#*திருநெல்வேலி*
*மாஞ்சோலை*
————————————
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள் சுமார் 500 பேருக்கு மேல் வேலை நீக்கம் செய்யப்பட்டு அங்கிருந்து உடனே வெளியேற்றும்படி நிர்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்..
ஆண்டாண்டு காலமாக குறைந்தபட்சம் மூன்று தலைமுறைகளுக்கு மேல் அங்கேயே அந்தத் தோட்ட தொழிலை நம்பி உயிர்வாழ்ந்து வந்த அந்தத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பம் குழந்தைகளுடன் அவ்விடத்தை விட்டுப் பரிதாபமாகத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
பாம்பே வர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்கிற நிறுவனம்
இந்த எஸ்டேட்டை 99 வருட காண்ட்ராக்ட் இன் பேரில் நிர்வகித்து வந்தது. இப்போது அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டபடியால் தொழிலாளர்களை அவர்களின் கையறு நிலையில் வீடு திரும்பும் படிச் சொல்கிறது.
ஆனால் உண்மையில் இந்த குத்தகை அல்லது ஒப்பந்தம் 2027-8 ல் தான் முடிகிறது. ஆனாலும் ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று சொல்லி குழந்தைகள் ஆண்கள் பெண்கள் எல்லோரும் அவர்கள் வாழ்ந்த வீட்டை விட்டு அங்கே இருந்த சூழ்நிலையை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.
இந்த எஸ்டேட்டின் மொத்த பரப்பளவு ஏறத்தாழ 8573 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது என்பது ஒரு கணக்கு.
இந்த மலைப்பாங்கான பிரதேசமே அல்லது அந்த எஸ்டேடே தங்களது உலகம் என்று நம்பி வாழ்ந்த இந்த மக்கள் இப்பொழுது எங்கே போவது என்று தெரியாமல் திகைத்தபடி நேற்று மலையை விட்டு இறங்கி இருக்கிறார்கள். யோசித்துப் பார்க்கும்போது இவ்வளவு மக்களையும் இனி எந்த இடத்தில் பொருத்துவது என்பது ஒரு கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இப்படி நடந்து கொண்டிருப்பது குறித்த அக்கரையோ இந்த விஷயமோ வெளியே தெரியாதபடி இது நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் பரிதாபம். இதில் தலையிட்டு யார் ஆவண செய்யப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.
நிலம் இல்லாத ஏழைகளுக்க ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சென்ற திமுக ஆட்சியிலேயே வாக்குறுதி தரப்பட்டது. இன்னும் நான்கு ஆண்டுகளில் மாஞ்சோலை எஸ்டேட்டின் குத்தகை காலம் முடிவடைகிறது. அங்கு வேலை செய்த தேயிலை தொழிலாளிகளுக்கே ஆளுக்கு இரண்டு ஏக்கர் ஏன் பிரித்துத் தரக்கூடாது? இன்னும் நான்கு ஆண்டுகள் மீதம் இருக்கும் நிலையில் அவசரம் அவசரமாக ஏன் மக்களை துரத்த வேண்டும்?
#மாஞ்சோலை
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
15-6-2024.
.
.
No comments:
Post a Comment