#*வாழ்கதமிழகம்….*
————————————
*கடந்த 1.11.2022 அன்றிலிருந்து கேரள அரசு தான் கொண்டாடும் ‘நவகேரளம் – ஐக்கிய கேரளம் ’ என்ற நாளில் தமிழக கேரள எல்லையை டிஜிட்டல் ரீ சர்வே செய்து வருகிறது. கடந்த 9 நாட்களாக இது குறித்து என் பதிவுகளையும்-காணொலியையும் என்னுடைய சமூக ஊடகத்தில் பதிவு செய்து வருகிறேன்*
*தமிழகத்திலிருந்து மரியாதைக்குரிய பழ.நெடுமாறன் அவர்கள் மட்டுமே கேரள அரசின் டிஜிட்டல் ரீ சர்வே குறித்தான கண்டனத்தைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்*.
*தற்போது கேரளா நடத்தும் இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால் கண்ணகிக் கோவிலைப் போல நம்முடைய எல்லைப் பகுதிகளை அபகரித்துக் கொள்வதற்கும், முல்லை பெரியாறு மாதிரி நீராதாரச் சிக்கல்களை கேரள அரசு உருவாக்கிவிடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்று நாம் சொன்னபோதிலும், “அவர் மண்... இவர் மண்” என்று போலித்தனமாகப் பேசும் இங்குள்ள ‘கனவான்கள்’ யாரும் இதைப் பற்றி வாயே திறக்கவில்லை, வாழ்க தமிழகம்*!
*****
தமிழகப் பகுதிகளை ஆக்கிரமிக்கக் கேரளத்தின் திட்டம்
*தமிழக அரசு தடுத்து நிறுத்தவேண்டும்
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் எச்சரிக்கை*
தமிழ்நாடு – கேரளம் ஆகியவற்றின் எல்லை நெடுகிலும் இருக்கும் கிராமங்களில் கணினி முறையில் மறு சர்வே செய்யும் திட்டத்தைக் கேரள அரசு நவம்பர் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது. 1956ஆம் ஆண்டு மாநிலப் பிரிவினையின் போது இரு மாநிலங்களுக்கும் இடையேயுள்ள எல்லைப் பகுதியில் 230 கி.மீ. தூரம் அளவுக்கே இரு மாநிலங்களின் கூட்டு சர்வே முயற்சியால் அளவிடப்பட்டுள்ளன. ஆனால், மீதம் இருக்கக்கூடிய 627 கி.மீ. அளவுக்குக் கூட்டு சர்வே நடத்துவதற்குக் கேரள அரசு ஒத்துழைக்காததினால் அந்த வேலை கடந்த 56 ஆண்டுக் காலமாக அப்படியே கிடக்கிறது. இரு மாநிலங்களின் பெரும்பகுதியின் எல்லை வரையறுக்கப்படாமல் உள்ளது. ஆனால், தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் கேரளம் இந்த முயற்சியில் ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானதாகும்.
கடந்த 56 ஆண்டுக் காலத்தில் எல்லைப் பகுதியில் இருக்கக்கூடிய தமிழக கிராமங்களில் அத்துமீறி உள்புகுந்து பல பகுதிகளை மலையாளிகள் ஆக்கிரமித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் தாலுக்காவில் ஏறத்தாழ 30,000 ஏக்கர் கொண்ட காட்டுப் பகுதியில் மலையாளிகள் உள்புகுந்து காடுகளையும் வெட்டி, மரங்களைத் திருடிக் கொண்டு சென்றதோடு, அப்பகுதியில் ஏராளமாகக் குடியேறிவிட்டனர். இதன் விளைவாகக் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் மலையாளிகள் பெரும்பான்மையினராகி அவர்களில் ஒருவரே தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகி வருகின்றனர். இதைப்போல குமரி, நெல்லை, விருதுநகர், தேனி மாவட்டம் முதல் கோவை மாவட்டம் வரை இரு மாநில எல்லை நெடுகிலும் மலையாளிகள் ஊடுருவி காட்டு நிலங்களில் குடியேறி வருவது தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு ஆக்கிரமித்தப் பகுதிகளை தனக்குச் சொந்தமானது என்று காட்டுவதற்கே புதிய சர்வேயை கேரள அரசு நடத்துகிறது. உடனடியாக இந்தப் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு இதை நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் நமக்குச் சொந்தமான ஏராளமான நிலப்பகுதிகளை நாம் இழக்க வேண்டிவரும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அன்புள்ள,
(பழ.நெடுமாறன்)
தலைவர்.
No comments:
Post a Comment