அந்தக் காலத்தில் அப்படித்தானே செய்தார்கள். சௌந்தரம் பனிரெண்டு வயதுக் குழந்தையாக இருந்த போதே முறைப் பையனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள் ஆனால் அவள் சுதந்திரமானவளாகவும் அறிவாளியாகவும் திறனாளியாகவும் உருப்பெற அவள் கணவர் டாக்டர் சௌந்தரராஜன் விரும்பினார். கல்வியைத் தொடர வைத்தார்.
1925-ல் மதுரையில் பிளேக் நோய் பரவி இருந்தபோது நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சௌந்தர்ராஜன் 30 வயதை அடையும் முன்பே இறந்து விடுகிறார். அதற்கு முன்பாக மனைவி சௌந்தரம் டாக்டராக வேண்டும் என்றும் மறு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற தன்னுடைய ஆசையை சொல்கிறார். முற்போக்கு சிந்தனை உடைய சவுந்தரத்தின் பெற்றோர்களும் அவளை மேலே படிக்க அனுமதிக்கிறார்கள் தனது 32 ஆம் வயதில் புதுடெல்லியில் உள்ள லேடி ஹர்டிங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில்கிறார். அங்கே டாக்டர் சுசீலா நய்யார் அறிமுகமாகவும் அவர் மூலமாக மகாத்மா காந்தியை சந்திக்கிறார். காந்திஜியின் சீடர்களில் ஒருவரான ராமச்சந்திரன் அறிமுகமாகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ய, கஸ்தூரிபாய் தன் கையால் நெய்து தந்த சேலை ஒன்றே கல்யாணப் புடவையாக, காந்திஜி தன் கையால் மஞ்சளில் நனைத்தெடுத்த சரடு மாங்கல்யமாக திருமணம் நடக்கிறது. அப்போது அவருக்கு 35 வயது. மகள் கலப்புத் திருமணம் செய்து விட்டதால் பெற்றோருக்கும் மிகவும் வருத்தம்.
மருத்துவப் படிப்பை முடித்து 1942-ல் சென்னை வந்து டாக்டராக பணிபுரிகிறார். மகப்பேறு சிகிச்சை என்றால் எந்த ராத்திரியிலும் எந்த இடத்துக்கும் மாட்டு வண்டியிலோ படகிலேறியோ சென்று வைத்தியம் பார்ப்பார் என்ற நற்பெயர் பெறுகிறார். தம்பதியர் இருவரும் வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
டாக்டர் சௌந்தரத்தை கஸ்தூரிபாய் காந்தி தேசிய நினைவு நிதியின் தென்னிந்திய பிரதிநிதியாக காந்திஜி நியமிக்கிறார். பெண்கள் குழந்தைகள் நலத்தில் தீவிர அக்கறை கொண்ட டாக்டர் சவுந்தரம் ஔவை ஆசிரமத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவசைலத்தில் ஆரம்பிக்கிறார்.
1947-ல் தன் கணவருடன் இணைந்து காந்திகிராமம் டிரஸ்ட்டை உருவாக்குகிறார். அதற்கு நிதி தேடி தன் குடும்ப உறவினர்களை அணுகிய போது அவர்கள் எப்படி விலகி ஓடினார்கள் என்பதை நகைச்சுவையுடன் சொல்லுவார். கதர் கிராம கைத்தொழில்களுக்கான பயிற்சி அமைப்புகளை உருவாக்கிய அந்த காந்தி கிராம் நிதி 1978ல் நிகர் நிலை பல்கலைக்கழகம் ஆகிறது.
டாக்டர் சௌந்தரம் சின்னாளபட்டியில் ஓலை குடிசையில் ஆரம்பித்த ஒரு கிளினிக் இன்று 230 படுக்கையுள்ள கஸ்தூரிபா ஆஸ்பத்திரியாக வளர்ந்திருக்கிறது. எந்த நேரமும் காந்திகிராம் பற்றிய சிந்தனையுடனேயே இருந்திருக்கிறார் உறவினர்கள் வீட்டுக்கு வரும்பொழுது விருந்து உண்பாரெனில் அப்பொழுதும் துயரப்படுபவர்களை பற்றி பேசி அவர்களுக்கு இந்த உணவு கிடைக்காது இருப்பது குறித்தும் பேசுவாராம்.
1977-ல் மதுரையில் வெள்ளம் வந்த பொழுது அரசின் நிவாரண கேம்ப அமைக்கப்படும் முன்பு டாக்டர் சௌந்தரம் நிவாரண முகாம் அமைத்து விட்டார் வீட்டில் இருந்த எல்லோருடைய துணிமணிகள் அரிசி மளிகை சாமான்கள் அந்த முகாமுக்கு போய் விட்டனவாம்.
இரண்டு தடவை ஆத்தூர் மற்றும் வேடசந்தூர் தொகுதிகளில் இருந்து, சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும் ஒரு தடவை திண்டுக்கல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார் 1962ல் டாக்டர் சௌந்தரத்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது அதே ஆண்டு அவரை மத்திய கல்வி இணை அமைச்சராக்குகிறார் நேரு. அமைச்சராக இருந்தபோது கட்டாயக் கல்வியையும் பள்ளிகளில் என்.எஸ்.எஸ் சேவை அமைப்பையும் அறிமுகம் செய்கிறார். 1967 பாராளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியிலேயே தோல்வி அடைந்த பிறகு அரசியலில் இருந்து விலகி சமூகப் பணிகளில் ஈடுபட்டார்
கலாக்ஷேத்திராவில் முறைப்படி நடனம் பயின்றிருந்த டாக்டர் சௌந்தரம் வீணை வாசிப்பதில் தேர்ந்தவர். டாக்டர் சௌந்தரம் தான் அணிந்த கதர் சேலைகளுக்கான வடிவமைப்பையும் தானே செய்யக்கூடியவர் அவ்வாறு இவர் வடிவமைத்த புடவையை இந்திராகாந்திக்கு பரிசளிக்கிறார்.
மென்மையான வழிமுறைகளில் இந்த உலகத்தையே நாம் அசைத்து விடலாம் என்கிற மகாத்மா காந்தியின் கொள்கையைத் தன் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர்.
தன் தாயையும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியையும் மகாத்மா காந்தியையும் தன் வாழ்வின் மூன்று குருக்களாக மதித்தவர் இவர்.
அனாதைக் குழந்தைகளையும் கஷ்டப்படும் பெண் குழந்தைகளையும் கண்டு விட்டால் உருகி விடுவார். ஒரு மாணவிக்கு கல்வி கட்டணம் செலுத்த தன் கைக்கடிகாரத்தையே விற்று விட்டார். அந்தக் குழந்தைகளைப் பார்க்க வரும் பொழுது தன் கையால் முறுக்கு செய்து கொண்டு வருவார். தன்னைப் பார்க்க வருபவர்கள் கொண்டு வந்து தரும் பழ வகைகளை அந்தக் குழந்தைகளுக்கு அனுப்பி விடுவார். இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் கூட கிடைக்காமல் அந்த குழந்தைகள் ஏக்கத்துடன் இருப்பார்கள் என்று சொல்வார்.
மிகவும் ஆசைப்பட்டு அவர் உறவினர்களோ மகள்களோ எடுத்துக் கொடுக்கும் சேலைகள் எல்லாம் அடுத்த நாளே ஆசிரமத்துக்குப் போய்விடுமாம். யாரை சந்திக்கும் பொழுதும் தயக்கம் ஏதும் இன்றி ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுப்பாராம்.
சுமித்ரா, கனகா என்று இரு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தார். மிகுந்த மன உறுதியுடைய டாக்டர் சவுந்தரம் மனம் உடைந்து அழுதது வளர்ப்பு மகள் சுமித்ரா இறந்தபோது என்பார்கள்..
சுமித்ராவின் மகன் ஸ்ரீராம் டாக்டர் சவுந்தரத்தின் பிரியமான பேரனாக இருந்திருக்கிறான் பட்டம் பெறும் வரை நிச்சயம் உயிரோடு இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தவர் பேரனின் கடைசி செமஸ்டர் சமயத்தில் தனது எண்பதாவது வயதில் உயிர் பிரிய நேர்கிறது. "என்னை மன்னித்துவிடு என்னால் வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் நீ சிறப்பாக தேர்வெழுத வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார் தன்னுடைய கடைசி ஆசையாக தன்னை மதுரை நகரை சுற்றி காரில் ஒரு ரவுண்டு அழைத்துச் செல்ல சொல்லி இருக்கிறார்.
எந்த நேரத்திலும் மூன்று செட் உடைகளை மட்டுமே அவர் வைத்திருப்பார்.
ஒன்றை உடுத்தியிருப்பார் ஒன்றைத் துவைத்து காய போட்டு இருப்பார் கூடுதலாக ஒரு செட் வைத்திருப்பார் ஆக மொத்தம் மூன்று செட்டுகள் துணி மட்டுமே எப்பொழுதும் வைத்திருந்தார்.
No comments:
Post a Comment