குறையொன்றும் இல்லை.. 4 ( தொடர்ச்சி..)
………………………………………..
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு…
முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பிறகு, ஆட்சியில் இருந்த தி.மு.க. மீது, கடுமையான எதிர்வினைகளை ஆற்றியவர்கள் இன்று தோழமையாக இருக்கிறார்கள். நல்லதுதான்.
முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பின் நான் தி.மு.க.வில் இணைந்து, பல விமர்சனங்களுக்கு மத்தியில் அடியேனின் முழு முயற்சியில் டெசோ நடத்தியது உங்களுக்கும் நன்கு தெரியும். ஜெனிவா மனித உரிமை ஆணையம் - ஐ.நா.வில் - ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேச இரண்டு முறை தாங்களும் நானும் பயணத் திட்டமிட்டதும்.. கடைசி நிமிடத்தில் தாங்கள் இயலாது என்றதும் தங்களுக்குத் தெரியும்.
ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் தி.மு.க.வின்– தலைவர் கலைஞரின் கருத்துக்களாக அடியேன் வைத்தது; ஐ.நாஅவை. ஆண்டறிக்கையில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையை இன்று தங்களோடு பொறுப்பில் உள்ள எவராவது செய்திருக்க முடியுமா..இயலுமா?
கீழே அந்த மூன்று பக்கங்களை இணைத்துள்ளேன்..
சற்று பின்னோக்கிய நிலைனவைுகள் மனதிலாடுகின்றன..
1989 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு..தலைவர்கலைஞர் அவர்களும் முரசொலி மாறன் அவர்கள் என்னை அழைத்தார்கள்.
கரூர் அடங்கிய திருச்சி மாவட்டம், தஞ்சை மாவட்டம், நாகை சம்புவராயர் மாவட்டம்,கடலூர், விழுப்புரம் அடங்கிய தென்னாற்காடு மாவட்டம்.., ஒன்றுபட்ட செங்கல்பட்டுமாவட்டம், திருவண்ணாமலை அடங்கிய வேலூர் மாவட்டம்,நாமக்கல் அடங்கிய சேலம் மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருப்பூர் அடங்கிய கோவைமாவட்டம், நீலகிரி மாவட்டம்.. இவைஉள்ளடங்கிய சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது…வேட்பாளர்கள் சரியானவர்கள் யார் ?என சாதக பாதகங்கள் என்னென்ன என அறிந்து வந்து அறிக்கை தரும்படி பணித்தார்கள்.
அதுஅம்பாசிடர் கார் காலம்.. எனது அம்பாசிடர் காரில் 1988 இல் ஆறு மாத காலத்துக்கும் மேலாக இந்தபகுதிகளில் எல்லாம் தொகுதி தொகுதியாக சுற்றி வந்து ஆய்வு செய்தேன். இறுதியில் எனது அறிக்கையை தலைவர் கலைஞர் அவர்களிடம் சமர்ப்பித்தேன்.ஏதோ போகிறபோக்கில் நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். இதற்கு சாட்சியாக வைகோவே இருக்கின்றார்.
அடியேனின் இந்த சுற்றுப்பயண அறிக்கையில் எழுதிக்கொடுத்த பெயர்கள்தான்.. திருச்சி கே.என். நேரு, விழுப்புரத்தில் பழனியப்பனுக்கு மாற்றாக தெய்வசிகாமணி என்று அழைக்கப்பட்ட இன்றைய பொன்முடி, அச்சரப்பாக்கம் ராமகிருஷ்ணன், இன்றைக்கு பாஜகவில் இருக்கிறாரே வி.பி.துரைசாமி…இப்படி அந்த பட்டியல் மிக நீண்டது.
இதையெல்லாம் இன்று சொன்னால்தான் தெரியும்.. என்ன சொல்வது!
கே.என்.நேருவுக்கு அன்று அன்பிலும் செல்வராஜும் எதிர்வினையாற்றி னார்கள். பொன்முடி விசயத்தில் பட்டும்படாமல் விலகி இருந்தார் செஞ்சி ராமச்சந்திரன். ராமகிருஷ்ணனுக்கு வாய்ப்பு தர கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் இருந்தார், மதுராந்தகம்ஆறுமுகம் என்பதெல்லாம் விஷயம்..
தங்களது வேளச்சேரி வீட்டில், காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபு சார்ந்தகாவல் துறையினர் நள்ளிரவில் செய்த துவம்சங்கள்.. அப்போதும் எனது பணிகள்..
கலைஞரின் நள்ளிரவு கைது துயர சம்பவத்தின் போது அடியேன் ஆற்றிய பணிகளை ஏற்கனவே நினைவு கூர்ந்து இருக்கிறேன். அதையொட்டி நினைவுக்கு வந்த இன்னொரு சம்பவம்..
யாரும் எட்டிப் பார்க்காத அந்த நேரத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற டெல்லியில் இருந்து வந்த அகில இந்திய அரசியல் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.. அவர்களை பேராசிரியர் அவர்களிடம் அழைத்துக்கொண்டு சென்று சந்திக்கவும் வைத்தேன்..
இந்த கைது நடவடிக்கையை கண்டித்து கடற்கரையில் நடந்த கண்டன பேரணியில் பத்திரிகையாளர்கள் கழகத்தினர் கடுமையாக தாக்கப்பட்டனர். கோவை குடிமங்கலத்தை சார்ந்த நிர்வாகி இந்த தாக்குதலில் பலி….
மாலை பொழுதில்.. கூட்ட கடற்கரை மேடையில் கவலையுற்று இருந்தார் கலைஞர். அண்ணன் மாறன் அவர்கள் அடியேனிடம் சொல்ல… மேடையில் இருந்தே அன்றைய குடியசுதலைவர் கே.ஆர். நாராயணன் அவர்களிடமும், அன்றைய ஜெயலலிதா ஆட்சியில் உள்துறை செயலாளராக இருந்த நரேஷ் குப்தா அவர்களிடமும் நிலையை எடுத்துச் சொல்லி என் செல்போனில் இருந்து பேசினேன். யாரும்தயாராக இல்லாத நிலையில், என்னை அழைத்து மாறன்அவர்கள் பேசச் சொன்ன போது தயக்கம் இன்றி உடனே பேசி, நிலைமையை சொன்னேன்.
இதெல்லாம்.. இன்றைக்கு உள்ள அமைச்சர்கள் எத்தனை பேருக்கு தெரியும்.. ஏனென்றால் இவர்களில் பலர் அன்றுஅரசியல் களத்தில் இருந்தார்களா என்றுதெரியாது..
கடந்த 2016 வரை திமு.க. மீதும் தலைவர் கலைஞர் மீதும் கடுமையாக – தவறாக விமர்சனம் செய்தவர்களுக்கு எல்லாம் இன்று பாட புத்தக நிறுவனத்தில் பொறுப்புகள்.. திட்டக்குழுவில் பொறுப்புகள்.. கலைஞர் தொலைகாட்சியில் பொறுப்புகள்.. கழக நிர்வாகத்தில் பொறுப்புகள்.. என அள்ளிக்கொடுத்தீர்கள். இப்படி எதிராக இருந்தவர்கள் பலருக்கும் பல பொறுப்புகள்.. நியமனங்கள்.
நான் இவ்வளவு செய்தும் மதிப்பும் மாண்பும் எனக்குக் கிடையாது..என்தான் நடக்கிறது.
நான் பொது வாழ்க்கையில் இழந்தது அதிகம்.. பெற்றது ஒன்றுமில்லை… இனி எவ்வளவோ இருக்கிறது.. கடிதம் வாயிலாக தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்..
நாடும் நீங்களும் உங்கள் கொற்றமும் வாழ்க என்று வாழ்த்தி… என் பாதையில் – என் வழியில் சுதந்திரமாக ஜீவிக்க வழி அமைத்ததற்கு கோடி நன்றிகள்..!
குறையொன்றுமில்லை.. மகிழ்ச்சி..
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#ksr_post
27.11.2012
No comments:
Post a Comment