—————————————-
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி கொடுத்தது, 'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் எனத் தெரியவந்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்த நிறுவனங்கள், நிதியைப் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி இந்த விவரங்களை உச்ச நீதிமன்றத்திற்கு அளித்தது. அவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்தத் தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று (2024,மார்ச் 14-ஆம் தேதி) தனது இணையதளத்தில் வெளியிட்டது.
அதில் இருந்த தரவுகளின்படி, அதிகபட்ச தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனம் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் எனத் தெரியவந்திருக்கிறது. 2020-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2024-ஆம் ஆண்டு ஜனவரிக்கு இடையில் இந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
2021-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த நிறுவனம் 195 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் இரண்டு முறை ரூ.210 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களையும் வாங்கியது. இந்த ஆண்டு ஜனவரியில் ரூ.63 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியிருக்கிறது.
பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 1991-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இதன் பதிவு அலுவலகம் இருக்கிறது.
சாண்டியாகோ மார்ட்டினின் ஆரம்ப கால வாழ்க்கை குறித்த தகவல்கள் தெளிவாகக் கிடைக்கவில்லை.
மார்ட்டினின் பெற்றோர் மியான்மரில் வசித்தவர்கள். மியான்மர் நாட்டில் ஒரு சாதாரண தொழிலாளியாக அவரது வாழ்க்கை துவங்கியது. மியான்மரில் இருந்து நாடு திரும்பிய இவரது குடும்பம், கோயம்புத்தூரில் குடியேறியது. 13 வயதில் ஒரு தேநீர் கடையில் லாட்டரி சீட்டுகளை விற்க ஆரம்பித்த மார்ட்டின், விரைவிலேயே தனக்கென தனியாக ஒரு நெட்வர்க்கை உருவாக்கினார்.
1980களின் இறுதியில் கோயம்புத்தூரில் மார்ட்டின் லாட்டரி ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தைத் துவங்கினார் மார்ட்டின். தமிழ்நாடு மட்டுமல்லாமல், மார்ட்டின் கர்நாடகா என்ற நிறுவனத்தின் மூலம் கர்நாடக மாநிலத்திலும் மார்ட்டின் சிக்கிம் லாட்டரி நிறுவனத்தின் மூலம் மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலும் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் மாட்டின். இது தவிர மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிராவிலும் லாட்டரி விற்பனையில் இவரது நிறுவனமே முன்னணியில் இருக்கிறது.
இந்தக் கட்டத்தில்தான் 'லாட்டரி கிங்' என்ற பெயர் இவருக்கு வந்து சேர்ந்தது. 260-க்கும் மேற்பட்ட ஏஜென்டுகள், 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் என ஒரு பிரம்மாண்டமான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் மார்ட்டின்.
கடந்த 1990-களில் இவரது நிறுவனத்தின் இரு நம்பர் லாட்டரி, கோயம்புத்தூரில் கொடி கட்டிப் பறந்தது. லாட்டரி மோகம் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்த நிலையில் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் 2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லாட்டரியைத் தடைசெய்தது.
இருந்தாலும் பிற மாநிலங்களில் இவரது நிறுவனத்தின் செயல்பாடுகள் பிரச்சனையின்றி தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் லாட்டரி மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட், கட்டுமானம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொழுதுபோக்கு, ஜவுளி, மருத்துவம், கல்வி, மென்பொருள், விவசாயம், கட்டுமானப் பொருட்கள் போன்ற துறைகளிலும் கால் பதித்தது இவரது நிறுவனம்.
திமுக நிதி பெற்ற விபரம்..
No comments:
Post a Comment