாத்து வந்தனர். மதகுகள், கண்மாய்க்கரைகள், வாய்க்கால், நீர்வழிப் பாதைகளையும் இதே அக்கறையோடு அந்தந்த கிராமங்களில் கிராம மக்கள் கவனம் எடுத்து, கடமையாற்றினர். 
ஆயக்கட்டு என்பது ஒரு குளத்தின் மூலம் பாசன வசதி பெறும்நிலங்களைக் குறிப்பதாகும். இந்த நிலங்களை உடையவர்கள் ஆயக்கட்டுக்காரர்கள் என அழைக்கப்படுவார்கள். இந்த ஆயக்காட்டுக்காரர் குளத்து நீரைப் பயன்படுத்துவதற்கு, அதற்காக சிறு தொகையை தீர்வையாக வாட்டர் ரேட் என்று 1950-60 களில் கட்டியது எனக்கு நினைவுக்கு வருகிறது. வாட்ரேட் என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. ஏனென்றால் எனது தந்தையார் நான்கு கிராமங்களுக்கு கிராமமுன்சீப்பாக இருந்தார்.  
 ஆங்கிலேயர்கள் இந்த ஆயக்கட்டு, குடிமராமத்து ஆகிய திட்டங்களை முதன்முதலாக தஞ்சை மாவட்டத்தில் தொடங்கி வைத்தனர். இவை யாவும் 1968-க்கு முன்பு நடந்த நடைமுறைகளாக இருந்தன. 1968 - க்குப் பின்  ஊர்மக்கள் கூட்டுறவாக இணைந்து செய்த குடிமராமத்துப் பணிகள் நிறுத்தப்பட்டன. அரசின் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் குடிமராமத்துப் பணிகள் நடக்க ஆரம்பித்தன. அரசு சார்பில் குடிமராமத்துப் பணிகள் ஆரம்பித்த பின், குளங்களில் சீமைக் கருவேல மரங்கள் சரியாக அகற்றப்படவில்லை. வண்டல் மண்ணை விவசாயிகள் எடுப்பதற்கு  கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மீன் வளத்தை சம்பந்தபட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று இல்லாமல் வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும்மனிதர்கள் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்என்ற சூழ்நிலைகள் ஏற்பட்டன. 50 - 60 களுக்குப் பின்குளங்களைப் பாதுகாக்கும் முழுமையான நடைமுறைகள்இல்லாமல் போனது கவலையான விடயமாகும். 
இன்றைக்கு இருக்கின்ற நீர்நிலைகளில் ஏறத்தாழ 20,413 நீர்நிலைகள்  ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ளன. 18,709 நீர்நிலைகள் தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. ஜமீன் குளங்களின் எண்ணிக்கை 756. இப்படி ஒரு தோராயமான புள்ளி விவரங்கள் உள்ளன. இந்த கணக்கீட்டில் தனியார் குளங்கள் என்பனவற்றை தமிழ்நாடு சட்டம் 49 / 1974 அதாவது, எஸ்டேட் அபாலிஷன் மற்றும் கன்வெர்ஷன் இன் டூ ரயத்துவாரி சட்டம் 1948 - இன் படி தனியார் பட்டா பெற்ற குளங்களை திரும்பப் பெறப் பெற்று இந்த குளங்களைப் பொதுக் குளங்களாக அரசே ஏற்றுக் கொண்டது. ஏரிகள், கண்மாய்கள், குளங்களில் இருந்து பாசனத்திற்கு ஆண்டுக்கு 390 டிஎம்சி பயன்படுகிறது. இதன்மூலம் நிலத்தடி நீரும் 425 டிஎம்சி கூடுதலாகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தனை குளங்கள் இருக்கின்றன என்பதான புள்ளிவிவரங்கள் இருப்பினும் இந்தக் குளங்களை எந்த மனசாட்சியும் இல்லாமல், செல்வாக்கு பெற்று சொல்வாக்கு அற்றவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்துக் கொண்டதை எல்லாம் மறுக்க முடியாது.  இப்படித்தான் நதிகளில் மணலை அள்ளி சூறையாடினர். காட்டு வளத்தைச் சூறையாடினர். 
செங்கல்பட்டு மாவட்டத்தை ஏரி மாவட்டம் என்று அழைப்பதுண்டு. மதுராந்தகம் ஏரி இருப்பதில் பெரிய ஏரி என்று சொல்வதும் உண்டு. இன்று ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குளங்கள் எத்தனை இருக்கின்றன என்று கணக்குப் பார்த்தால், வருத்தமான புள்ளி விவரங்கள்தாம் நமக்குக் கிடைக்கும்.  
இயற்கையின் அருட்கொடையான நீர்நிலைகள், மணல், வனங்கள், மலைகளை தங்களுக்குத்தான் சொந்தம் என்று சூறையாடும் சுயநல மாந்தர்கள் இன்றும் மிடுக்கோடு பவனி வருகின்றனர். எத்தனை கிராமசபைகள் அமைத்து கூடி தீர்மானங்கள் போட்டாலும் இந்த அநீதிக்கு முடிவு கட்ட முடியவில்லையே... என்ன சொல்ல? 
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு என்பது – வருவாய்த்துறை, நீர்வளத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், தன்னல அரசியல்கட்சிகள் – ஊரகப் பகுதிகளில் மிரட்டல் அதிகாரம் செலுத்தும் உதிரிக் கட்சியாளர்கள் இவர்களின் கூட்டு உடந்தையோடும் நடக்கும் நிகழ்வே என்பது அரசுக்கும் தெரிந்தே இருக்கிறது. வாக்கு வங்கியாக இவ்வாக்கிரமிப்பு குடிசைப் பகுதிகளை வைத்து அரசியல் நடத்துவதும் தொடர்கிறது.
 தமிழகம் முழுவதும்  தமிழக அரசு சார்பில் குடிமராமத்துப் பணிகள் 2016 -17 முதல் 2020-21 வரை ஏறத்தாழ ரூ.1,500 கோடி மதிப்பீட்டிற்கு மேல் செலவுகள் செய்தும் ஓர் ஆக்கப்பூர்வமான பயன்படும் வகையில் அமையவில்லை என்பதுதான் யதார்த்தம்.
நீர்நிலைகளை விட்டுவிடுங்கள். மேட்டூர் அணையைத் திறந்துவிட்டால், கடைமடைப்பகுதியான மயிலாடுதுறை மாவட்டம், திருத்துறைப்பூண்டி வரை காவிரித் தண்ணீர் செல்கின்றதா, இல்லையே? இப்படித்தான் நமது நீர் மேலாண்மை உள்ளது.  
இதேபோல வெள்ளத் தடுப்பு, தணிப்பு பணிகளும் சுணக்கத்தில்தான் உள்ளன.  
சமீபத்தில் ஒரு செய்தி. ஊட்டச்சத்தான வண்டல் மண்ணை தனது நிலத்துக்குப் பயன்படுத்துவதற்காக நீர்நிலைகளில் இருந்து எடுத்து வந்த ஏழை விவசாயிகளின் மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பிடித்து வைத்துக் கொண்டு திருப்பித் தருவதில்லை. இதனால் கடன் வாங்கி மாட்டுவண்டியை வாங்கிய விவசாயி ஒருவர் வருத்தத்துடன் இப்படிச் சொல்கிறார்: “இந்த மாட்டுவண்டி இனி கிடைக்காது. இதை விறகாகத்தான் இனி எரிக்க முடியும்”.  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்பட்ட செய்திகளும் வந்தன. 
பண்டைய அரசராட்சி காலத்தில் நீர்நிலைகளையும் கோயில் நிலங்களையும் ‘சிவன் சொத்து குலநாசம் ’ என்று யாரும் கையகப்படுத்தமாட்டார்கள். முடியாட்சியில் நீர்நிலைகளைக் காப்பாற்ற முடிந்ததைப் போல இந்த குடியாட்சியில் ஏன் காப்பற்ற முடியவில்லை? 
இந்தப் பிரச்னைகளையெல்லாம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அடியேன் பொதுநல வழக்கு ரிட் மனு எண் 30397/ 2018 தாக்கல் செய்தேன். அந்த மனுவில் இந்த விஷயங்களை எல்லாம் முழுமையாகக் குறிப்பிட்டிருந்தேன். கிராமப்புறங்களில் அந்த மக்களின் பொறுப்பில் குடிமராமத்து இருந்த வரையில் குளத்தின் பாதுகாப்புகள் திருப்தியாக இருந்தன. 
 
 
 
நீர்நிலைகளைப் பாதுகாக்க: 
1. பழைய வருவாய் ஆவணங்களைத் தேடிப்பிடித்து, எங்கெல்லாம் நீர்நிலைகள் இருந்தனவோ, அவற்றைக் கையகப்படுத்தி நீர்நிலைகளைச் சீர்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
2. தனியார் குளங்களை 1974 - இல் பொதுக் குளங்களாக மாற்றியதை முழுமையாக மக்களின் நீர் பாசனத்துக்குப் பயன்படச் செய்ய வேண்டும். 
3. இந்த நீர்நிலைப் பாதுகாப்பை மேலாண்மை செய்யவும் கண்காணிக்கவும் மாவட்டம், வருவாய்க்கோட்டம், ஊராட்சி ஒன்றிய அளவில் நேர்மையான உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்பு மேலாண்மை செய்யக் கூடிய பொதுக்குழுக்களை அமைக்க வேண்டும். 
4. கிராமங்களில் குளங்களைப் பாதுகாக்க வெட்டியான் மடையன் என்ற பணிகளில் பகுதி நேர ஊழியர்களை நியமிக்க வேண்டும். (தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. குளங்களில் மண்டிக்கிடக்கும் செடிகளை நீக்குதல், மதகுகளில் உள்ள கம்பியில் மசகு போடுவது, மதகுகளின் அடிப்புறத்தில் பலகைகள் கெட்டுவிடாமல் இருக்க பக்கவாட்டில் உள்ள இரும்பில் எண்ணெய் தேய்ப்பது என்பன போன்ற வேலைகளை கிராமப்புறங்களில் 1950-60 களில் அவர்கள் செய்வதைப் பார்த்ததுண்டு.) அம்மாதிரி குளங்களைப் பராமரிக்கபணியாளர்களை நியமிக்க வேண்டும்.
5. குளங்கள், நீர்நிலைகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைஆழப்படுத்தி தூர்வாருதல், ஏரியின் கரைகளை எடுத்து சரியாக திடமாகக் கட்டுதல் என்பதைக் குறித்து ஆய்வுகள் நடத்த வேண்டும்.  
6. நீர்நிலைகள் சார்ந்த விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த வண்டல்மண் எடுக்க முறையாக அனுமதிக்க வேண்டும். ஆடு, மாடுகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்.
7. குறிப்பிட்ட கிராமத்தில் ஊராட்சி நிர்வாகமும், அந்த கிராமத்தின் பொது மகுமையும் இணைந்து குளத்தில் கிடைக்கும் மீன் வளத்தின் உரிமையை அந்தந்த கிராமத்துக்கு வழங்க வேண்டும்.
மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகள், குளங்கள் வேளாண் பாசனத்திற்கும், குடிநீர்/ குளிநீருக்கும், கால்நடை வளர்ப்பிற்கும் நிலத்தடி நீரைச் செறிவூட்டி வேளாண் திறந்த கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் குழாய்க் கிணறுகளையும் உயிர்ப்பிக்கின்றன. இவை தற்போது 25 முதல் 50% வரை வண்டல் மண் படிந்து மேடிட்டாலும் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.  தமிழ்நாட்டு ஊரகப் பகுதிகளின் உயிர்நாடி இவையே என்றால் அது மிகையில்லை. 
எனவே குறைந்த செலவில் விரைவாக (6 மாதகாலத்தில்)இவற்றைத் தூர்வாரி 1.00 மீட்டர் அளவுக்கு ஆழப்படுத்தினால் 100 டிஎம்சி + 50 டிஎம்சி கூடுதல் நீரை இவற்றில் சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். குறிப்பாக வீராணம், மதுராந்தகம், காவிரிப்பாக்கம், பூண்டி, புழல் மற்றும் செம்பரபாக்கம் போன்ற மாபெரும் ஏரிகளை 1.00 மீட்டருக்கு ஆழப்படுத்தினால் 10 டிஎம்சி வரை கூடுதல் நீரைத் தேக்கி ஆண்டு முழுமைக்கும் குடிநீர் பெற இயலும். உற்பத்திச் செலவின்றி – இப்படி வெறும் பாதுகாக்கப்பட்ட  குடிநீரின் வணிக விலை – 1 கனமீட்டர் (1000 லிட்டர்) – ரூ.80 மட்டுமே. கடல்நீரைக் குடிநீராக்கும்பொழுது உற்பத்திச் செலவு மட்டுமே 1 கன மீட்டர் (1000 லிட்டர்) ரூ.50. இதிலிருந்து ஏரிகுளங்களைத் தூர்வாரி ஆழப்படுத்துவதன் அவசியம் புரியும். 1.00 மீட்டர் ஆழப்படுத்தினால் – பல ஏரிகள், கண்மாய்களில் தாழ்நீர்மட்டம் (Sill Level) கீழே போனாலும் – இவை நிலத்தடி நீரைச் செறிவூட்டவும், கால்நடைகளுக்குக் குடிநீராகவும் பயன்படும். தேவைப்படும்போது நீரேற்றிகள் மூலமாக நீரை இறைத்து பாசனமும் செய்யலாம் இவை பெரும்பாலும் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ளதால் – மேல் வண்டல் மண்ணை-  அப்பகுதியில் தொழில்புரியும் உழவர் பெருமக்களுக்கும், அதற்கடுத்து மண் செங்கல் சூளை வைத்திருப்போருக்கும்மீதமுள்ள 80%க்கும் மேலுள்ள மண் (வெட்டி எடுக்கும் மண்) – உள்ளூர் சாலைகள் போடும் – கட்டடங்கள் கட்டும் ஒப்பந்ததாரர்களுக்கும் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
இன்னும் மிகுந்த அளவில் மண் இருந்தால் (பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், வீராணம் போன்றவைகளில்) – நிரப்பு மண் மிகுதியும் தேவைப்படும். மாநில நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தல், தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்தல் – பெரும் ஒப்பந்தக்காரர்களுக்கு ஒரு யூனிட் (100 கனஅடி)மண்ணை ரூ.500க்கு விற்றுவிடலாம். இதனால் நம் அரசுத்துறைகளான நீர்வளத்துறை,ஊரக வளர்ச்சித்துறைமற்றும் வருவாய்த்துறை அலுவலர் பணி மிகுதியாகக் குறையும். இவர்கள் திட்டமிட்டு மேலாண்மை செய்தால் (மண்வெட்டுமிடம், வெட்டும் ஆழம் வரையறுத்தல், மேற்பார்வையிடல்) போதும்.  
இம்மாதிரியான விடயங்களையும் குளங்களை ஆக்கிரமிப்புச் செய்தால் அது குறித்து முறையிடவும் மாவட்ட ஆட்சித்தலைவரின் பார்வையில் மாவட்ட அளவில் ஆம்பட்ஸ்மேன் அமைக்கப்பட வேண்டும். இந்த ஆம்பட்ஸ்மேன் மேல் முறையீடு செய்ய மாநிலத்தில் சென்னையிலும் மதுரையிலும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமும் அமைக்க வேண்டும். 
இவ்வாறு தொன்மையான தொன்று தொட்டு நாம் பாதுகாத்த நீர் ஆதாரங்களைத் திட்டமிட்டு பாதுகாத்து, பராமரிப்புச் செய்வது ஆட்சியாளர்களின் கடமை என்பதை உணர வேண்டும்.

#ksrpost
26-11-2022.
கட்டுரையாளர்: அரசியலார்


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...