Tuesday, November 8, 2022

#தமிழக கேரள எல்லையில்கேரளஅரசின்அத்துமீறிய டிஜிட்டல்ரீ சர்வேயால் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும். வெளிவராத சில தகவல்கள்.

#தமிழக கேரள எல்லையில்கேரளஅரசின்அத்துமீறிய டிஜிட்டல்ரீ சர்வேயால் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும். வெளிவராத சில தகவல்கள்.






 ——————————————————-
நேற்றும் இன்றும் தொடர்ந்து நவம்பர் 1 - ஆம் தேதியிலிருந்து கேரள அரசின் டிஜிட்டல் ரீ சர்வே குறித்து என்னுடைய சமூக ஊடகத்தில் பதிவு செய்து வருகிறேன். 

நேற்றைய ஆங்கில தி ஹிந்துவில் இதுகுறித்து என்னுடைய கருத்துகளை வெளிவந்திருக்கின்றன. கேரள எப்படித் தமிழக எல்லைப் பகுதிகளை சிறிது சிறிதாக அபகரித்துக் கொண்டது என்றும் 1982-83 - இல் அன்றைய ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில் இருந்த கண்ணகி கோவிலை கேரள அரசு தன்வசம் அத்துமீறி கைப்பற்றிக் கொண்டது என்றும் சித்ரா பவுணர்மி அன்று தமிழகத்தில் இருந்து கண்ணகி கோவிலுக்குச் சென்றவர்களை கேரள காவல்துறையினர் தாக்கி அடித்தது குறித்தும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடுத்தது குறித்த விவரங்களோடு வெளியிட்டது. மேலும் முல்லைப் பெரியாறு,  செண்பகவல்லி, நெய்யாறு போன்ற நீராதார அமைப்புகள் கேரளாவின் அத்துமீறலால் தமிழகம் பாதிக்கப்பட்டது குறித்தும் நான் முன் வைத்த கருத்துகளை ஆங்கில தி ஹிந்து ஏடு வெளியிட்டது.
 
அதற்குப் பதிலாக தமிழக வருவாய்த்துறை அமைச்சராக இருப்பவர் ஆங்கில ஏட்டைத் தொடர்பு கொண்டு சொன்ன கருத்துகள் இன்று தி ஹிந்து ஏட்டில் வந்துள்ளன. அது தொடர்பாக நேற்று கீழ்க்காணும் கருத்துகளை ஆங்கில ஹிந்து ஏட்டின் கவனத்துக்கு நான் கொண்டு வந்தேன். ஆனால் அது அச்சேறவில்லை என்பது வேறு விடயம். அமைச்சரின் கருத்து மட்டும் இடம் பெற்றுள்ளது. 

இந்தப் பிரச்னை தொடர்பாக  தமிழ் இந்து வெளியிட்டுள்ள விரிவான செய்தியில் என் கருத்துகளை உள்ளடக்கி வெளியிட்டுள்ளது.
இன்றைக்கு வெளி வந்துள்ள தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சரின் கருத்து, டிஜிட்டல் ரீ சர்வேவுக்குப் பின் உட்கார்ந்து பேசி சரி பண்ணிக் கொள்ளலாம் என்பதாக உள்ளது. இது நடைமுறைக்கும் தமிழகத்தின் நலனுக்கும் உகந்ததா என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மேலும் செப்டம்பர் மாதமே கேரள துணை ஆணையர் ஒருவர் தொடுபுழாவில் இருந்து இதைக் குறித்து கடிதம் எழுதியதாகவும் சொல்லியுள்ளார். சரிதான். ஆனால் செப்டம்பர் மாதமே இதைக் குறித்து ஓர் அறிவிப்பு செய்து, தமிழகத்தின் வருவாய், வனத்துறை அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியிருக்கலாமே என்பதுதான் நமது கேள்வி. 



 
கேரளாவில் தமிழகம், கேரளம் ஆந்திரம் கர்நாடகம் மாநில எல்லைகள் அமைந்த 1956 நவம்பர் 1 ஆம் தேதி நவகேரளம் நாளன்று, கேரள அரசு 200 கிராமங்களில் 11 மாவட்டங்களில் குளோபல் நேவிகேஷன் சாட்லைட் என்ற நிறுவனத்தின் மூலமாக இந்த டிஜிட்டல் ரீ சர்வே – ஐ ஆரம்பித்துவிட்டது. இந்த நில அளவை நீர்நிலைகள், விவசாய நிலைகள் என்று வகைப்படுத்தும்.
இரண்டு மாநில எல்லைப் பகுதிகளில் கன்னியாகுமரியில் இருந்து நீலகிரி வரை இந்த டிஜிட்டல் ரீ சர்வே நடந்தால் நமக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு நம்முடைய வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் இருக்க வேண்டாமா? என்பதுதான் நமது கேள்வி. சர்வே முடிந்த பின் அமர்ந்து பேசி ஒழுங்குபடுத்துவது எந்தவிதத்தில் சரியாக வரும்? 

ஏற்கெனவே முல்லைப் பெரியாறில் இருந்து அத்தனை நதி தீரங்களிலும் கேரள விதாண்டவாதம் செய்து வருகின்றது. இதில் தமிழகம் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டாமா? செப்டம்பர் மாதம் கேரள அரசு அதிகாரிகளின் கடிதம் கிடைக்கப் பெற்றால், எல்லையோர 9 மாவட்ட ஆட்சியாளர்களுக்கோ முன்கூட்டியே தெரிவித்து மக்கள் மத்தியில் இது குறித்து விளம்பரப்படுத்தியிருக்க வேண்டாமா? இதுதான் நம்முடைய வினா. 

இந்தப் பிரச்னையில் கடந்த அதிமுக ஆட்சியில 2017 ஜூலையில் உத்தமபாளையம் ஆர்டிஓ கேரள எல்லையில் நமது பகுதியைப் பாதுகாக்க, 14 எல்லைக் கற்களை வனத்துறையில் ஊன்ற முயற்சி செய்ததும், கேரளாவின் எதிர்ப்பால் பாதியில் அந்தப் பணி கைவிடப்பட்டதெல்லாம் கடந்த கால செய்திகள். 

இப்படி இருக்கும்போது எந்தெந்த பகுதிகளில் அளக்கப் போகிறார்கள்? தமிழக கேரள எல்லையில் டிஜிட்டல் ரீ சர்வே எந்த முறையில் நடக்கிறது என்பதை நேரில் கண்காணித்தால்தானே நல்லது? அதைவிட்டு சர்வே முடிந்த பிறகு பேசுகிறோம், செய்வோம் என்பது எப்படி சரியாக வரும் என்பதுதான் என் கேள்வி. ஏற்கெனவே அடிக்கடி நான் குறிப்பிடும் குமரி மாவட்டத்திலிருந்து நெய்யாறு அணைப் பிரச்னை,, செங்கோட்டை அருகில் அடவி நயினார் பிரச்னை, வாசுதேவ நல்லூர் அருகே செண்பக வல்லி தடுப்பணை பிரச்னை, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகர் அணைத்திட்டம் அனைவரும் அறிந்த முல்லைப் பெரியாறு சிக்கல், கோவை வட்டாரத்தில் ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு - புன்னம்புழா, சிறுவாணி, பம்பாறு, நம் பகுதியில் உள்ள அமராவதிக்கு நீர்வரத்துப் பிரச்னை என ஏறத்தாழ 16 நதிநீர்ப் பிரச்னைகள் தமிழகம் -  கேரள எல்லைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது.  

தெற்கே குமரியில் நெய்யாற்றங்கரை,  நெடுமங்காடு இழந்தது, அதேபோல தேவிகுளம் பீர்மேட்டை இழந்தது. பொள்ளாச்சி அருகே அட்டப்பாடி வட்டாரத்தில் பல தமிழ் பேசும் கிராமங்களை இழந்ததுதான் இன்றைக்கு நாம் எதிர்கொள்கிற நதிநீர்ச் சிக்கல்களுக்கு காரணமாகும். 

அதுபோலவே தற்போது நடக்கும் டிஜிட்டல் ரீ சர்வேயால் நம்மிடம் உள்ள பகுதிகளை கேரளா நம்மிடம் இருந்து எடுத்துக் கொள்ளக் கூடாதே என்ற அச்சத்தினால்தான் இதைனை வலியுறுத்துகிறோம். இது அரசியல் அல்ல. தமிழக நலனைக் கருதி வலுவான எதிர்ப்புக் குரலைக் கொடுத்து வருகிறோம். கடந்த 8 நாட்களாக இந்த சர்வேயை கேரள நடத்திக் கொண்டிருக்கும்போது தமிழக அதிகாரிகள் அங்கே செல்லாமல் இருந்தால் பல கேடுகள் வந்துவிடுமே என்ற அச்சம்தான் காரணம்.

#ksrpost
8-11-2022.

(Picture 1- The Hindu.7-11-2022.
2-The Hindu.8-11-2022.
3- இந்து தமிழ்.8-11-2022.)

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...