Friday, June 21, 2024

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவுகள்

#கள்ளக்குறிச்சிகள்ளச்சாராயசாவுகள் 
———————————————————-
மே 2023 ல் மே 13ஆம் தேதியன்று மரக்காணம் எக்கியார் குப்பம். இன்றைக்கு கள்ளக்குறிச்சி போன்ற இடங்களிலும் நிகழ்ந்த கள்ளச் சாராய சாவுகள்  தொடர்ந்து என்னைப் போன்ற சாத்வீகமான நடைமுறையாளர்களின் மனதை அதிகம் வேதனைப்படச் செய்கிறது.

எளிய விலை மதுவிற்கு ஆசைப்பட்டு 
வருமானம் ஏதுமற்ற விவசாயக் கூலி மனிதர்கள் தங்கள் பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக காய்ச்சப்படும் இத்தகைய குறைந்த விலை சாராயத்திற்கு ஆட்பட்டு உயிர் இழந்து போகிறார்கள்.

அரசு மதுக்கடையின் விலைவாசி உயர்வுக்கும் இத்தகைய மனிதர்களின் கூலி வருமானத்திற்கு இடையே சமத்துவமின்மை நிலவுகிறது.  குறிப்பாக கவனித்தால் இவர்கள் நகர்புறக் கூலி ஆட்கள் அல்ல! குறைந்த கூலிக்கு உழைக்கும் கிராமப்புறக்கூலியாட்கள்.
 
ஆகவே அவர்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப இத்தகையக் கள்ளச்சாராய விற்பனையாளர்களை நாடுகிறார்கள். 

கள்ளச்சாராயத்தால் கண் பார்வை பறிபோனவர்கள் வாழ்நாள் முழுக்க எத்தனால்  என்று சொல்லக்கூடிய ஸ்பிரிட் அதாவது எரி சாராயத்தை போதைக்காக வாங்கிக் குடித்து இறந்து போனவர்கள் என நிகழ்ந்து வரும் மனிதமரணங்கள்  தமிழ்நாட்டில் ஒரு தொடர்கதை ஆகவே இருக்கிறது.

இப்படியான மரணங்கள் வகையில் தமிழ்நாடு அரசு குறிப்பாக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் 10 லட்ச ரூபாய் பணத்தை நஷ்ட ஈடாக அவர்களின் குடும்பத்திற்கு வழங்குகிறார்.

சரி ! தமிழ்நாட்டின் பிராந்தியப் புல்லுருவிகளின் கள்ளச்சாராய விற்பனையால் நிகழும் மரணங்களுக்கு ஏன் முதல்வர்   நஷ்ட ஈடு வழங்குகிறார்.  தேசத்திற்கும் மொழிக்கும் நாட்டிற்கும் தொண்டு செய்தும் கூட பலருக்கும் கிடைக்காத இந்தப் பணம்  கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர் குடும்பத்துக்கு மேலதிகம் கொடுக்கப்படுவதை எப்படிப் புரிந்து கொள்வது?

#சிவகாசிபகுதிகளில்பட்டாசு தொழிற்சாலையில் இறந்து போகக்கூடிய சிறுவர் சிறுமியர் அல்லது சில குடும்பங்களுக்காக இந்த அரசு வழங்கும் நஷ்ட ஈடு 50000 ஒரு அதிகபட்சம் மூன்று லட்சம்   என்று இருக்க இந்தக்கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ஏன் இவ்வளவு பணம் வழங்கப்படுகிறது?

பெரியாறு கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த போது மூழ்கி இறந்த நபருக்கு இழப்பீடு 2 லட்சம்.

தஞ்சாவூரில் அப்பர் சாமி கோவில் தேர், உயர் அழுத்த மின்சாரம் தாக்கி எரிந்து, 11 பேர் இறந்த சம்பவத்தில் இழப்பீடு 5 லட்சம்.  இப்படி பல சம்பவங்கள் .

கள்ளச்சாராய மரணத்திற்கு இழப்பீடு பத்து லட்சம்.கள்ளச்சாராய மரணத்துக்குதான் மதிப்பு அதிகம் போல.

நான் கேட்பது என்னவெனில் பட்டாசு தொழிற்சாலை மூலமாக தமிழ்நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய வருமானம் கணக்கில் கொள்ளப்படவில்லையா?இரவும் பகலும் 
அப்படியாகத் தொழில் செய்து நாட்டு வருமானத்தை பெருக்கக் கூடிய மக்களுக்கான நஷ்ட ஈடு இவ்வளவு குறைவாக இருக்கக் கள்ளச்சாராயம் குடித்து வீணில் செத்துப் போனவர்களுக்கு எதற்கு பத்து லட்சம் அறிவிக்கிறார் முதல்வர்? அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இப்படிக் கள்ளச்சாராயம் குடிக்கப் போகிறவர்களால் நாட்டுக்கு என்ன லாபம் இருக்கிறது. பட்டாசு தொழிற்சாலையில் கரு மருந்துகளுடன் வயிற்றுப் பசிக்கு உழைப்பவர்களுக்கும் கள்ளச்சாராயம் குடிப்பவர்களும் ஒன்றா? இவர்களுக்கு வரிப்பணத்தில் இருந்து இத்தனை லட்சங்கள் கொடுக்கப்பட வேண்டுமா? ஒரு வேளை நாளை ஒரு குடிகாரன் 10 லட்சம் பணம்  தன் மனைவி பிள்ளைகளுக்குத்தான் செத்துப்போனால் கிடைக்கும் என்பதற்காக அதை வாங்கிக் குடித்து இறந்து போக ஆர்வம் கொண்டால் என்ன செய்வது?

இன்ஷூரன்ஸ் பணங்களுக்காக கொலைகள் கூட நடக்கும் சூழ்நிலையில்  கள்ளச்சாராய மரணங்களில் மட்டும் இப்படி நிகழாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? 

இவர்களுக்கு எதற்கு 10 லட்சம்? 
முதல்வரின் இந்தக்
கரிசனம் அபத்தமானது! மட்டுமல்லாமல்  கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை அல்லதுஅதைக் குடிக்க போவோரைத் தண்டிக்கும் வகையில் எந்த எச்சரிக்கையும் மற்ற நிர்வாக அசிரத்தையத்தான்  குறிக்கிறது. இது ஒரு அரசு நிர்வாகத்தவறு மட்டுமல்ல மனித உயிர்களின் மீது அலட்சியமாக இருக்கும்  இந்த அரசைக் கேள்விக்கு உள்ளாக்கும்
அறங்களும் கூடியது.

இந்த அரசியலின் உண்மை முகம் இத்தகைய நிழல் வருமானங்களில் தான் அதிகாரமாகவும் நிர்வாகமாகவும் இயங்கி வருகிறது . இது ஒரு வெட்கக் கேடான சம்பவம்.

எதிர்க்கட்சிகள் இந்தச் சம்பவத்தை முன்னிட்டு  ஆளும் அரசை ராஜினாமாச் செய்யும்படி கூறுவது ஒன்றும் மிகை அல்ல. இன்னும் பல மணல்த் திருட்டு, மர கடத்தல் உட்பட தமிழக காவல்துறையை கைக்குள் வைத்துக் கொண்டு நிகழ்த்தும் மோசடியான காரணங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டியதுதான் இந்த அரசு! என்பதில்  மாற்றுக் கருத்துகள்ஏதும் இல்லை.

#கள்ளக்குறிச்சிகள்ளச்சாராயசாவுகள்

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
21-6-2024.


No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...