#*அன்றைய திமுகவில் அண்ணாவின் தம்பிமார்கள் சிலர்*…
——————————————————-
புதுக்கோட்டையில் இருந்து அண்ணன் புலவர் மதிவாணன் இன்று பேசினார். இவர் அண்ணாவுக்கும் ஈ.வி.கே.சம்பத்துக்கும் மிகவும் நெருக்கமானவர். பின்னாட்களில் அண்ணன் நெடுமாறனோடு பயணித்தவர். தி.மு.க., தமிழ் தேசிய கட்சி, காங்கிரஸ் என்று அரசியல் களத்தில் இருந்தவர்.
அண்ணாவும் கலைஞரும் 1940 – 50 களில் புதுக்கோட்டைக்குச் சென்றால், இவர் வீட்டில்தான் அப்போது தங்குவார்கள்.திமுகவின் தொடக்கக் காலத்தில் அன்றைய திருச்சி மாவட்டத்தில் இருந்த புதுக்கோட்டை வட்டாரத்தில் முக்கியமான தலைவராக இவர் விளங்கினார். இவரால் உருவாக்கப்பட்டவர்தான் தி.மு.க.வில் தேர்தல் காலத்தில் இணைந்து 1974 வரை தலைவர் கலைஞர் அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த கே.வி.சுப்பையா ஆவார். புலவர் மதிவாணனைப் போலவே வளையபதி முத்துக்கிருஷ்ணன் என்பவரும் திமுகவின் அன்றைய முக்கியமான அப்பகுதி மேடைப் பேச்சாளர் ஆவார்.
அற்புதமான பண்பாளரும் அறிவுசார்ந்த ஆளுமையான அண்ணன் புலவர் மதிவாணன் என் மீது அளப்பரிய அன்பைக் காட்டுவார். திமுகவில் இருந்து என்னை நீக்கியது குறித்துப் பேசும்போது, “விடுங்கள் நான் பார்க்காத திமுகவா?
உங்களுக்கென்று பல பணிகளும் தளங்களும் இருக்கின்றன. சுதந்திரமாக இயங்குங்கள்” என்று கூறியது சற்று மகிழ்ச்சியாக இருந்தது.
நல்ல தமிழறிஞர். நான் எந்தப் புத்தகம் எழுதினாலும் அதைச் சரி பார்ப்பது மட்டுமல்லாமல், பிழையும் திருத்தி எனக்கு அனுப்பி வைப்பார். அண்ணன் நெடுமாறனுடைய புத்தங்களுக்கும் இவர்தான் பிழை திருத்துவார்.
திமுகவின் தொடக்க காலத்தில் அண்ணாவின் தலைமையில் களப் பணியாற்றிய புதுக்கோட்டை மதிவாணன், அண்ணா காலத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலாக வெற்றி பெற்ற 15 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் பின்னாட்களில் (1980) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த அண்ணன் எம்.பி.சுப்பிரமணியம், ஆர்.எஸ்.பாண்டியன், கவிஞர் கண்ணதாசனின் சகா மதுரை ஆ.ரத்தினம், திருச்சி வழக்கறிஞர் வெங்கடாசலம், காஞ்சிபுரம் ஏ.எஸ்.வேணு, சிந்தனைச் சிற்பி சி.பிசிற்றரசு, பின்னாட்களில் அண்ணன் நெடுமாறனுடன் பயணித்த தி.சு.கிள்ளிவளவன், எம்.கே.டி.சுப்பிரமணியம் ( இவர் அண்ணா ராபிட்சன் பூங்காவில் திமுகவைத் தொடங்கும்போது இவருடைய பெயர் அந்த அழைப்பிதழில் முன் வரிசையில் இடம் பெற்றது) மற்றும் புரட்சிமணி, கடலூர் பூவை ராமானுஜம், பிள்ளப்பன், பொறையார் ஜம்பு, சிவகங்கை சுப்பிரமணியம். கரு.தமிழழகன் என பலர் திமுகவை வளர்க்க ஆரம்ப கட்டத்தில் அண்ணாவின் தம்பிகளாக களப்பணி ஆற்றியவர்கள். இன்று எத்தனை பேருக்கு இவர்களை பற்றி தெரியும்? இவர்களின் பெயர்களை எல்லாம் அண்ணன் மதிவாணன் என்னிடம் சொல்லி, “திமுகவில் நீக்கியதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு நான், “நிம்மதியாக இருக்கிறேன். எனக்கான சில பணிகளைச் செய்வது தடையாக இருந்தது. அந்த தடை இப்போது இல்லை. நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று அவரிடம் சொன்னேன்.
புலவர் மதிவாணனின் சகாக்கள் பலர் இன்றைக்கில்லை. இருப்பினும் திடகாத்திரமாக, அதே வெள்ளை ஜிப்பா,வேட்டியோடு புதுக்கோட்டை நகரையே கால்நடையாகச் சுற்றி வருகிறார். புதுக்கோட்டை கே.எம்.வல்லத்தரசு, புதுக்கோட்டை சமஸ்தான ஆட்சியாளர்களே இவரைப் பார்த்தால் மரியாதையாக எழுந்து நிற்பது உண்டு.
வள்ளுவர், கம்பர், வ.உ.சி., பாரதி, பாரதிதாசன், அண்ணா. ஈ.வி.கே சம்பத், நெடுமாறன், வேலுப்பிள்ளை பிரபாகரன் என பண்டைய தமிழக வரலாற்றுச் செய்திகளானாலும் சரி, தற்போதைய நூறாண்டு செய்திகளானாலும் சரி எதைப் பற்றிக் கேட்டாலும் தன் நினைவிலிருந்து அண்ணன் மதிவாணன் சொல்வார். இன்றைக்கு நம்மிடம் கடந்த நூற்றாண்டின் அருட்கொடையாக - நம்மிடம் அண்ணன் மதிவாணன் இருக்கிறார். இன்னும் பல்லாண்டு அவர் வாழ வேண்டும்.
#ksrpost
7-11-2021
No comments:
Post a Comment