Tuesday, November 8, 2022

#*கிராவின் நூற்றாண்டு* #*கிரா-100* *இரண்டு தொகுதிகள்*

#*கிராவின் நூற்றாண்டு* 
#*கிரா-100* *இரண்டு தொகுதிகள்*
————————————
கி.ரா.வின் நூற்றாண்டு வெளியீடாக கி.ரா.வைக் குறித்து அரசியல் தலைவர்கள், தமிழ் படைப்பாளிகள், பேராசிரியர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என பல தரப்பிலும் இருக்கிற ஆளுமைகள் வழங்கிய 160 கட்டுரைகள் அடங்கிய நூலை இரண்டு தொகுதிகளக வெளியிட இருக்கின்றேன். மொத்தம் பெறப்பட்ட 400 கட்டுரைகளில் 160 கட்டுரைகள் பல தரப்பு அறிஞர்களால் தேர்வு செய்யப்பட்டு,இறுதிப்படுத்தப்பட்டு
ள்ளது. 

கதைசொல்லி, பொதிகை – பொருநை – கரிசல் அமைப்பின் சார்பில் வெளியிடுகின்றோம். இதற்கு கவிஞர் சிற்பியும், அ.முத்துலிங்கமும் அணிந்துரை வழங்கயுள்ளனர். இதற்கு நான் வழங்கிய பதிப்புரை வருமாறு:

#*பதிப்புரை*
———————
எளிய மக்களின் கிராமிய மூப்பன், கரிசல் மண்ணின்  கதைசொல்லி
கி. ராஜநாராயணன் பற்றிய கதைகளை எப்படிச் சொல்வது? சிமிழுக்குள் அடைபட்ட பூதத்தைத் திறப்பதற்கு ஒப்பான செயல் எனவே தோன்றியது.
மழைக்குக்கூட நான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவனில்லை. அப்படி ஒதுங்கிய சிலபோதும் மழையை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்து விட்டேன் என்றவர்.
அகத்தையும் புறத்தையும் மிக நுட்பமாக அணுகி நிலத்தையும், பருவங்களையும், மக்களையும் அவர்கள் புழங்கும்சொற்களையும் அவற்றின் நுட்பமான வளமைகளையும் வாய் வழக்காறுகளில் இருந்து நமக்கு கதைகளாக்கித் தந்தவர். அவற்றின் மூலம் மரபுகளும், பண்புகளும், மறந்துபோன ஏராளமான சொற்களும், நமக்கு மொழிப்பத்தாயமாக, களஞ்சியமாக, கிராமிய வாழ்வின் தொன்மங்களாக, பூர்வீக மனிதர்களின் நம்பிக்கைகளாக, நடத்தைகளாக கிடைத்து, அவற்றுக்கு ஒரு மீட்சியையும் அளித்த ஒரு ஞானவாணியாக அவரை உணர்வதற்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது என்றால் அது மிகையாகாது. முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக நின்றவர்.
நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சொல்லகராதிகள், பல சொற்பொழிவுகள், பல்கலைக் கழகச் சந்திப்புகள், நேர்காணல்கள், பயணங்கள் என பலவற்றையும் எழுதி மக்கள் மனதில் நீங்கள் இடம்பிடித்த அபூர்வ மனிதர்.
அத்தகைய முழுவாழ்வு வாழ்ந்த படைப்பாளி குறித்து அவருடன் பழகியவர்கள், அவரை வாசித்தவர்கள், அதில் இலக்கிய இன்பம் பேசியவர்கள், பலரும் தங்கள் நினைவு களைக் கட்டுரைகளாக்கி, இந்த எளியவனின் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதித் தந்தவைகளே இத்தொகுப்பு உருவாகுதற்கான முழுமுதற் காரணங்கள்.
இங்கு என்னுடைய ஞாபகங்களில் இருந்து சில...
1967இல் இருந்து தொடங்கியிருந்த, திரு. நாராயணசாமி அவர்களின் நாடு தழுவிய விவசாயப் போராட்டங்களின் போது அதில் நான் தீவிரமாக ஈடுபட்டிருந்த நேரம். என்னுடன் கி.ரா. வும் அதில் கலந்து கொண்டார். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காலங்கள் மனதில் நிழலாடுகிறது.
அவரது கோபல்லபுரம் நாவல் தயாரான நேரம். அதை சிட்டி சிவபாத சுந்தரத்தோடு இணைந்து, காங்கிரஸ் தலைவர் திரு. சத்யமூர்த்தி அவா¢களின¢ புதல்வி, மறைந்த திருமதி. லஷ்மி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.சி., அவா்களின் தலைமையில் இயங்கிய வாசகர் வட்ட விழாவில் வெளியிடுவதில் ஒரு அணிலாகப் பணியாற்றி உள்ளேன்.
கி.ரா-வின் அறுபது வயது நிறைந்த மணிவிழாவினை மதுரை காலேஜ் ஹவுஸ் அரங்கில் கவிஞர். மீராவுடன் இணைந்து சிறப்பாகக் கொண்டாடியதும், பின் அவரது எழுபது, எழுபத்து ஐந்து, எண்பது, தொண்ணூறுகளுக்கான விழாக்களை டெல்லித் தமிழ்ச் சங்கம், தினமணி இதழும் இணைந்து 95 வயது வரையிலான கொண்டாட்டங்களை புதுச்சேரியில் (இதன் முதல் நாள் என் தாய் 98 வயதில் கிராமத்தில் காலமானர். அந்த பணிகளை முடித்து புதுவை வந்தேன்) வைத்து நடத்திய அத்தனை நிகழ்வுகளையும் ஒருங்கிணைப்பதில் பங்காற்றினேன் என்பது என் இலக்கியப் பணியின் முக்கியமான காலகட்டங்களாக உணர்கிறேன்.
ஒருமுறை கி.ரா-வின் இடைசெவல் இல்லத்திற்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவா¢களை நான் அழைத்துச் சென்றிருந்தேன். 1984 வாக்கில் வந்த அவருடன் கி.ரா பேசும்போது, இலங்கைத் தமிழ் மக்களின்மீதான தனது அக்கறைகளையும் கவலைகளையும், ஆதரவுகளையும், பிரபாகரன் அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு உளம் நெகிழத் தெரிவித்தார்.
ரசிகமணி டி.கே.சி பள்ளியைச் சேர்ந்தவன் என்ற பெருமிதமும், கு. அழகிரிசாமியை எழுத்துத் துணையாகவும் ஜீவா போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ஆன உறவும் காந்திய எளிமையும், வட்டார வழக்குச் சொல்லகராதியின் தலைமகனாகவும், தமிழ்நிலத்துக் கலாச்சாரத் தொன்ம வாழ்வியலைப் பேசுபொருளாகவும் வைத்து, நம்மிடையே இருப்பவர் போலவே கி.ரா மறைந்தும் போனார். இந்திய மொழிகள் எதிலும் இத்தகைய மக்கள் கதைசொல்லி இருக்க இயலாது.
அவரின் சமகால எழுத்தாளர்கள் தொட்டு, கவிஞர்கள், சிந்தனையாளர்கள், கல்விப்புலம் சார்ந்தவர்கள், ஆய்வாளர்கள், வேற்றுமொழி இலக்கியவாதிகள், மெய்யியல்வாதிகள், நாட்டார் வழக்காற்றுக் கோட்பாட்டாளர்கள், பின்நவீன வாதிகள் என அனைவரின் கட்டுரைகளையும் பொறுமையாக கேட்டு வாங்கிக் கொடுத்துள்ள இந்நூல், கி.ரா-வின் முழுவாழ்வுப் பணிகளுக்கான, ஆதாரமாய் விளங்குகிறது.

இந்திய இலக்கியத்தின் உயர்ந்த விருதான ஞானபீடம் விருதைப் பெறுவதற்கு எவ்வகையிலும் தகுதியான கி.ராஜநாராயணனை வாசித்தும், பழகியும் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் எழுதிச் சேர்த்த நல்முத்துகளே இக்கட்டுரைகள்.
அடியேன் அவற்றை ஒரு நூலில் கோர்த்து, இத்தமிழ்கூறும் நல் உலகத்தின் முன்பு ஒப்படைத்துள்ளேன். போக, இந்நூல் வெளிவர கைகொடுத்துதவிய கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம், பா. செயப்பிரகாசம், மாநிலக் கல்லூரி முதல்வர் கல்யாணராமன், பத்திரிகையாளர் மணா, கோவில்பட்டி மாரீஸ் போன்ற நல் உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது எனது பொறுப்பு மட்டுமல்ல; கி.ரா மீது அவர்கள் கொண்டுள்ள நேசத்தையும் இங்குக் குறிப்பிட வேண்டிய அவசியம் கருதியே!
அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்...!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
வழக்கறிஞர்  - அரசியலார் 
பொதிகை-பொருநை-கரிசல்
கதைசொல்லி.

#ksrpost
8-11-2022.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...