திருவனந்தபுரம் விமானநிலையமும் பத்மநாபசாமியும்
நேற்றைக்கு பத்மநாபசாமி ஆராட்டு வலத்துக்கும் பூஜைகளுக்கும் திருவனந்தபுரம் விமானநிலையம் 5 மணி நேரம் மூடப்பட்டது.
திருவனந்தபுரம் விமானநிலையம் 1932 இலேயே சர்வதேச விமானநிலையமாகக் கட்டப்பட்டது. அந்த இடம் ஆராட்டு விழா பாரம்பரியமாக நடக்கும் இடம். அந்த விமான நிலையம் கட்டும்போதே திருவாங்கூர் சமஸ்தானம் ஐப்பசி மாதம் திருவிழாக் காலங்களில் விமானநிலைய ஓடுபாதை பத்மநாபசாமி ஊர்வலமாக எப்போதும்போல எடுத்துச் செல்ல ஒப்பந்தம் ஆனது.
இந்த மரபு சம்பிரதாயத்தின் அடிப்படையில் நேற்றைக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 5 மணி நேரம் மூடப்பட்டது. விமானங்கள் இறங்கவோ புறப்படவோ இல்லை. ஊர்வலத்துக்குப் பின் பாரம்பரியமாக அங்கிருக்கும் ஹரி மண்டபத்துக்கு பத்மநாபசாமியை எடுத்துக் கொண்டு சென்று அங்கு பூஜைகளும் சடங்குகளும் நடக்கும்.
.. ஆண்டுக்கு இரண்டு நாட்கள் பத்மநாப சாமிகள் கோயிலின் சார்பில் சாமி ஊர்வலத்திற்கு விமான ஓடுதளத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது நிபந்தனை.
இன்றும் அந்த நிபந்தனையின்படி ஆண்டுக்கு இரண்டு நாட்கள் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் சார்பில் சாமிகள்உ ற்சவம் நடந்து வருகிறது.
இது திருவனந்தபுரத்தில் நடந்து வருகின்ற ஒரு நிகழ்வு.
இதேபோன்ற வழக்கம் சென்னையிலும் நடந்து வருகிறது என்பது வெளியில் தெரியாத செய்தி.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு என தெப்பகுளம் இல்லாமல் இருந்தது.
இதுகுறித்து ஆற்காடு நவாபிடம் கோயில் முக்கியஸ்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்களின் எண்ணத்தை ஏற்றுக் கொண்ட ஆர்க்காட்டு நவாப்,அந்த கோயிலுக்கு எதிரில் உள்ள இடத்தைத் தானமாக வழங்கினார்.அந்த இடத்தில்தான் தெப்பக்குளம் கட்டப்பட்டு இருக்கிறது.
இந்த நன்கொடைக்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில்
ஒவ்வொரு ஆண்டும் கோயிலுக்கும் தெப்பக்குளத்துக்கும் இடையில் இருக்கின்ற தெருவில் இந்த கோயிலின் கதவு முகரம் பேரணியின் போது சாத்தப் படுகிறது.
ஏனென்றால்,அந்த வழியாக முகரம் தொடர்பான இஸ்லாமிய ஊர்வலம் நடைபெற இருப்பதால் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடைமுறை. இரு வேறு மதங்களுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பும், நல்லிணக்கமும் கொண்டதற்கான வரலாற்றுப் பூர்வமாக அடையாளமாக இதை நாம் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment