#*காந்திகிராம நிகர் நிலை பல்கலைக்கழகம்*
————————————
கடந்த 11.11.2022 காந்திகிராம நிகர் நிலைபல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு இந்திய பிரதமர் வந்தார். இது குறித்தும் டாக்டர் சௌந்தரம் அம்மாவைப் பற்றியும் பதிவு செய்திருந்தேன். காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம் உருவாக அப்போது சின்னாளபட்டியைச் சேர்ந்த காந்தியை நேசித்த லகுமையா நிலங்களைக் கொடுத்தார்.
காந்திய சிந்தனைகள், கிராம மேம்பாடு, கிராமியப் பொருளாதார ஆகிய இலக்குகளை வைத்து டாக்டர் சௌந்தரம் அம்மாவும், டாக்டர் ராமச்சந்திரனும் நிறுவினார்கள். டாக்டர் ராமச்சந்திரன் தாகூரின் சாந்தி நிகேதனில் படித்தவர். நேரு ஒருகாலத்தில் ‘பெரிய தொழிற்சாலைகள் நாட்டுக்குத் தேவை, அவைதான் கோயில்கள் ’
என்று சொல்லி பல தொழிற்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தவர். ஆனால் அவர் தனது இறுதிக் காலத்தில் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தபோது, கிராமியப் பொருளாதார நடவடிக்கைகளில் தான் அதிகமாக கவனம் செலுத்தவில்லை என்ற தனது கவலையைத் தெரிவித்தார்.
இந்திராகாந்தி தன்னுடைய இரு மகன்களோடு சிலநாட்கள் இங்கு வந்து சௌந்தரம் அம்மாவின் விருந்தினராகத் தங்கியதுண்டு. அது அவருடைய கணவர் பெரோஸ் காந்தி இறந்த நேரம். அப்போது ராஜீவ் காந்தியும், சஞ்சய் காந்தியும் பள்ளி செல்லும் சிறுவர்கள். இந்திராகாந்தி
1976 -இல் இந்த பல்கலைக்கழகத்துக்கு வந்துபோது இந்தப் பல்கலைக்கழகத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்ற அனுமதி அளி்த்தார்.
மார்டின் லூதர் கிங் இந்தப் பல்கலைக்கழகத்தைப் பற்றிக் குறிப்பிட்டு சிலாகித்து பாராட்டியதும் உண்டு.
இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவ டிவிஎஸ் நிறுவனம், போர்ட் நிறுவனம் ஆகியவை பல உதவிகளை முன் வந்து செய்தன.
என் சிறுவயதில் இந்த பல்கலைக்கழகத்துக்கு நான் சென்ற மங்கலான நினைவு உள்ளது.
என்னுடைய உறவினர் வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த வி.ராமசாமி, கிராமிய பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய முதுகலை பட்டப் படிப்பை அங்கே படித்துக் கொண்டிருந்தார். என் தந்தையாரும் நானும் திண்டுக்கல் சென்றுவிட்டு மதுரை திரும்பும்போது என் தந்தையார் என்னை காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அங்கு கிராமங்களில் இருப்பது மாதிரியான ஓட்டுக் கட்டடங்கள், பசுமையான மரங்கள் இருந்தன. ஒரு வித்தியாசமான கலாசாலையாக அது இருந்தது.
#ksrpost
13-11-2022.
No comments:
Post a Comment